மீண்டு எழுவாளா தவ்வை?

ஜேஷ்டா தேவி வழிபாடு குறித்த ஒரு வரலாற்றுப் பார்வை!
மீண்டு எழுவாளா தவ்வை?

தொகுப்பு: கார்த்திகா வாசுதேவன்

சில வாரங்களுக்கு முன்பு நாளிதழ்களில் தொடர்ந்து ஒரு செய்தி கவனத்தை ஈர்த்தது. அது தவ்வை வழிபாடு குறித்த செய்தி. பழந்தமிழர் பண்பாட்டில் பல்வேறு பெண் தெய்வ வழிபாடு இருந்தது அனைவரும் அறிந்த செய்தியே! ஆயினும் இந்த தவ்வை வழிபாடு என்பது நமது புரிதல் அடிப்படையில் நேர்ந்த மிகப்பெரிய தப்பர்த்தமாகத் தோன்றியதால் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அவர்களின் கட்டுரை அந்த எண்ணைத்தை ஈடேற்றுவதாக இருப்பதால் அதை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.

இந்தக் கட்டுரையின் அவசியம் யாதெனில், மூதேவி அதாவது மூத்த தேவி வழிபாடு குறித்த ஒரு அடிப்படைப் புரிதலை உருவாக்குவதே! இந்த ஒரு கோட்பாட்டில் மட்டுமே புரிதல் வேண்டும் என்பதில்லை. காலப்போக்கில் மூலப்பொருளில் இருந்து விலகி இது போன்று பல விஷயங்களை, பல தமிழ் வார்த்தைகளை, வழிபாட்டுக்கூறுகளை நாம் மிக எதிர்ப்பதமாகவே புரிந்து கொள்ளத் தலைப்பட்டிருக்கிறோம். அந்தக் கற்பிதங்களில் இருந்தும் தவறான புரிதல்களில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அத்துடன் வரலாற்று ரீதியாகவும் இது முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு ஆராய்ச்சியே என்பதால் இன்றைய மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு இதைப் பற்றிய புரிதலை உருவாக்குவதும் நம் கடமை.

தவ்வை வழிபாடு மீண்டெழ வேண்டும்!

“தவ்வை. இந்தச் சொல்லையும் இத்தெய்வத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தியது திருக்குறள். மாமுகடி, சேட்டை, கேட்டை என்றெல்லாம் அழைக்கப்படும் இவள் வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படுகிறாள்.

தமிழர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் தவ்வைக்குத் தனி இடமும் சிறப்பும் உண்டு. பெருத்த வயிறும் சரிந்த மார்பும் தாய்மையின் வளமையின் அடையாளங்கள். சிற்பங்கள் சிலவற்றில் இவள் செல்வக் குடத்துடன் காட்சி தருகிறாள். செல்வத்துக்கும் அதிபதி இவளே. இயற்கையில் பெரும் சக்தியாகவும் இவள் கருதப்பட்டாள்.

இந்தத் தெய்வத்தின் சிற்பங்கள் பல்லவர் காலத்தில் (7ம் நூற்றாண்டில்) இருந்து நமக்குக் காணக்கிடைக்கின்றன. வடதமிழ் நாட்டில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தவ்வைச் சிற்பங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

இவற்றில் ஓரிரு சிற்பங்கள் ஆலயங்களின் திருச்சுற்றில் வழிபாட்டில் இருந்து வந்தாலும், பெரும்பாலான சிற்பங்கள் கைவிடப்பட்ட நிலையிலும் மண்ணில் புதைந்தும், ஏரிக்கரைகளிலும் வயல்வெளிகளிலும் இருக்கின்றன.

திண்டிவனம் அருகே சாரம் என்னும் கிராமத்தில் முக்கால்வாசி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் தவ்வைச் சிற்பம் இருப்பதை அண்மைய ஆய்வில் கண்டறிந்தோம்.

தவ்வை எனும் தாய்த் தெய்வம் கைவிடப்பட அல்லது புறக்கணிக்கப்பட காரணம் என்னவாக இருக்கும்?

செல்வத்தின் இருப்பிடமாக வளமையின் அடையாளமாகத் திகழ்ந்த இவள், காலப்போக்கில் சோம்பலின் குறியீடாக மாறிப் போனாள். இக்கருத்தாக்கத்தின் தொடக்கமே திருக்குறளாக இருக்கிறது.

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்

தாள்உளாள் தாமரையி னாள்.

இக்குறளுக்கு விளக்கம் அளித்துள்ள மு.வ. “ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கிறாள். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கிறாள்” என்கிறார்.

ஆனாலும் தவ்வை வழிபாடு தமிழ் மக்களிடையே தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பக்தி இலக்கியக் காலத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் கூட, செல்வத்தை வழங்கும் திருமால் இருக்க சேட்டையிடம் (மூத்ததேவியிடம்) செல்வத்தை எதிர்பார்க்கின்றீர்களே என்று கேட்டுப் பார்த்தார். அப்போதும் அதற்குப் பின்னரும் கூட இவ்வழிபாடு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

12ம் நூற்றாண்டின் இறுதி வரையிலானச் சிற்பங்கள் நமக்குக் கிடைப்பதால் அக்காலம் வரை இவள் சிறப்புடனே இருந்திருக்கிறாள்.

ஜேஷ்டா – மூத்த தெய்வம், முதல் தெய்வத்திற்கு எதிரான கருத்தாக்கமும் தொடர்ந்தது.

செல்வத்திற்கு அதிபதியாக சீதேவி எனும் கருத்தும் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. மூத்ததேவி, மூதேவியானாள். இவள் இருக்கும் இடத்தில் சீதேவி இருக்க மாட்டாள். அதாவது செல்வம் இருக்காது.

இக்கருத்தாக்கத்தின் உச்சக்கட்டம், அறப்பளீசுவர சதகத்தைக் குறிப்பிடலாம். மூதேவி எங்கெங்கெல்லாம் இருப்பாள் என அம்பலவாணக் கவிராயர் இதில் பட்டியலிட்டிருப்பார்.

இதன் தொடர்ச்சியாகவும், அச்சம் அல்லது அறியாமையின் காரணமாகவும் தவ்வை சிற்பங்கள் புறக்கணிப்பு அல்லது கைவிடப்படும் நிலைக்கு வந்திருக்கலாம்! இது, கடந்த சில நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் ஆகும்.

இந்த நிலை மாறவேண்டும். நமது மூத்த தெய்வமான தவ்வை எனும் தாய்த் தெய்வம் மீண்டெழ வேண்டும். இது, அவள் கைகளில் இல்லை: நம் கைகளில் தான் இருக்கிறது. தவ்வைக்கு என தனியாக ஒரு கோயில் எழுப்பும் எண்ணமும் என்னுள் இருக்கிறது! “

கட்டுரையாளர்: கோ.செங்குட்டுவன், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், விழுப்புரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com