கர்நாடக தேர்தலுக்குப் பின் பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

கர்நாடக தேர்தலுக்குப் பின் பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் விதமாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பெரு முயற்சியில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார். கர்நாடகத்தில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல் நடந்து முடிந்தவுடன் பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

எதிர்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது, தேர்தல் உத்திகளை வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவல்களை நிதிஷ்குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் களம் இறங்கியுள்ளார். அவரது முயற்சிக்கு ஓரளவு பலன் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் என்கிற லல்லன் சிங் கூறுகையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்று படுத்தும் முயற்சியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டிய நேரம் இது. இதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார். கர்நாடக தேர்தலுக்குப் பிறகு அவரது முயற்சியில் இன்னும் வேகம் அதிகரிக்கும்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமில்லை என்று பா.ஜ.க. கூறிவந்தாலும் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களுடன் நிதிஷ் பேச்சு நடத்தி வருகிறார்.

சமீபத்தில் நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியுள்ளார். முன்னதாக இடசாரி கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் சில அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்.

தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தமிழக முதல்வரும் திமு தலைவருமான மு.க.ஸ்டாலின் போன்ற பிராந்திய கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவும் கொல்லகத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினர். அப்போது ம்ம்தா பாஜனர்ஜி சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தியை எதிர்க்க ஒரு இயக்கத்தை தொடங்கியது போல பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஓர் இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமது இயக்கத்தை பீகாரில்தான் தொடங்கினார். அதேபோல எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் பணியை பீகாரில் தொடங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்ற செய்தி நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். பா.ஜ.க.வை ஒன்றும் இல்லாத கட்சியாக ஆக்க வேண்டும் என்றும் மம்தா கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அரசியல்கட்சிகளும் அதில் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே கர்நாடக தேர்தலுக்குப் பின் இந்த கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்ட்த்தில் பங்கேற்க அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். கூட்டத்தில் விவாதிக்கப்பட விஷயங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று லல்லன் சிங் கூறினார்.

2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைதான் முக்கிய காரணியாக இருக்கும். நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். பீகாரில் 2015 ஆம் ஆண்டு செய்ததைப் போல இப்போதும் அரசியல் செய்ய அவர்கள் விரும்புகின்றனர். ஜனநாயகத்தையும், ஜனநாயக மாண்புகளையும் காப்பாற்ற வேண்டுமானால் இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியமானது என்கிறார் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா.

எனினும் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் நிதிஷ்குமாரின் முயற்சி பலிக்காது என்கின்றனர் பா.ஜ.க.வினர். நிதிஷ்குமார் முதலில் பீகாரை காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தட்டும். அவர் அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். வெவ்வோறு கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவரது பகற்கனவு பலிக்காது என்கின்றனர் பா.ஜ.க.வினர்.

பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருக்கிறது. எனவே அரசியலில் கிங் மேக்கர் போல செயல்பட அவர் நினைக்கிறார். அவரது முயற்சி எதில் போய் முடியப்போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். தற்போதைய சூழலில் மக்கள் தேர்ந்தெடுக்க நினைப்பது பிரதமர் மோடியைத்தான். பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாதவர்கள் எப்படி ஆட்சியை கைப்பிடிக்க போகிறார்கள் என்பதை பார்ப்போம் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நிகில் ஆனந்த் கூறினார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.எல்.சியுமான நீரஜ் குமார், “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ்குமாரின் முயற்சியைக்கண்டு பா.ஜ.க.வினர் பயப்படுகிறார்கள். பீகாரில் பா.ஜ.கவை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள். அதேபோல வரும் பொதுத் தேர்தலிலும் பா.ஜ.க.வை மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்பது நிதிஷ்குமாருக்கு நன்றாகவே தெரியும்” என்றார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com