இன்னொசென்ட்: மலையாள சினிமா சரித்திரத்தின் ஒரு ஐகானிக் அத்தியாயம் முடிவுற்றது!

இன்னொசென்ட்: மலையாள சினிமா சரித்திரத்தின் ஒரு ஐகானிக் அத்தியாயம் முடிவுற்றது!

பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னொசென்ட் காலமானார்!

பிரபல மலையாள திரைப்பட நடிகர் இன்னொசென்ட், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத் திரைப்பட உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர். சுமார் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனிப்பட்ட பாணி மற்றும் டயலாக் டெலிவரிக்காக திறமையான நடிகர் என மலையாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், உடல்நலக்குறைபாடு காரணமாக ஞாயிறு அன்று காலமானார். அவருக்கு வயது 75.

இன்னொசென்ட், ஒரு தேர்ந்த நடிகராக மட்டுமல்ல சிறந்த அரசியல்வாதியாகவும் பரிமளித்தவர். அவர், கேரளாவின் சாலக்குடி தொகுதியில் இடதுசாரிகள் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் மூலமாக 2014 முதல் 2019வரை மக்களவையின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். அத்துடன் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த நடிகர், கடந்த சில வாரங்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி ஆலிஸ் மற்றும் மகன் சோனட் உள்ளனர்.

இன்னொசென்ட்டின் உடல் கொச்சி கடவந்திரா ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், அவரது உடல் இரிஞ்சாலக்குடாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள இரிஞ்சாலக்குடா டவுன்ஹாலில் பிற்பகல் 1 மணி முதல் 3.30 மணி வரை உடல் வைக்கப்பட்டு, பின்னர் அவரது இல்லத்தில் கொண்டு செல்லப்படும்.

இறுதிச் சடங்குகள் மாலை 5 மணிக்கு இரிஞ்சாலக்குடா புனித தோமஸ் பேராலயத்தில் நடைபெறும்.

மலையாள சினிமாவில் இன்னொசென்ட்டின் பொற்காலம்!

திரைவாழ்க்கையில் தனக்கென ஒரு பாணியை செதுக்கிக் கொண்ட இன்னொசென்ட், 1985 முதல் 1990களின் இறுதி வரை மலையாள சினிமா உலகின் சிறந்த நடிகராக உச்சத்தில் இருந்தார், அங்கு அவர் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர வேடங்கள் மட்டுமல்லாது பிரியதர்ஷன், சத்யன் அந்திக்காட், ஃபாசில் போன்ற இயக்குனர்களின் சில திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் கூட நடித்தார். மலையாளத் திரைப்படங்களில் இன்னொசென்ட்டின் சிறந்த பங்களிப்பை கிலுக்கம் (பிரியதர்ஷன், 1991), 'அழகிய ராவணன்' (கமல், 1996), 'ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்' (சித்திக்-லால், 1989), 'நாடோடிக்கட்டு' (சத்யன் அந்திகாட், 1987), மற்றும் 'தேவாசுரம்' (ஐ வி சசி, 1993) போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நம்மால் இன்றும் காண முடியும். இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் வெளிவந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் இன்னும் பேசப்படுகிறது.

'களரிக்கேல் கீழ்கம்துடியில் சங்கரன்குட்டி மேனன் திரைப்படத்தில் பட்ட கஷ்டம்!

சத்யன் அந்திக்காட்டின் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த 'மழவில் காவடி' திரைப்படத்தில், 'களரிக்கேல் கீழ்கம்துடியில் சங்கரன்குட்டி மேனன்' என்ற சீரியஸ் கேரக்டரில், ஹீரோ ஜெயராமுடன் படம் முழுவதும் வரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு முதல் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த கதாபாத்திரம் அவருக்கு கேரள மாநில அரசின் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் பெற்றுத் தந்தது. ஆனால், இந்த திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயமென இன்னொசென்ட் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் டப்பிங்கின் போது மிகப்பெரிய இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார் இன்னொசென்ட். முதலில் படத்திற்கான டப்பிங்கின் போது அவரது உதடு அசைவு, படத்தின் உரையாடலுடன் பொருந்தவில்லை, கடின முயற்சிக்குப் பின் உதடு அசைவு மற்றும் உரையாடல் இரண்டும் ஒத்திசைவாக வரும்போது, திரையில் வெளிப்படும் கதாபாத்திரத்தின் உணர்ச்சி பொருந்தாமல் போய்விடும். இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து மிகச்சரியான பதத்தில் அந்தக் கதாபாத்திரத்தை முடித்து அதற்கான நியாயம் செய்யும் வரை இன்னசென்ட் விடாது போராடினார் என்று கூறப்படுகிறது. இறுதியாக, இயக்குநர் சத்யன் அந்திக்காட் அவரிடம் வந்து, இன்னொசெண்ட் இது சரியாக அமையவேண்டுமானால் நீ, மூகாம்பிகை கோவிலில் கட்டாயம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்பின் மலையாளத் திரையுலகில் இன்னொசெண்டுக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. அத்தனை திரைப்படங்களில் நடித்தார். அதிலிருந்து துவங்கியது தான் இவரது இடையறாத திரைப்பயணம். அந்தப் படம் குறித்துப் பேசும்போது, எப்போதும் போல் நகைச்சுவையாக... 'என்னைப் போய் இத்தனை கனமான வேடத்தில் ஏன் நடிக்க வைக்க வேண்டும்? இந்த வேடத்தில் வேறு யாராவது சில பிரபல நடிகர்களை நடிக்க வைத்திருக்கலாம்.' என்று நகைச்சுவையாகக் கூறுவதுண்டு.

மலையாள சினிமாவில் தமக்கென தனிப்பாணியை உருவாக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்!

இன்னொசென்ட், ஒடுவில் உன்னிகிருஷ்ணன், குதிரைவட்டம் பப்பு ஆகியோர் யாரும் பின்பற்ற முடியாத பாணியை உருவாக்கிய நடிகர்கள்" என்று சத்யன் அந்திக்காட் பின்னர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அத்துடன் "அழகிய ராவணன்' திரைப்படத்துக்கான படப்பிடிப்பின் போது இன்னசென்ட் கேமரா முன் தோன்றும் காட்சி மிக உன்னதமானது. இன்னொரு நடிகரால் அந்தக் காட்சியில் நடிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்கிறார் சத்யன் அந்திக்காட்.

தயாரிப்பாளர் அவதாரம்…

இன்னொசென்ட் 1980 களின் முற்பகுதியில் சில மலையாளப் திரைப்படங்களைத் தயாரித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் தனது முதல் அடிகளை எடுத்து வைத்தார், ஆரம்பத்தில் அவை பெரும்பாலும் மலையாள சினிமாவின் சீரியஸான ஆஃப்பீட் திரைப்படங்களாகவே இருந்தன. மலையாள இயக்குநர் மோகன் இயக்கிய 'விடா பறயும் முன்பே' (1981-ல் கேரள அரசின் இரண்டாவது சிறந்த திரைப்படமென விருது பெற்றது), 1982 ல் இயக்குநர் பரதன் இயக்கிய 'ஓரமக்காயி' (கேரள அரசின் இரண்டாவது சிறந்த திரைப்பட விருது பெற்றது).இவற்றுடன் 1983 ல் கே.ஜி ஜார்ஜ் இயக்கிய 'லேகாயுதே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்'.இது ஒரு முக்கிய திரைப்படமாக கருதப்படுகிறது ஏனெனில் இத்திரைப்படம் ஓரளவுக்கு அந்தக் காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன நடிகை ஷோபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றொரு பேச்சுண்டு, இதை இன்னொசென்ட் , டேவிட் கச்சப்பள்ளியுடன் இணைந்து தயாரித்திருந்தார்.

தயாரிப்பாளர் இன்னொசென்ட்டை நடிகராக அவதாரமெடுக்க வைத்த பாக்ஸ் ஆஃபீஸ் அட்டர் ஃப்ளாப்கள்!

அவர் தயாரித்த படங்கள் விருதுகளைப் பெற்றுத்தந்த போதும், ஆதாரப்பூர்வமாக பாக்ஸ் ஆஃபீஸில் கலெக்ஷன்கள் இன்றி தோல்வியடைந்ததைக் கண்ட இன்னொசென்ட், தயாரிப்பாளர் பதவியைக் கைவிட்டு விட்டு, மல்லுவுட்டில் தன்னை ஒரு நடிகராக தீவிரமாகக் களமிறக்க முடிவு செய்தார், ஒருவகையில் மதிப்புக்குரிய தயாரிப்பாளர் இன்னொசென்ட் திறமைமிகு நடிகர் இன்னொசென்ட் ஆக உருவானது இப்படித்தான். இப்படியாக 1972-ம் ஆண்டு வெளியான ‘நிருதஷாலா’ படத்தில் நடிகராக அறிமுகமான இன்னொசென்ட் , அடுத்த ஆண்டு ‘கால்பந்து சாம்பியன்’ படத்தில் வெள்ளித்திரையில் முதல்முறையாகத் தனது திரைப்படத்துக்கான வசனங்களையும் தானே உச்சரிக்கத் தொடங்கினார்.

இன்னொசென்ட்டின் ஆரம்ப கால வாழ்க்கை…

1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி திருச்சூருக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான இரிஞ்சாலக்குடாவில் பிறந்த இன்னொசென்ட் வரீத் தெக்கேத்தலா, எட்டு குழந்தைகளுடன் கூடிய அந்தக் குடும்பத்தில் பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார், அவரது ஆரம்பகால வாழ்க்கையில் பெரிதாக எழுதுவதற்கு என்று எதுவும் இல்லை. பள்ளிப் படிப்பை சமாளிக்க மிகவும் சிரமப்பட்ட அவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

ஒரு அரசியல்வாதியாக களம் கண்ட அனுபவங்கள்…

பின்னர் அவரை கேரள அரசியல் ஈர்த்துக் கொண்டது, 1979 இல் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இரிஞ்சாலக்குடா நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரிதாகப் பின்புலம் எதுவுமற்று ஏழைக் குடும்பத்தில் பிறந்து கல்வி மறுக்கப்பட்ட மனிதராக இருந்தும் கூட அரசியல், பிறகு அங்கிருந்து சினிமா என்று வெகு திறமையாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வந்த இன்னொசென்ட் இதுவரை 'நான் இன்னொசென்ட்' மற்றும் 'கேன்சர் வார்டிலே சிரி'(தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இன்னொசென்ட், அந்த அனுபவங்களை நகைச்சுவையாகப் பதிவு செய்திருக்கும் புத்தகம்) புத்தகங்கள் உட்பட ஐந்து புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளராக சாகித்ய அகாடமி விருது!

தனது நினைவுகளை நகைச்சுவையாக முன் வைத்து “இன்னொசென்ட் எழுதிய “இரிஞ்ஞாலகுடக்கு சுட்டும்” எனும் புத்தகம் அதன் ஹியூமர் சென்ஸுக்காக 2020 ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் இரங்கல் குறிப்பு…

"தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத முத்திரை பதித்த கலைஞரும், இடதுசாரி ஆதரவாளருமான இன்னொசென்ட், எல்.டி.எப்.யின் வேண்டுகோளின் பேரில் லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலில் வெற்றியும் பெற்றார். நாடாளுமன்றத்தில் கேரளாவின் கோரிக்கைகளை திறம்பட வெளிப்படுத்திய இன்னொசென்ட்டின் அரசியல் செயல்பாடுகளை மாநிலம் நன்றியுடன் நினைவு கூர்கிறது” என்று முதல்வர் பினராயி விஜயன், இன்னொசென்ட் மறைவை ஒட்டி தமது நினைவேந்தலில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் இரங்கல் பகிர்வு…

"பல தசாப்தங்களாக நம்மை சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்த இன்னசென்ட் இப்போது ஒரு நினைவு. கொடிய நோயை எதிர்த்து துணிச்சலுடன் போராடி, தனது செயல்களால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தைரியத்தை அளித்தவர். இன்னசென்ட் உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாதவர்." என கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கலாச்சாரத்துறை அமைச்சரின் இரங்கல் செய்தி…

"மலையாளத் திரையுலகில் இன்னொசென்ட் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து, பக்கத்து வீட்டுக்காரனாக நம்மைத் தேடி வந்த அந்த நடிகர், இப்போது நம் நினைவுகளில் என்றும் அழியாமல் இருப்பார்" என்று கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் கூறியுள்ளார்.

சக நடிகர்களின் இரங்கல் செய்தி…

விலை மதிப்பில்லாத ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம் என்கிறார் பாஜகவின் குஷ்பு சுந்தர்.

நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தமது இரங்கல் பதிவில், "சினிமா வரலாற்றில் ஒரு ஐகானிக் அத்தியாயத்தின் முடிவு இது. நிம்மதியாக ஓய்வெடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொழி பேதமின்றி சகல ரசிகர்களையும் ஈர்த்துக் கொண்ட அப்பாவி முகத்துக்குச் சொந்தக்காரர்!

அடிப்படையில் இன்னொசென்ட் மலையாள நடிகர் என்ற போதும் அவருக்கான ரசிகர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியா முழுவதுமே பரவியிருந்தார்கள். அவரது வெகுளித்தனமான அப்பாவி முகம் ஏராளமான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்திருந்தது. இன்றைய அவரது மரணம் கேரளத் திரையுலகிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமான இன்னொசென்ட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

சென்று வாருங்கள் இன்னொசென்ட்!

நோயுடனான போராட்டத்தைக்கூட நகைச்சுவை கலந்து சொல்லத் தெரிந்த தீரமான ஆத்மா நீங்கள், சென்று வாருங்கள் இன்னொசென்ட்! நீங்கள் மறைந்தாலும், உங்களது கதாபாத்திரங்கள் வாயிலாக என்றென்றைக்குமாக எங்களுடன் நீடித்து இருப்பீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com