பார்வை: திமுக அரசின் இரண்டு ஆண்டு ஆட்சி
2021 ஆண்டை பொருத்தவரை மு.க.ஸ்டாலின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டுதான் தமிழ்நாடு அவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தது. சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அத்துடன், திமுகவுக்காக உழைக்க ஆரம்பித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார் ஸ்டாலின். உலகமே கொரோனா நோயின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இக்கட்டான தருணத்தில், 2021 மே 7ல் முதலமைச்சராக பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
முத்திரை பதித்த முதல் கையெழுத்து
பதவியேற்ற அன்றே 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடியாக திட்டங்களை தொடங்கி வைத்தார். பெண்கள் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சமூக புரட்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதோடு, மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்கிற அறிவிப்பும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில் ஒன்று, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம். இதற்கென ஒரு துறையே உருவாக்கப்பட்டது. அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.

கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 இலட்சம், குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது. நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்குப் புத்துயிர்ப்பு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என பலத் திட்டங்களை ஸ்டாலின் வழங்கியது மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் `கலைஞர் நினைவு நூலகம்' கட்டுப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 2 ஏக்கர் பரப்பளவில் நூலகம் அமைய உள்ளதாக முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என அறிவித்தது தமிழ்நாடு அரசு. முதல் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நூற்றாண்டைக் கொண்டாடியவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார். அவரின் வீட்டுக்கே சென்று விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பலரின் பாராட்டைப் பெற்றது. தமிழக எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், பெற்றவர்களுக்கு மாநில அரசுத் தரப்பில் வீடு கட்டி தரப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். கல்வி, இலக்கியம் மட்டுமின்றி விளையாட்டிலும் ஊக்கம் அளிக்கும் வகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.
கடினமான கொரோனா காலகட்டம்
கொரோனா தடுப்பு பணியை முடுக்கிவிட்ட முதலமைச்சர் வார் ரூம்களை தொடங்க உத்தரவிட்டார். நேரடியாக இரவு 11 மணியளவில் கட்டளை மையத்துக்கே சென்ற முதலமைச்சர் , தொலைபேசி மூலம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். நள்ளிரவிலும் தொடர்ந்த நடவடிக்கையால் மக்களின் கவனத்தை ஈர்த்தது தமிழக அரசு. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கியில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனாவால் தந்தை அல்லது தாயை என யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். அவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிப்பதற்கான சூழல் இல்லாமலிருந்தது. கற்றல் இடைவெளிக் குறைபாட்டை குறைக்க “இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு, போன்ற மாணவர்களின் கல்வி சார்ந்த புதிய திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
வரலாற்றில் இடம்பிடித்த வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக விவசாயத்திற்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததுடன், தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவில் இருந்து காப்பாற்ற “பனை மேம்பாட்டு திட்டம்” அறிவிக்கப்பட்டது. மேலும் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் ஒதுக்கியதன் மூலம், குறுவை சாகுபடிக்கு 60 கோடி ரூபாய் இடுபொருள் மானியம் ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க நெல் ஜெயராம் பெயரில் மரபு சார் நெல் ரகம் பாதுகாப்பு இயக்கம் அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அருகிவரும் உயிரினங்களான கடற்பசு மற்றும் தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாப்ப இந்தியாவிலேயே முதல் முறையாக கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உயிரியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளிட்டது. மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த மீண்டும் மஞ்சபை திட்டம் அனைத்து தரப்பட்ட மக்களின் பாராட்டை பெற்றது.
தமிழ் பண்பாட்டின் தொட்டில்
தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உலகறிய செய்ய தமிழர் தொன்மையைத் தேடல் எனும் திட்டத்தின் கீழ், கீழடியில் பண்பாட்டு சின்னம், நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி உள்ளிட்ட தென்மையான பகுதிகள் கண்டறியப்பட்டு தொல்லியல் ஆய்வுகள் நடத்து தமிழ்நாடு அரசு சீறி முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்களின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன் முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வலி நிவாரணம் உள்ளடக்கிய ‘மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலம் தற்போதுவரை ஒரு கோடி பயணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான கொண்டுவரப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் கிராமப்புறங்கள் மட்டுமல்லாது, நகரங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதன்தொடர்ச்சியாக ஒன்று முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் இயக்கம் கொரோனா காலத்தில் பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 12 ஐடிஐ நிறுவனங்கள் திறக்கவும் ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் அதிரடி திட்டங்கள்
தமிழ் நாட்டில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிரிழப்பதை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டதுதான் “இன்னுயிர் காக்கும்” திட்டம். இத்திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டு 48 மணிநேரம் வரை ஆகும் செலவீனத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் திராவிட முற்போக்கு ஆட்சிகாலத்தில்தான்
அறநிலையத்துறை மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2 பட்டியலினத்தவர் உட்பட 54 பேருக்கு அர்ச்சகர் ஆணையும் வழங்கப்பட்டது. 1972ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்த திட்டத்தை நிறைவேற்றினாலும், பின்னர் உயர்நீதி மன்றம் தடை விதித்தது. 50 வருடங்கள் கழித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் முடியாததை மு.க.ஸ்டாலின் செய்து காட்டியிருக்கிறார் என்ற பேச்சுகளும் பாராட்டுக்களும் எழுந்தன.

இந்த திட்டத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்தப்பின், சில எதிர் விமர்சனங்களும் எழுந்தன. அந்த விமர்சன்த்திற்கெல்லாம் “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் இன்று அகற்றப்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அத்துடன் பெண் ஓதுவாரும் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் கோயில்களில் “அன்னைத் தமிழில்” அர்ச்சனை திட்டமும் அறிவிக்கப்பட்டது. அது முதல் தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” ஓங்கி ஒலிக்கிறது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட 3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில் அறநிலையத்துறையால் இக்காலகட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல், இலங்கைத் தமிழர் நலனைப் பேணிக் காக்க, வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட போது மழை பாதிப்பின் முதல் நாளே முதலமைச்சர் களத்தில் இறங்கியது அனைவரிடமும் பாராட்டினை பெற்றுத் தந்தது. மேயராக இருந்த போதே சென்னையை சீர்தூக்க நினைத்த ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்காரச் சென்னை 2.O திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டது. அயலக தமிழர்களை காக்க தனித்துறையை கண்டார். அதே போன்று, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்ததோடு அவர் மீதான மதிப்பு மேலும் அதிகரிக்க வழிவகுத்தது.
தொழில்வளர்ச்சியில் தமிழகம்
வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டுவர துபாய் கண்காட்சியில் கலந்துகொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரின் முதல் வெளிநாட்டு சுற்றுபயணமாகவும் இது அமைந்தது. அங்கு தமிழ்நாட்டுக்கான அரங்கை முதலமைச்சர் திறந்துவைத்தார். மேலும், அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் செம்மொழி பாடல் ஒளித்தது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைச் சேர்த்தது. துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் ஐந்துநாள் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய முதலமைச்சர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் துயாப் சுற்றுப்பயணத்தின் விளைவாக தமிழ்நாட்டிற்கு ஆறு மிக முக்கியத் தொழில் நிறுவனங்களுடன் 6 ஆயிரத்தி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன எனவும், இதன் மூலம், 14 ஆயிரத்தி 700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பெருமிதத்தோடு தெரிவித்தார்.

அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொண்டுவந்த முதலீட்டாளர்கள் முதல் முகவரி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு இதுவரை 207 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மேலும், வளர்ந்துவரும் மாநகராக உள்ள மதுரையில் டைடல் பார்க் அமைக்கவும், ஏழு இடங்களில் மினி டைடல் பார்க் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் தீர்மானம ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம் தற்போது ஆளுநர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஆகியவை தமிழர்களிடம் பெரும் வரவேற்றை பெற்றது. தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில உரிமைகளை பாதுகாக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசு என அண்டை மாநிலங்களின் பாராட்டைப் பெற்றது. அதேபோல் உலக நாடுகளே வியக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்திய காட்டிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பெரும் கவனம் பெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மக்கள் தங்கள் ஊர் திருவிழாவை போல் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய ஆளுமையை சிறப்பிக்கும் வகையில் பேனா நினைவுச் சின்னம், சென்னையில் 75வது சுதந்திர நினைவுத்தூண் மற்றும் அயோத்திதாசர், எழுத்தாளர் கி.ராஜ நாராயணன், காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் புதுபிப்பு, சென்னையில் மருதுபாண்டியர் மற்றும் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவரும் முயற்சியில் தீவிரமான ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இதேகாலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சில கவனம்பெற்ற விஷயங்கள் திமுக அரசு இன்னும் கூடுதலாக செயல்படவேண்டும் எனும் எச்சரிக்கை மணியை ஒலித்தது. குறிப்பாக, 23 அக்டோபர் 2022 இல் நடந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம், முடிவு எட்டப்படாமல் உள்ள பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம்,வேங்கைவயல் சம்பவம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் அரசு கூடுதலாக செயலாற்றவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி
இந்நிலையில்தான், சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசு தலைமையிலான இரண்டு ஆண்டு ஆட்சியில் 350க்கும் மேற்பட்ட துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள்,6 ஆயிரத்தி 905 கோப்புகளில் கையெழுத்து என தமிழக மக்களின் நலன் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதல்வர். இது தமிழக மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன், ஓய்வின்றிப் பணியாற்றுகிறேன், என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழக மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. தமிழகத்திற்கு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்த மக்களுக்கு, அறிவார்ந்த தமிழக மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாகப் புரியும். இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் முகம் அல்ல, அன்பு. இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவம் அல்ல, ஜனநாயகம். இந்த ஆட்சியின் முகம் என்பது அலங்காரமல்ல, எளிமை. இந்த ஆட்சியின் முகம் என்பது சர்வாதிகாரமல்ல, சமத்துவம். இந்த ஆட்சியின் முகம் என்பது சனாதனமல்ல, சமூகநீதி. அதனால்தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது. சொன்னதைச் செய்வோம்- செய்வதைச் சொல்வோம் என்பது கருணாநிதியின் நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால் நமது திராவிட மாடல் அரசு, சொல்லாததையும் செய்வோம் - சொல்லாமலும் செய்வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது என உணர்ச்சி பொங்க பேசினார் அவர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2 ஆண்டுகள் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லும் அதேவேளையில், 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வர்த்தகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதுதான் எனது விருப்பம் என தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.