‘தீவிரவாதத்துக்கு எதிராக தூது போனேன்!’
‘செவாலியே’ அருணா சாய்ராம் பிரத்யேக நேர்காணல்
புகைப்படங்கள்: ஸ்ரீஹரி

‘தீவிரவாதத்துக்கு எதிராக தூது போனேன்!’ ‘செவாலியே’ அருணா சாய்ராம் பிரத்யேக நேர்காணல்

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் அருணா சாய்ராம் அவர்களுக்கு இந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய கௌரவமான, ‘செவாலியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய – பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘செவாலியே’ விருதைப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ள திருமதி அருணா சாய்ராம் அவர்களுக்கு கல்கி குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்களைச் சொல்லி, ஒரு சிறு நேர்காணலையும் செய்தோம்.

செவாலியே விருது வாங்கியது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்…

எந்த ஒரு விருதுமே மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம்தான். ஒரு இசை நிகழ்ச்சிக்காக எத்தனையோ பயிற்சிகளையும் ஆராய்ச்சியும் செய்து பிறகு மேடைகளில் பாடுகிறோம். அதை ரசிகப் பெருமக்கள் ரசிக்கிறார்கள், ஆமோதிக்கிறார்கள். அது ஒரு பெரிய சந்தோஷம். இதுபோன்று பெரிய விருதுகளை ஒரு அரசாங்கம் மூலமாகவோ, மதிப்பிற்குரிய சங்கீத நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ வாங்கும்போது, ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இன்னும் நிறைய உற்சாகத்தோடு சங்கீதத்துக்காக உழைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மேலிடுகிறது.

கலாசாரத்தைப் பின்பற்றுவதில் இந்தியாவுக்கும் பிரெஞ்சு தேசத்துக்கும் என்ன ஒற்றுமையைக் காண்கிறீர்கள்?

இதற்கு ஒரு சிறு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஜெர்மனியில் ஒரு இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். அதைக் கேள்விப்பட்டு, பிரான்சு நாட்டிலும் ஒரு கச்சேரி பண்ணும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். ‘பக்கவாத்தியக்காரர்கள் யாரும் இல்லையே’ என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘பரவாயில்லை… நீங்கள் உங்கள் தம்புராவுடன் மட்டும் பாடினாலே போதும்’ என்று சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு வீட்டில் நடந்தது. இதுதான் பிரான்சில் நடந்த எனது முதல் கச்சேரி. அதன்பிறகு எனக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகள் வந்தன. ரசிகர்கள் கூட்டமும் பெருக ஆரம்பித்தது.

இன்னும் சில வருடங்கள் கழித்து பிரான்சில் சிறிய ஊர் ஒன்றில் எனது கச்சேரி. அப்போதெல்லாம் நான் என்னுடன் எடுத்துச் செல்வது ஒரு நிஜ தம்புரா மட்டும்தான். எலெக்ட்ரானிக் தம்புராவெல்லாம் அப்போதுதான் புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருந்த நேரம். அந்தக் கச்சேரிக்கு நான் எனது தம்புராவை எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை. கச்சேரிக்குச் சென்ற என்னிடம், அதை நடத்தியவர்கள், ‘உங்களின் தம்புரா எங்கே?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘இன்று நான் எனது தம்புராவைக் கொண்டு வரவில்லை. எலெக்ட்ரானிக் தம்புராவை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு உங்களின் தம்புரா இசைதான் வேண்டும். நீங்கள் சொன்னால் உங்களின் தம்புராவை போல ஒரு நிஜ தம்புராவை ஏற்பாடு செய்து தருகிறோம்’ என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்ல, எங்கெங்கோ அலைந்து திரிந்து ராஜாங்கமாய் ஒரு பெரிய தம்புராவை கொண்டு வந்து எனது முன் நிறுத்தினார்கள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், சங்கீதத்தின் மேல் அவர்களுக்கு அவ்வளவு அபிமானம். ஒரு நல்ல இசையைக் கேட்க எத்தனை பெரிய சிரமத்தையும் எடுக்க அவர்கள் தயாராய் இருக்கிறார்கள். இது சங்கீதத்துக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. கலாசாரத்தைக் காப்பதில் நமக்கு இணையாக அவர்களும் இருக்கிறார்கள் என்பதை கூறவே இந்த நிகழ்வைச் சொன்னேன்.

எந்த சபை மேடையில் பாடுவதை நீங்கள் பெருமையாகக் கருதுகிறீர்கள்?

நம்ம ஊர் சங்கீதம், நமது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வளர்ந்து வரும் சங்கீதத்தை இங்குள்ள சங்கீத ஞானம் உள்ளவர்களும், சங்கீதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் கூட கேட்டு, ‘ஆஹா… இந்த இசை நிகழ்ச்சி நன்றாக இருக்கிறதே’ என்று சொல்வதைத்தான் சந்தோஷமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். ஏனென்றால், ஒரு சின்ன குழந்தைக்குக் கூட, அதனோட பாஷையில் அம்மா என்று சொன்னால்தான் அதற்குக் குஷி. அந்த சந்தோஷத்துக்காகத்தான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் மும்பையிலிருந்து சென்னைக்குக் குடி பெயர்ந்து வந்தேன்.

இசை உலகில் யாரிடம் பெற்ற பாராட்டு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது?

எனக்கு அப்போது ஒரு பன்னிரண்டு வயதிருக்கும். சரியாகப் பாடவே தெரியாத, ஒரு கால்வெட்டு அரைவெட்டு நிலையில் இருந்தபோது, ஒரு சமயம் எம்.எஸ்.அம்மா முன்பு பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அம்மாவும் என்னை பாடச் சொன்னார்கள். நானும் பயந்தபடியே பாடினேன். பாட்டுக்கு நடுவே ஒரு சின்ன தவறு செய்துவிட்டேன். எனது கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர். ‘அம்மாவின் முன்பு பாடும்போது இப்படி ஒரு தவறு செய்துவிட்டோமே’ என்று நினைத்து, வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்தேன்.

எனக்கு எதிரில் அமர்ந்திருந்த அம்மா, உடனே எழுந்து வந்து எனது பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். எனது கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘என்ன குழந்தே, பாடுவதில் தப்பு செய்துவிட்டோமே என்று அழுகிறாயா? கவலைப்படாத, உன்னோட வயசுல நானும் உன்னை மாதிரிதான் இருந்தேன். எனக்கும் பாடுவதில் பல கஷ்டங்கள், தவறுகள் நிகழ்ந்திருக்கு. எனக்கும் கனமான சாரீரம். உனக்கும் கனமான சாரீரம். நம்முடைய குரல் கெட்டி குரல், மென்மையான குரல் கிடையாது. நீயும் நல்லா பாடுவே. உன்னோட சங்கீத பயிற்சியை மட்டும் நீ சரியா பண்ணிட்டே இரு. சரியான நேரத்துல உனக்கு குருமார்கள் அமைஞ்சு உன்னை வழிநடத்துவாங்க’ அப்படின்னு சொன்னார்கள். அதுதான் எனது வாழ்வில் ஒரு திருப்புமுனை. அதுவே எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பெரிய பாராட்டு.

ஒருவேளை இசைத்துறைக்கு வரவில்லை என்றால் நீங்கள் என்னவாகியிருப்பீர்கள்?

என்னோட சிறிய வயதில் கெமிஸ்ட்ரி படித்து அமெரிக்கா போய்விட வேண்டும். அதில் டாக்டரேட் வாங்கி, ஏதாவது ஒரு யுனிவர்சிட்டியில் பேராசிரியராக வேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டதுண்டு. ஆனால், அதில் நான் தீவிரமாக இல்லை. அவ்வப்போது அந்த எண்ணங்கள் மனதில் வந்து வந்து போகும் அவ்வளவுதான். நான் சங்கீதம் பாடவில்லை என்றால் சந்தோஷமாக இருந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை நான் சந்தித்து வந்திருக்கிறேன். இப்போது மனநிம்மதி, திருப்தியோடு இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் சங்கீதம்தான்.

இசை உலகில் உங்களுக்கு முன்னோடியாக யாரை நினைக்கிறீர்கள்?

முதலில் எனது தாயார் ராஜலட்சுமி சேதுராமன்தான். அவர்தான் ஆரம்பத்தில் எனக்கு சங்கீதத்துக்கு அடித்தளமிட்டவர். தாய், தந்தையர் போட்ட உரத்தோடு, சங்கீத கலாநிதி குரு ஸ்ரீமதி பிருந்தா அம்மாவிடம் பதினைந்து வருட காலம் நான் பெற்ற பிட்சைதான் சங்கீதம். அடுத்து, முக்கியமானவர் என்று சொன்னால், அது பாரத ரத்னா மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அம்மாதான். இந்த மூவரும்தான் எனது இசை உலகின் முன்னோடிகளாக நான் நினைக்கிறேன்.

இசைப்பயணத்தில் உங்களால் மறக்க முடியாத ஒரு சுவாரசிய சம்பவம்…

எனது வாழ்வில் 90களில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்த காலகட்டம் அது. அப்போது எனது கணவர் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவரான துரைசாமி என்பவர் வேலை நிமித்தமாக காஷ்மீர் செல்ல வேண்டி இருந்தது. போன இடத்தில் தீவிரவாதிகள் அவரை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். பேச்சுவார்த்தையில், இந்திய அரசால் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்ட நான்கைந்து பேரை விடுவித்தால், அதற்கு பதிலாக இவரை விடுவிக்கிறோம் என்று தீவிரவாதிகள் அறிக்கை விடுகின்றனர்.

அப்போது எனது கணவர் பணிபுரிந்த கம்பெனியின் நிர்வாக இயக்குநர் என்னை தொலைபேசியில் அழைத்து, விஷயத்தைச் சொல்லி, ‘இதில் நீங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். எனக்கோ பெரிய வியப்பு. ‘என்னால் எப்படி சார் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ முடியும்’ என்று நான் கேட்க, அதற்கு அவர், ‘நீங்கள் சமீபத்தில்தான் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சார் முன்னால் ஒரு கச்சேரி பண்ணியிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் நேரில் சென்று அவரிடம் உதவி கேட்டால் நிச்சயம் நல்லது நடக்கும். ஒரு இசைக்கலைஞர் என்ற முறையில் உங்களுக்கு அந்த உரிமை உள்ளது. வேறு வகையில் அதை சாதிக்க முடியாது. சட்டமும் அதற்கு இடம் கொடுக்காது’ என்று கூறினார்.

அவ்வளவு சுலபமாக யாராலும் ஜனாதிபதியை சந்தித்துவிட முடியாது. ஆனால், ஜனாதிபதியின் மனைவியை சொந்த விஷயமாக சந்திப்பதில் யாருக்கும் தடையில்லை. அந்த வகையில் ஜனாதிபதியின் மனைவி திருமதி ஜானகி அம்மாவிடம் முன் அனுமதி பெற்று சந்திக்கச் சென்றேன். கடத்தப்பட்ட துரைசாமியின் மனைவி மற்றும் அதிகாரிகளும் என்னுடன் வந்திருந்தார்கள். நாங்கள் ஜனாதிபதி மாளிகையில் அமர்ந்து ஜானகி அம்மாவிடம் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களும், ‘இதைப் பற்றி ஜனாதிபதியிடம் எப்படி பேசுவது’ என்று கூறி, எங்களுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று கதவைத் திறந்துகொண்டு ஆர்.வெங்கட்ராமன் சார் உள்ளே வந்து கொண்டிருந்தார். வந்தவர், நாங்கள் என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அமர்ந்து, ‘அந்தத் தியாகராஜ கீர்த்தனையை கொஞ்சம் பாடிக் காட்டுமா’ என்று என்னிடம் கேட்டார். பிறகு, ‘நீ எதற்கும் கவலைப்படாதே. ஒரு சங்கீத பிரதிநிதியான நீயே வந்து கேட்டதால், உனக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நிச்சயம் செய்கிறேன்’ என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு இரண்டே நாட்களில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து துரைசாமி விடுதலை செய்யப்பட்டார். அப்போதுதான் சங்கீதத்துக்கு எவ்வளவு பெரிய மரியாதை என்பதை நான் உணர்ந்தேன். இந்த சங்கீதம் என்பது நாயன்மார்களும், ஆழ்வார்களும், இன்னும் பல சங்கீத வித்வான்களும் வளர்த்து நம்மிடம் கொடுத்துள்ள ஒரு சொத்து. இதை எந்தளவுக்கு நம்மால் காப்பாற்ற முடியுமோ அந்தளவுக்குக் காப்பாற்றி, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது பொறுப்பு.

உங்களது இசைக் கச்சேரிகள் பாரம்பரிய கர்நாடக இசையையும் தாண்டி மிகவும் ஜனரஞ்சகமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

நாம் நினைத்து நடப்பது என்று எதுவுமில்லை. நான் வளர்ந்த இடம், விதம், சூழ்நிலை இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது நான் செய்வது எதுவும் எனக்கு ஆச்சரியமாகப் படவில்லை. 1940,50களில் நம்மூரில் இருந்து பம்பாய் நகரத்துக்குக் குடிபெயர்ந்தவர்களின் மனதில், ‘இது நமது காலாசாரம், பண்பாடு, நம் கர்நாடக சங்கீதம். இதை விட்டுவிடாது, நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவது நமது கடமை’ என்ற ஒரு உத்வேகம் இருந்தது. அதனால்தான், எம்.எஸ்.அம்மா, ராஜரத்னம் பிள்ளை போன்றவர்களின் கச்சேரிகள் அங்கே அமோகமாக நடைபெற்றன. அப்போதெல்லாம் அங்கே ஆடிடோரியம் எதுவும் கிடையாது. திறந்தவெளி மைதானத்தில்தான் நடைபெறும். இன்று எப்படி ஒரு ராக்ஸ்டார் பாடினால் அரங்கமே நிறைந்து வழியுமோ, அதுபோன்று, அன்று அந்த மைதானமே ரசிக வெள்ளத்தில் முட்டி மோதி நிற்கும். சிறு வயதிலிருந்தே அப்படிப் பார்த்து வளர்ந்தேன் நான். கர்நாடக இசை என்பதோடு மட்டும் எனது ஆர்வம் நின்று விடவில்லை. இந்துஸ்தானி, அபங்கம், வெஸ்டர்ன் என்று பலவற்றையும் கேட்டு அறியும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. இந்த இசையைத்தான் கேட்க வேண்டும், இதுதான் நிஜம், இது நல்லதல்ல என்று நான் எதையும் புறந்தள்ளவில்லை. அனைத்திலும் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வேன். அப்படி நான் புரிந்து கொண்டது, தெரிந்து கொண்டதைத்தான் பிற்காலங்களில் எனது இசை மேடைக்கு என்ன தேவையோ, எது எனக்கு சரி என்று படுகிறதோ அதைத்தான், கர்நாடக இசைக்கு சற்றும் குறைவு வராதபடி நான் பாடுகிறேன். இவை எல்லாம் எனக்கு இயல்பாய் வந்த விஷயங்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் பஜனை சம்பிரதாயம் என்று ஒன்று உண்டு. எப்படி கர்நாடக சம்பிரதாயத்தில் மூன்று மும்மூர்த்திகள் உண்டோ, அதேபோல், பஜனை சம்பிரதாயத்திலும் மூம்மூர்த்திகள் உண்டு. அவர்கள் 17ஆம் நூற்றாண்டில் கால்நடையாகவே ஊர் ஊராகச் சென்று, சங்கீத பாரம்பரியங்களை கண்டறிந்து கொணர்ந்து, பஜனை சம்பிரதாயத்தில் சேர்த்தார்கள். நான் மேடைகளில் பஜனை சம்பிரதாயத்தில் உள்ளதைத்தான் பாடுகிறேன். நானாக எதையும் புதிதாகப் பாடுவதில்லை. அது அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து ஜனரஞ்சகமாக இருப்பதில் வியப்பொன்றுமில்லையே.

உலகின் பல நாடுகளுக்கும் சென்றிருப்பீர்கள். அங்கே கண்ட வாழ்க்கை முறைக்கும் நம் தமிழகத்தின், அதுவும் தலைநகர் சென்னையின் வாழ்க்கை முறைக்கும் என்ன அனுபவத்தை உணர்கிறீர்கள்?

நம்ம ஊர் ஜனங்கள் ரொம்பவும் சந்தோஷமானவர்கள். நேருக்கு நேர் பார்த்தவுடன் முகமலர்ந்த ஒரு சிரிப்பு... உடனே, ‘சௌக்கியமா?’ என்று கேட்பது, இயல்பாகப் பேசுவது இவையெல்லாம் நம்ம ஊருக்கே உரிய பண்பாடு. அது வேற எந்த நாட்டுக்குப் போனாலும் கிடைக்காது. அதனாலதான் எந்த நாட்டுக்குப் போனாலும், நம்ம ஊருக்குத் திரும்பி வந்தால் மனதில் ஓர் அலாதி சந்தோஷம் தோன்றுகிறது!

‘அருணா சாய்ராம்’ என்றாலே உடனே மனதில் தோன்றுவது நீங்கள் உடுத்தும் உடையும், அணியும் நகையும், பளிச்சென்ற தோற்றமும்தான். அதைப்பற்றிக் கூற முடியுமா?

ஸ்ரீ கிருஷ்ணர்தான் எங்கள் வீட்டு தெய்வம். அவருக்கு எனது அம்மா தினமும் அலங்காரம் பண்ணுவாங்க. குளிப்பாட்டி, உடுப்பு மாற்றி, நகைகள் அணிவித்து நல்லா அலங்கரிப்பாங்க. அதைப் பார்த்து வளர்ந்த நான், இப்போது அதை ஒரு உபாசனையாகவே எடுத்துக்கொண்டு செய்து வருகிறேன். ஆரம்ப காலங்களில் நானும் கச்சேரிகளுக்கு மிகவும் சிம்பிளாகத்தான் போய்க்கொண்டிருந்தேன். பிறகுதான் எனது மனதில், ‘நாம் செய்யும் இசைக் கச்சேரிகளும்கூட ஒரு உபாசனைதானே என்று தோன்றியது. நான் எனது இசையை ரசிகப்பெருமக்களின் முன்பு அர்ப்பணிக்கிறேன். அதை நான் பக்தியோடு, சிரத்தையோடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது உடை, நகை, அலங்காரம் என்று நான் கச்சேரியில் வந்து அமரும்போதுதான் அதற்கான மரியாதை கிடைக்கும். அது இசைக்கு நான் கொடுக்கும் மரியாதையாக நினைக்கிறேன்.

அடுத்து வரும் இளைய தலைமுறை இசைக்கலைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது…

இன்றைய இளம் இசைக் கலைஞர்கள் அதிபுத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள். அறிவு முதிர்ச்சி என்பது அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. மேலும், இளைய தலைமுறை இசைக்கலைஞர்கள் மிகவும் நன்றாகவே பாடுகிறார்கள். அதற்காக நிறையவே உழைக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நான் சொல்வதற்கு என்று எதுவும் இல்லை… என்று தமக்கே உரிய அழகிய புன்சிரிப்பை உதிர்க்கிறார். மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் சொல்லி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com