திருப்பதி கோயில்
திருப்பதி கோயில்

புரட்டாசியும் வெங்கடேசப் பெருமாளும்

புரட்டாசி என்றாலே ஏழுமலையான் நினைவுதான் வரும்.
அவரைப் பற்றி சில தகவல்கள்

  நவநீத ஆரத்தி:

வெங்கடேசப் பெருமாள் மீது தினமும் அதிகாலை வேங்கடேச சுப்ரபாதம், ஸ்தோத்திரம், பிரபத்தி மங்களாசாசனம் ஆகியவற்றைத் தாளபாக்கம் அன்னமாச்சார்யா வம்சத்தினர் பாடுவர். அதன் பின்னர் கீர்த்தனைகளைப் பாடுவர். பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் பாடப்பட்ட சுப்ரபாதம் கேட்டே ஏழுமலையான் தினமும் கண் விழிக்கிறார். அப்போது பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யம் படைத்து தீபாராதனை நடக்கும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர்.

மண்பாண்ட சமையல் ஏன்!

பீமன் என்னும் குயவன் தினமும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண்ணால் பூக்கள் செய்து வழிபட்டு வந்தான். அவனது பக்திக்கு மனம் இரங்கிய சுவாமி, மன்னரான தொண்டைமான் சக்கரவர்த்தியின் கனவில் தோன்றினார். “மன்னா! தினமும் நீ அளிக்கும் தங்க மலர்களைவிட குயவன் பீமன் தரும் மண்மலர் மீது எனக்கு விருப்பம் அதிகம்” எனத் தெரிவித்தார். இதன்பின் பீமனுக்குப் பொருளுதவி செய்தார் மன்னர். இந்த பீமனைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இன்றும் ஏழுமலையானுக்கு நைவேத்யம் மண்பாண்டங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஏழுமலையானுக்குப் பிடித்த கிழமை

சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்மன்.  யமுனை என்னும் நதி. சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். யமுனையில் வாழ்ந்த காளிங்கன் என்னும் பாம்பை அடக்கி கிருஷ்ணன் புனிதப்படுத்தியதால் அனைவரும் யமுனை நதியைக் கொண்டாடினர். அதைக் கண்ட சனீஸ்வரன் “சகோதரியே! உன்னை மங்களமானவள் என்று உலகமே கொண்டாடுகிறது. ஆனால், என்னை முடவன் என்றும் அமங்களன் என்று பழிக்கிறார்களே. இதிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன்” என்றார். அங்கு வந்த நராதர் அதைக் கேட்டு, “சனீஸ்வரா, கிருஷ்ணருடன் கிடைத்த நட்பால் உன் தங்கை யமுனை நற்பெயர் பெற்றாள். நீயும் அவரது அன்பை பெற்றாங் தரிசனம் நன்மை கிடைக்கும். அதற்கு முன்னதாக ஹோலினா என்னும் அரக்கியின் வரலாற்றை நீ தெரிந்துகொள்வது நல்லது என்று சொல்ல ஆரம்பித்தார்.

“அசுரன் இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்தான். இதை விரும்பாத இரண்யன் மகனைக் கொல்லத் துணிந்தான். தன் சகோிரியான ஹோலிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்தான். ஏனெனில் விசேஷ சக்தி கொண்ட அவளுக்கு தீயின் வெம்மை தாக்காது என்பதால்தான் பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, அவன் வெளியே வரமுடியாதபடி கைகளால் அழுத்தினாள். ஆனால் பிரகலாதனைக் காப்பாற்றினார் மகாவிஷ்ணு. பெண் என்பதால் ஹோலிகாவை அவர் தண்டிக்கவில்லை. அவளோ மகாவிஷ்ணுவை பழி வாங்கத் துடித்தாள். அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தாள்.

கோகுலத்தில் நந்ததேவரின் மகனாக மகாவிஷ்ணு (கண்ணன்) வளர்வதைக் கேள்விப்பட்ட அவள் அங்கு சென்று தன் திட்டத்தை செயல்படுத்தப் போகிறாள். அதற்கு முன்னதாக ஹோலிகாவை ஒழித்துக் கட்டினால் நீ மங்கள சனீஸ்வரனாக திகழும் பேறு பெறுவாய்” என் வாழ்த்தினார் நாரதர்.

திட்டமிட்டபடி ஹோலிகா கோகுலத்திற்குச் சென்றாள். அப்போது கண்ணனும், அவனது நண்பர்களும் தீமைகளை ஒழிக்கும் விதமாக விறகுகளை அடுக்கி தீயிட்டு ஹோலி கொண்டாட தயாராயினர். கண்ணனைக் கொல்லும் நோக்கில் ஹோலிகா விறகு கட்டுக்குள் ஒளிந்திருந்தாள். அங்கு வந்த சனீஸ்வரன் தன் கொடிய பார்வையை ஹோலிகா மீது செலுத்த, அவளது விசேஷ சக்தி மறைந்தது. விறகில் தீயை மூட்டிய கண்ணன் ஆரவாரம் செய்தான். அதன் வெம்மை தாளாத ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நடந்த விஷயத்தை நாரதர் விவரித்தபோது கண்ணனுக்கு உண்மை புரிந்தது.

சனீஸ்வரனை வாழ்த்திய கிருஷ்ணர், “இன்றுமுதல் நீ மங்களமானவனாகத் திகழ்வாய். சனிக்கிழமையின் அதிகாலைப் பொழுது புனிதமானதாக விளங்கும். கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையில் வெங்கடேசப் பெருமாளாக நான் வீற்றிருப்பேன்.

சனிக்கிழமைகளில் விரதமிருந்து என்னை தரிசிப்போரின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்” என வரமளித்தார்.

 « திருப்பதியில் உள்ள மடப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு, கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெறுகிறது.

« பெருமாளுக்கு ஒரு முழ நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடைவை பீதாம்பரம் அணிவிக்கப்படுகிறது.

« ஏழுமலையான் அபிஷேகத்திற்கு ஸ்பெயினிலிரந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

« திருப்பதி – திருமலையில் பெருமாள் தம் கண்களை மறைத்து எப்போதும் இட்டிருக்கும் நாமத்தை அகற்றிவிட்டு மெல்லியதான நாமம் ஒன்றை இட்டுக்கொண்டு மலர் அலங்காரம் பெற்று திருநயனம் திறந்து அன்பர்களுக்கு அருள் பாலிப்பார். இந்தத் தரிசனம் பூலங்கி தரிசனம் எனப்படும். வாரந்தோறும் வியாழன் மாலை முதல் வெள்ளி காலை வரை இந்தத் தரிசனத்தைக் காணலாம்.

ஏழு மலைகளின் பெயர்கள்

திருப்பதி வெங்கடாஜலபதி வசிக்கும் மலைக்கு ஏழு பெயர்கள் உண்டு. ஆதிசேஷன் உருவத்தில் இருப்பதால் சேஷாசலம் என்றும், இந்த மலையில் வேதங்கள் இருப்பதால் வேதாசலம் என்றும், பூலோகத்திற்கு கருடனால் கொண்டு வரப்பட்டதனால் கருடாசலம் என்றும், விருஷன் என்ற ராட்சஷன் இங்கு மோட்சமடைந்ததால் விருஷாத்திரி என்றும், அஞ்சனாதேவி தவம் செய்து அனுமானைப் பெற்றதால் அஜ்ஜனாத்ரி என்றும், ஆதிசேஷன், வாயு பகவான் இருவரும் தங்கள் வலிமையைப் பரிட்சித்துப் பார்த்தக் கொண்டதால் “ஆனந்தகிரி” என்றும், நமது பாவங்களைப் போக்கடிக்கம் மலையாகையால் ‘வேங்கடாசலம்’ என்று பெயர் ஏற்பட்டது.

வெங்கடேசப் பெருமாள்
வெங்கடேசப் பெருமாள்

திருப்பதிக் கோயில் மணி

காஞ்சிபுரம் அருகே உள்ள தூப்புல் என்ற ஊரில் வசித்த அனந்த சூரி, தோத்தாரம்பா தம்பதியர் காசியில் இருந்து கால்நடையாக திருமலை வந்தனர். இரவு சத்திரத்தில் தோத்தாரம்பா அம்மையாருக்கு ஒரு கனவு. வேங்டாசலபதிப் பெருமாளின் சன்னிதியில் அடிக்கப்படும் மணியை விழுங்கியது போல கணவரிடம் கூறினார். வேதமறிந்த கணவர், “நீ கண்டது நல்ல கனவுதான்” என்றார்.

திருமலை கோயில் சன்னிதியிலோ பரபரப்பு. பூஜைக்குத் தேவைப்படும் கைமணி காணவில்லை. ்ர்ச்சகர்கள், அதிகாரிகள் தேடினார்கள். அசரீரி ஒலித்தது. “மணியைத் தேட வேண்டாம். புரட்டாசி மாதம் சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஓர் அற்புத மனிதராக வேங்கடநாதன் எனும் பெயரில் தூப்புலில் அனந்தசூரி, தோத்தாரம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறப்பார். பேச்சும் மூச்சும் மணி மணியாக இருக்கும்” என்றது.

காஞ்சிக்குத் திரும்பிய தம்பதிக்கு அப்படி ஒரு குழந்தை பிறந்தது. அவர்தான் பிற்காலத்தில் வேதாந்த தேசிகனாகத் திகழ்ந்த வேங்கடநாதன், இவ்வாறு திருமலை பெருமாள் சன்னிதியில் இருந்த கைமணியே குழந்தையாக அவதரித்தது. அதனால் இன்றும் திருமலையில் பூஜை தீபாராதனை நேரத்தில்கூட மணி அடிப்பதில்லை. சன்னிதியில் மணியும் இல்லை.

« திருப்பதியில் ஸ்ரீவெங்கடேசப் பெருமானைத் தரிசிப்பதற்கு முன்பு சந்திர புஷ்கரணி குளக்கரையில் உள்ள ஸ்ரீபூவராக ஸ்வாமியைத்தான் முதலில் தரிசனம் செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com