சிறையில் மணீஷ் சிசோடியா!

சிறையில் மணீஷ் சிசோடியா!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுத்துறையினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டுள்ள தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தில்லி மக்களிடையே மணீஷ் சிசோடியா மிகவும் பிரபலமாக இருந்தது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பொறுக்கவில்லை. இப்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் அவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

தங்களைவிட மக்களிடையே செல்வாக்கு பெற்ற அரசியல்தலைவர்களையும் அவர்களது கட்சியையும் நசுக்கி பழிவாங்குவதுதான் மத்திய ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது.

தில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் அரசு கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் ஆம் ஆத்மி அரசுக்கு மக்களிடையே செல்வாக்கு பெருகி வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால் வளர்ச்சியை நோக்கி பயணிக்கலாம் என்று சொல்லிவரும் மோடி அரசு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தாமல் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் பிளவு அரசியலை நடத்துவது வேதனைக்குரியது.

மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டு என்ன? தண்டனைக்குரிய எந்த குற்றத்தை அவர் செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர். அவர் மெளனமாக அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாலேயே அவரை குற்றவாளி என்று முத்திரை குத்திவிடமுடியாது. அவர் வாய்திறந்து ஏதாவது கூறினால் அதை வைத்தே அவரை வழக்கில் சிக்கவைக்கலாம் என்று போலீஸார் நினைப்பதாகவே தோன்றுகிறது.

மேலும் சிசோடியா ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசிகளை வைத்திருந்ததாகவும், அதிலிருந்த தகவல்களை அவர் அழித்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுவும் ஊகத்தின் அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு அலைபேசிக்கு மேல் வைத்திருக்க்க்கூடாது என்றோ, அலைபேசி அழைப்புகளை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும் என்றோ எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

ஆம் ஆத்மி கட்சி மெல்ல மெல்ல பல்வேறு மாநிலங்களில் தனது எல்லையை விரிவுபடுத்தி தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி, தோல்விகளை சந்தித்து ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை.

இதனால்தான் புலனாய்வு அமைப்புகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக ஆம் ஆத்மி கட்சியின் மூளையாகச் செயல்படும், தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பக்கபலமாக இருந்துவரும் மணீஷ் சிசோடியாவை குறிவைத்துள்ளனர். ஏதாவது ஒரு வகையில் அந்த கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம் எனத் தெரிகிறது.

மணீஷ் சிசோடியாவை கைது செய்ததற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்பது மக்களுக்கு இன்னும் தெரியவரவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் தொடர்பான ஊழல் விவகாரத்தில் அவர் சிக்கியுள்ளார் என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகள் கவிதா எம்.பி. தொடர்புடைய ஒரு குழுவினர் பலனடையும் வகையில் மதுபானக் கொள்கையை திட்டமிட்டு வகுத்ததாக சிசோடியா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எந்த ஒரு கொள்கை வகுக்கப்பட்டாலும் அதில் ஏதாவது சலுகை கிடைக்குமா என்று தொழிலதிபர்கள் எதிர்பார்ப்பதும், ஆதாயம் கிடைக்குமா என்று அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பதும் வழக்கமானதுதான். மோடி நிர்வாகம் இதுபோன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கவில்லை என்றாலும் அதிகார வர்க்கத்தினரின் துணை இல்லாமல் அதானி போன்றவர்கள் தலையெடுத்திருக்க முடியாது.

மணீஷ் சிசோடியா அலுவலகம், வீடு மற்றும் வங்கிகணக்கு, வங்கி லாக்கர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட போதிலும் எந்த முக்கிய ஆவணமும் சிக்கியதாகத் தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் பேரம் நடந்திருக்கலாம். அதில் கிடைத்த பணம் கட்சிக்கு சென்றிருக்கலாம். அனைத்து அரசியல்கட்சிகளும் கட்சியை நடத்திச் செல்வதற்கு பணம் தேவைப்படுகிறது. பா.ஜ.க.வுக்குகூட தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் கிடைக்கிறது.

கர்நாடக மாநிலத்தில்கூட பா.ஜ.க. அரசு 40 சதவீத கமிஷன் பெறுவதாக ஒப்பந்ததாரர்களே குற்றஞ்சாட்டியுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகன் வீட்டிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மணீஷ் சிசோடியா, பத்திரிகைத்துறையில் பட்டமேற்படிப்பு முடித்தவர். ரேடியோ ஜாக்கியாகவும், பத்திரிகையாளராகவும், செய்தி தயாரிப்பாளராகவும் இருந்தவர். 2011 ஆம் ஆண்டு சமூக ஆர்வலரான அண்ணா ஹஸாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஏற்படுத்தியபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர்தான் மணீஷ் சிசோடியா. பின்னர் 2012 ஆம் ஆண்டில் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார். 2013 ஆம் ஆண்டில் அந்த கட்சி தில்லியில் ஆட்சியைப் பிடித்தது. குறைந்த நாட்களே ஆட்சியில் இருந்தது. வெறும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் உருவான கட்சி நீண்டநாள் நிலைக்காது என்று பலரும் கருதினர். ஆனாலும் 2015 தேர்தலில் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. பின்னர் மீண்டும் 2020 இல் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

மணீஷ் சிசோடியா, தனிப்பட்ட முறையில் லஞ்சம் பெற்றதாக அறியப்படவில்லை. அதற்கு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஒருவேளை அவர், ஆதாய நோக்கத்துடன் பணம் பெற்றுக்கொண்டு அதை கட்சியிடம் கொடுத்திருந்தால், அது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com