ஆகஸ்ட் 07 - தேசிய கைத்தறி தினம் - கைத்தறி நெசவுக்குக் கை கொடுப்போம்!

ஆகஸ்ட் 07 - தேசிய கைத்தறி தினம் - கைத்தறி நெசவுக்குக் கை கொடுப்போம்!

வீன காலத்தில் எண்ணற்ற ரகங்களில் ஆயிரக்கணக்கான வடிவமைப்பில் ஆடைகள் நமக்கு கிடைத்த வண்ணம் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் மவுசு குறையாமல் இருப்பது கைத்தறி ஆடைகளே என்று சொன்னால் மிகையாகாது.

காலங்கள் மாறினாலும் அறிவியல் புரட்சி நடந்தாலும் உலகத்தின் பார்வையில் விவசாயம் அடுத்து நெசவே இந்தியாவின் அடையாளமாக இருக்கிறது. தங்கள் உடல் உழைப்பினால் நெசவாளர்கள் உருவாக்கும் தூய கைத்தறி ஆடைகளுக்கு விசைத்தறியினால் பெருமளவில் உருவாகும் நவீன ஆடைகள் நிகராகாது எனலாம். இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் கைத்தறி நெசவுத்தொழில் முக்கியத்துவம் பெற்ற தொழிலாக இருக்கின்றது. கொங்கு மண்டலங்களான கோவை சேலம் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு புகழ் பெற்றவைகளாக விளங்குகின்றன.  இந்த பகுதிகளில் இருந்து கைத்தறி மூலம் உருவாகும் ஆடைகள் வெளிமாநிலம் மட்டுமின்றி  வெளிநாடுகளிலும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு பெரும் வணிகமாக இருந்து வருகிறது.

கோடையின் வெப்பத்திலிருந்து நம் உடலை பெருமளவில் பாதுகாக்க உதவுவது கைத்தறி ஆடைகளே. கோடைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் அணிய ஏற்றவையும் கைத்தறி ஆடைகளே. ஆனாலும் மேனாட்டு வழி வந்த விசைத்தறி மோகத்தில் இன்று கைத்தறிகள் சற்று நலிவடைந்து வருகின்றன என்கிறார்கள் கைத்தறி நெசவாளர்கள்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த நெசவாளர் சீனிவாசன் சொன்னது.

     “ விசைத்தறிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட காரணத்தினால் உண்மையான கைத்தறியின் விலை அதிகமாகிவிட்டது. எனவே, அதை விரும்புபவர்கள் குறைந்து வருகிறார்கள்.  அசல் கைத்தறிகளின் இடையில் போலியாக விற்பனை செய்யப்படும் தரமற்ற ஆடைகளும் இருப்பது இன்னொரு காரணமாகிறது. மக்கள் இதனால் பெரிதும்  ஏமாற்றம் அடைகிறார்கள். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளில் விசைத்தறி ரகங்கள், கைத்தறி ரகங்கள் என இரு பிரிவுகளை ஏற்படுத்தினால், மக்கள் இது போன்ற போலிகளை வாங்காமல் தவிர்க்க முடியும். குறிப்பாக எது கைத்தறி என்பதை கண்டறிவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் இரக ஒதுக்கீடு சட்டத்தை இன்றைய காலத்திற்கேற்ப மறுசீராய்வு செய்வது அவசியமாகிறது.

போலி ரகங்களை விற்பனை  செய்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பாரம்பர்ய மிக்க கைத்தறி ரகங்களுக்கு மக்களிடையே இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைவரையும் கைத்தறி நெசவுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். நெசவுக்கு உகந்த பகுதிகளைக் கண்டறிந்து அங்கு பயிற்சிப்பட்டறைகள் கொண்டுவந்து நெசவை இளைஞர்களிடமும் அறிமுகப்படுத்தி, ஊக்கப் படுத்தினால் எதிர்காலத்தில் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் அடையும் “ என்கிறார்.

நாட்டின் பாரம்பரியமான கைத்தறி நெசவுத் தொழிலையும் அதனை நம்பி வாழும் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் “தேசிய கைத்தறிவு தினம்” கடைபிடிக்கப்படுகிறது . மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் துவங்கப்பட்ட சுதேசி  இயக்கத்தின் கொள்கை உள்நாட்டு தொழில்களை ஆதரித்து அதன் உற்பத்தி பொருட்களை மட்டுமே மக்கள் வாங்கி பயன்படுத்துவதை ஊக்குவிப்பது ஆகும். அன்று, பிரிட்டிஷ் அரசாங்கத்தால்  இறக்குமதி செய்யப்பட்ட ஜவுளித்துணைகளை புறக்கணித்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்தறி. ஆடைகளுக்கு  முக்கியத்துவம் தருமாறு மக்களை அறிவுறுத்தினர். சுதந்திரப் புரட்சிக்கு அடித்தளமானது சுதேசி இயக்கம். ஆகவேதான் அந்த சுதேசி இயக்கம்  உருவான நாளை நினைவு கூறும் விதமாகவும்  கைத்தறி ஆடைகள் அணிய மக்களை ஊக்குவிக்கவும்  2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசியக் கைத்தறித்தனமாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம்! நம் பாரம்பர்யத்தை காப்பாற்றுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com