முற்றுகிறது முகத்திரை போராட்டம்!

முகத்திரை போராட்டம்
முகத்திரை போராட்டம்

ஹிஜாப் என்பதற்குத் திரை என்று அர்த்தம்.  மரபுப்ப​டி ஹிஜாப் என்பதை முஸ்லிம் பெண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஒரு முக்காடு எனலாம்.

ஹிஜாப் விஷயத்தில் இரண்டு எதிரெதிர் போராட்டங்களை சமீபத்தி​ல் சந்தித்து வருகிறோம்! 

‘ஹிஜாப் அணிந்து வரக்கூடாது.  அது பள்ளிச்சீருடையைச் சேர்ந்தது இல்லை’  என்று ஒரு கர்நாடக மாநிலக் கல்லூரியில்  நிர்வாகிகள் கண்டிப்பு காட்ட, அதற்கெதிராக போராட்டம் நடந்தது.  ‘ஹிஜாப் என்பது எங்கள் மத கலாச்சாரம்.  அதைப் பின்பற்றுவதைத் தடை செய்யக்கூடாது’ என்று இஸ்லாமிய அமைப்பினர் குரல் கொடுத்தனர்.        

ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்​லூரி முதல்வர் அனுமதி மறுத்ததாகக் கூறி எட்டு முஸ்லிம் மாணவிகள் கல்லூரியின் வாசலில் போராட்டம் நடத்தினர்.

ஆனால் முஸ்லிம் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்த, அதை எதிர்த்து போராட்டம் வெடித்திருக்கிறது.

ஹிஜாப்
ஹிஜாப்

ஈரானில் ஒன்பது வயதுக்கு மேற்பட்ட அத்தனை பெண்களும் ஹிஜாப் அணிந்தாக வேண்டும் என்று சட்டம் நடைமுறையில் உள்ளது.    அதுமட்டுமல்ல, பெண்கள் இப்படி ஆடை அணியும் விதத்தைக் கண்காணிப்பதற்காக அங்கு சிறப்புப் பிரிவு போலீசார் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.  'காஸ்த் எர்ஷாத்' (அறநெறிக் காவலர்கள்) என்று அழைக்கப்படும் இந்தக் காவல்காரர்கள் பொது இடங்களில் சுற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் அந்நாட்டில் மாஷா அமினி என்ற இளம் பெண் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரை சிறப்புப் படை போலீஸ் சுற்றி வளைத்தது.                  

'முறையாக ஹிஜாப் அணியவில்லை' என்று குற்றம் சாட்டி அவரைக் கைது செய்து போலீஸ் காவலில் வைத்தார்கள்.  அங்கே அவர் கடுமையாக தாக்கப்பட, அவர் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று இறந்துவிட்டார்.  இதைத்தொடர்ந்து ஈரானில் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

அதையடுத்து ஈரானில் இன்னொரு இளம்பெண்ணும் மரணம் அடைந்திருக்கிறார்.  இவர் பதினாறே வயதான ராப் பாடகர்.  பெயர் நிகா ஷாகாரமி. இவர் திடீரென்று மாயமாக மறைந்தார்.  கடைசியாக அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டது ஒரு தோழியிடம்.  அவரிடம் ' நம் நாட்டின் பாதுகாப்புப் படையினர் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார். 

அடுத்த சில நாட்களில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சீர்திருத்த மையத்தில் பிணவறையில் அவர் உடல் கிடந்தது.  அடையாளம் காண வரவழைக்கப்பட்ட அவர்கள் குடும்பத்தினர் அந்த உடல் நிகாவுடையதுதான் என்றும் அவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார்கள்.  நிகா பாதுகாப்புப் படையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அவர் ஹிஜாப் அணிவதை விரும்பாதவர் என்றும் இதன் காரணமாகவே அவருக்கு இந்த கதி நேர்ந்து இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.  அவரது இறுதி ஊர்வலத்தில் கலவரம் நேரிடும் என்று கருதி அவரது உடலை ரகசியமாகத் திருடி வேறொரு இடத்தில் புதைத்து விட்டார்கள் அரசு அதிகாரிகள். இதனால் ஈரானில்  அரசுக்கெதிரான போராட்டம் மேலும் வீரியமடைந்துள்ளது.  ஒரு போராட்டத்தில் ஹனானேன் என்ற இளம் பெண் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் போராட்டங்களில் எண்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.  அந்த நாட்டில் இணைய சேவைகளை அரசு  முடக்கியுள்ளது. 

ஹிஜாப் ஊர்வலம்
ஹிஜாப் ஊர்வலம்

ஈராக்கில்  தலைநகர வீதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் கருப்பு உடை அணிந்து  ஊர்வலம் நடத்துகின்றனர்,  போராடி வருகின்றனர். அரசுக்கெதிரான கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.  சர்வாதிகாரம் ஒழிக என்று உரத்துக் கத்துகிறார்கள்.  தங்கள் ஹிஜாபை  கிழித்து பெருங்கோபத்துடன் அதை எரித்தும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.  

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த அபீர் அல் சலானி என்ற பெண் உறுப்பினர் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று முழக்கமிட்டார்.  அப்போது தன் தலை முடியின் ஒரு பகுதியை அவர் வெட்டிக் கொண்டது அதிர்ச்சிச் செய்தியானது.

ஹிஜாப் தொடர்பான நேரெதிர் காரணங்களுக்காக இந்தியாவில் முன்பும், ஈரானில் இப்போதும் போராட்டங்கள் உண்டாயின.  ஒன்று, ‘மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவது எங்கள் உ​ரிமை.  அதில் நிர்வாகம் தலையிடக்கூடாது’ என்பது.   ‘மத மரபுகளை மாற்றியமைத்துக் கொள்வது எங்கள் உரிமை.  இதில் அரசு தலையிடக்கூடாது’ என்பது மற்றொன்று.  என்றாலும் இவை இரண்டும் ஒரு கோணத்தில் ஒன்றையே உணர்த்துகின்றன.  ‘உடை விஷயத்தில் எங்களைக் கட்டாயப் படுத்தாதீர்கள்’ என்பதே அவர்கள் கோரிக்கை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com