நூற்றாண்டுகளாக   நடக்கும்  திருவிழா இது

தாய்லாந்தின் திருவிழாக்கள்
சாம்கோங் கோயில்
சாம்கோங் கோயில்

அலகு குத்திக்கொள்ளும் திருவிழாக்கள்  செய்தியில்லை. . . ஆனால்,  இந்த திருவிழா நடப்பது தமிழ்நாட்டில் அல்ல, தாய்லாந்தில் என்பது தான் செய்தி.

தாய்லாந்தின் இயற்கை எழில்மிக்க சுற்றுலா தலங்களில் புக்கட் தீவும் ஒன்றாகும். இந்தத் தீவு இரண்டு பிரம்மாண்ட பாலங்கள் மூலம் தாய்லாந்தின் இதர பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டயா தீவு போல இங்கே கேளிக்கைகள்,  நைட் கிளப்கள்,  பார்கள் அதிகம் கிடையாது.  அழகான கடற்கரை விடுதிகளில்  விடுமுறையைக் கழிக்கவரும் தம்பதியர்களும் குடும்பங்களும் தான்  இங்கு வரும் விஸிட்டர்ஸ்.

இத்தீவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். எனினும் அங்கு சீன வம்சாவளியினரும் கணிசமாக வாழ்கின்றனர். அங்குள்ள சீனர்களின் புனிதத் தலமான சாம்கோங் கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபரில் 9 நாட்கள் “சைவத் திருவிழா” கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின்போது பெரும் திரளான பக்தர்கள் அலகு குத்தியும் தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். பழங்காலத்தில் கன்னத்தில் கத்தி, கம்பிகளை மட்டுமே அலகாக குத்திய பக்தர்கள் தற்போது நவீன காலத்துக்கு ஏற்ப துப்பாக்கிகளை அலகாக குத்துகின்றனர்.

தாய்லாந்தின் புகழ்பெற்ற ‘9 பேரரச தெய்வங்கள்’ திருவிழாவில்தான் இந்த சடங்கு நடைபெறுகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் “அசைவ” உணவைத் தவிர்த்து “சைவ”  உணவை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். 

பின்னர், துரதிர்ஷ்டத்தை நீக்குவதற்காக தங்கள் உடலை அலகினால் துளைத்து கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர் நூற்றாண்டுகாலப் பழைமை வாய்ந்த இந்த சடங்குகளில், தற்போது நவீன பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகின்றன. 

தாங்கள் குத்திக்கொள்ள விரும்பும் அலகுகளை பக்தர்களே தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ உதவிக்கு செவிலியர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவர். அலகுகள் குத்தப்பட்டபின்னர் தண்ணீர் உள்பட எதுவும் சாப்பிடக்கூடாது. இந்த சமயத்தில், உணவும் நீரும்தான் பெரும் சவாலாக இருந்தாலும் ஆண்டு தோறும் பங்குகொள்ளும் பக்தர்கள் அதிகரிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com