துணிவு ஹீரோ அஜித்தின் 30 ஆண்டுகால திரைப்பயணம் ஒரு பார்வை!

துணிவு ஹீரோ அஜித்தின் 30 ஆண்டுகால திரைப்பயணம் ஒரு பார்வை!

தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவிலும் எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது என்றால், அது படத்தின் ஹீரோவை எல்லா காலகட்டத்தில் இளமையுடன் காண்பிப்பதுதான். தலைமுடிகூட நரைக்காமல் தற்போதும் பல முன்னனி ஹீரோக்கள் புதுமுக நடிகைகளுடன் டூயட் பாடுவதுண்டு. ஆனால், இதுபோன்ற எந்த சிறைகுள்ளும் சிக்கிக்கொள்ளாமல் முழுதாக நரைத்த தலைமுடி, தடியுடன் திரையில் தோன்றும் துணிச்சல் ஒரு நடிகருக்கு உள்ளதென்றால், அவர்தான் துணிவு படத்தின் ஹூரோவான நடிகர் அஜித்குமார்.

தமிழ் சினிமாவில் உழைப்பால் உயர்ந்தவர் என புகழப்படும் நடிகர் அஜித்தின் 61வது படமாக துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பிறகு தன்னுடைய ரேசர் பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒரு சுற்று வந்தார் அஜித். அதன்பிறகு,உலகம் முழுவதும் ரேசர் பைக்கை சாகச பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பைக் சுற்றுலா நிறுவனத்தையும் தற்போது தொடங்கியுள்ளார் அவர்.

அஜித்தின் மறுபக்கம்

அஜித் என்பவர் ஒரு முன்னணி நடிகர், நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும், நிறைய மக்களின் மனங்களையும் வென்றிருக்கிறார் என்பது பலரும் அறிந்த கதை. ஆனால், அந்த உச்சத்தை அடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன், ஒவ்வொரு நொடியையும், தன்னை தானே அவர் எப்படி செதுக்கிக்கொண்டார் என்பது குறித்து, யாரும் அறிந்துகொள்ளாத ஆயிரம் பக்கங்கள் உண்டு. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, அஜித்தின் குடும்பத்தையும் வரவேற்றது. ஹைதராபாத்தில் இருந்து அஜித் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அஜித்தின் சகோதரர்களான அனுப் குமார் மற்றும் அணில் குமார் ஆகியோர் கல்வியில் சிறந்து விளங்கினர். ஆனால், சகோதரரர்களை ஒப்பிடுகையில் அஜித் படிப்பில் சற்று குறைவுதான்

எனினும் பள்ளிக்காலத்தில் தேசிய மாணவர் படை, மலையேற்றம், மோட்டார் பைக்குகள் மீது அதிக ஈடுபாடு காட்டினார். எனினும், ஆசான் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது தன்னுடைய படிப்பை பாதியிலேயே கைவிட்டார் அஜித். தனக்கு மோட்டார் பைக்குகள் பிடிக்கும் என்பதால், தன் சகோதரருடைய நண்பரின் உதவிக்கொண்டு Enfield motorsல் பயிற்சி மாணவராக சேர்ந்தார். சில மாதங்களுக்குப்பின் ஈரோடு சென்று ஜவுளித் தொழிலிலும் ஈடுபட்டார். ஒரு வியாபாரியாக வெளிநாட்டு டீலர்களை சந்திக்க வேண்டியிருந்ததால், அதன் மூலம் சுலபமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார். இதற்கிடையே, பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி விளம்பரங்களில் மாடலாக நடிக்க வாய்ப்பும் வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அஜித். அதன் மூலமே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

அஜித்தின் முதல் படம் அமராவதியா?

இன்று உச்ச நட்சத்திரம், பெரிய பட்ஜெட் படங்கள் என அஜித்தின் கேரியர் உயர்ந்து விட்டாலும், அதெற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி 1991ம் ஆண்டு வெளிவந்த “என் வீடு என் கணவர்” திரைப்படம் தான். இயக்குநர் செண்பக ராமன் இயக்கிய இந்த படத்தில் பள்ளி மாணவனாக நடித்தார் அஜித். இதுவே அவர் வெள்ளித்திரையில் தோன்றிய முதல் திரைப்படம். ஆனால், அஜித் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் தெலுங்கில் தான். 1992ம் ஆண்டு, தயாரிப்பாளர் பூர்ண சந்திர ராவின் தெலுங்குத் திரைப்படமான பிரேம புஸ்தகம் என்ற படத்தில் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார் அஜித்.

அஜித்தின் முதல் பட வாய்ப்பை உருவாக்கியதே பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். ஒருமுறை ஹெர்குலஸ் சைக்கிளின் விளம்பர படப்பிடிப்பு நடந்தது. அதில் நடித்த அஜித்தை பாராட்டிய பி.சி.ஸ்ரீராம் “சினிமாவுக்கு டிரைப் பண்ணு, நீ பெரிய ஆளா வருவ” என உற்சாகப்படுத்தினார். அதன்பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் அறிமுகம் கிடைத்தது. ஆனால், அஜித்தைவைத்து மணிரத்னம் எடுக்கவிருந்த படம் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது தான், தான் தமிழில் 'அமராவதி' படத்திற்கு புதுமுக நாயகனை தேடினார் இயக்குநர் செல்வா. போட்டோவை பார்த்ததுமே செல்வாவுக்கு அஜித்தை பிடித்துவிட்டது. உடனே படபிடிப்பும் தொடங்கிவிட்டது.

அதன்பிறகு கே.சுபாஷ் இயக்கத்தில் பவித்ரா பட வாய்ப்பு கிடைத்தது 1994 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் பாசமலர்கள் திரைப்படத்தில் அஜீத் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு இன்று இரு துருவங்களாக கருதப்படும் விஜய்யும் அஜித்தும், ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் கைகோர்த்து நடித்தனர். எனினும், இந்த படங்கள் எதுவும் அஜித்திற்கு பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

”ஆசை நாயகன் அஜித்”

1995ம் ஆண்டு, மணி ரத்னம், ஸ்ரீராம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய ஆசை திரைப்படம் தான் அஜித்தின் சினிமா வாழ்க்கையிலேயே முக்கியமான படமாக அமைந்தது. ”ஆசை நாயகன் அஜித்” என்கிற பட்டத்தையும் கொடுத்தது. அன்று தமிழ் சினிமாவில் அஜித்திற்கு தொடங்கிய வெற்றிப்பயணம் தான், காதல் மன்னன், தீனா, சிட்டிசன், வரலாறு, மங்காத்தா, விஸ்வாசம், வலிமை, துணிவு வரையிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவருக்கு கொடுத்திருக்கிறது. எஸ்.ஜெ.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் என இன்று முன்னணி இயக்குநர்களாக இருப்பவர்களை அறிமுகப்படுத்தியதும் அஜித்தான்.

உண்மையில் அஜித்திற்கு நடிப்பை விடவும், வேறு ஒரு துறையில் தான் சூப்பர்ஸ்டாராக வலம்வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால், வாகனங்கள் தொடர்பான ஏதேனும் ஒரு பணியைத் தான் அஜித் செய்திருப்பார். 2004 ஆம் ஆண்டில், British Formula 3 Scholarship Class பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்ததை உலகமே ஆச்சர்யத்துடன் பார்த்தது. படங்களிலும், பயிற்சியிலும் கவனம் செலுத்தி வந்த அஜித், தனது அறிவாற்றலை மாணவர்களுக்கும் கடத்தி, சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். 2019ம் ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். இதுஒருபுறம் என்றால், மருபுறம் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார் அஜித். 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, ஆறு பதக்கங்களை வென்று அசத்தினார். இத்தனையையும் திறம்பட செய்பவரை யாரால் தான் ரசிக்காமல் இருக்க முடியும். அப்படி அவரை அணு அணுவாக ரசிக்கும் ரசிகர்களை எப்போதும் மதிக்க தெரிந்தவர் அஜித். அஜித்தின் வலிமையே அவரது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கைதான் அவரை எந்த நிலையிலும் துணிவு நாயகனாகவே வைத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com