ஆயுர் வேதத்தில் "விருத் அன்னா" அதாவது இணக்கமில்லாத உணவுகள் என்றால் என்ன?

ஆயுர் வேதத்தில் "விருத் அன்னா" அதாவது இணக்கமில்லாத உணவுகள் என்றால் என்ன?
Published on

எந்த உணவாக இருந்தாலும் அதை அளவோடு உண்ணும் போது தான் அது நமக்கு நன்மை தரும். அளவுக்கு மீறும் போது அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொல்கிறார்கள். அளவு மீறும் போது மட்டுமல்ல சில நேரங்களில் நாம ஒன்றுக்கொன்று எதிர் எதிர் பண்புகளைக் கொண்ட உணவுகளை சேர்த்து உண்டாலும் கூட அது அந்த உணவு நஞ்சாகி விடுகிறது என்கிறது ஆயுர்வேதம்.

ஆயுர்வேதத்தில் இதை "virudh anna" என்கிறார்கள்.

அதாவது நமது உடலில் திசுக்கள் உருவாவதைத் தடுக்கும் வகையிலோ அல்லது திசுக்களுக்கு நேர்மாறான பண்புகளைக் கொண்ட திசுக்களின் வளர்சிதை மாற்றத்தை தடுக்கக் கூடிய சில உணவுகள் மற்றும் அதனுடன் சேர்க்கப்படும் போது எதிர்மாறான விளைவுகளைத் தரக்கூடிய உணவு வகைகளை “விருத் அன்னா” அல்லது “இணக்கமற்ற உணவு” என்கிறது ஆயுர்வேதம்.

கோடைகாலம் என்பது மாம்பழங்கள் தனி ஆவர்த்தனம் நடத்தும் காலம் என்பதால், இன்று நாம் மாம்பழத்தோடு சேர்த்து உண்ணக்கூடாத உணவுப் பொருட்கள் எவை? ஏன் உண்ணக்கூடாது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

மாம்பழம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? அப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கு மாம்பழம் பிடிக்காமல் போனதற்கு காரணம் பழக்கமின்மையாக இருக்குமே தவிர பழத்தின் மீது நாம் எந்தக் குற்றத்தையும் சொல்ல முடியாது.ஏனெனில், நம் முன்னோர் கூட “மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சித்திரை வைகாசி மாதங்களில் மாம்பழம் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

எனக்கு ஒரு சினேகிதி இருக்கிறார். மாம்பழ சீசன் தொடங்கி விட்டால் போதும், மூன்று வேளையும் அவருக்கு உணவு மாம்பழம் மட்டுமே! இன்னொரு சினேகிதிக்கு தயிர் சாதமும், மாம்பழமும் இருந்தால் போதும், உணவு தேவாமிர்தம் என்று கருதுவார். உறவுக்காரப் பெண் ஒருவருக்கு கோடை காலம் முழுதுமே பச்சடி, ஊறுகாய், சாலட், ஐஸ்க்ரீம், ஜாம், வற்றல், காரக்குழம்பு என்று மாம்பழம் ஏதாவது ஒரு ரூபத்தில் உணவு மேஜையில் இருக்க வேண்டும். இப்படி ஒரேயடியாக மாம்பழ உணவுகளில் அடிக்ட் ஆகி முழுவதுமாக அதை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டும் இருக்கக் கூடாது என்பார்கள் அவர்களது வீட்டுப் பெரியவர்கள். அவர்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

நாம் இன்று மாம்பழத்தோடு சேர்த்து உண்ணத் தகாத உணவுப் பொருட்கள் எவை என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

1. மாம்பழத்துடன் தயிர்

2. மாம்பழத்துடன் ஐஸ்க்கிரீம்

3. மாம்பழத்துடன் சிட்ரஸ் பழங்கள்

4. மாம்பழத்துடன் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள்

5. மாம்பழத்துடன் காரசாரமான பிற உணவுகள்

மாம்பழத்துடன் தயிர்...

தயிர்சாதத்திற்கு மாம்பழத்தை தொட்டுக் கொண்டு சாப்பிட பலருக்கு பிடித்திருக்கிறது. ஆனால், இது செரிமானத்திற்கு உகந்ததல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மாம்பழம் இயல்பாகவே சூட்டை உண்டாக்கக் கூடியது, தயிரோ அதற்கு எதிரான குணநலன்களைக் கொண்டது. நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவே நாம் உணவில் தயிர் சேர்க்கிறோம். இப்படி இரண்டுமே எதிர் எதிர் குணங்களுடன் இருப்பதால் உடலின் செரிமானச் செயல்பாட்டில் ஏற்றத் தாழ்வு உண்டாகி பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது . இது வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

மாம்பழத்துடன் ஐஸ்க்ரீம்...

ஐஸ்க்ரீமுடன் மாம்பழம் சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டிய செயல். ஆனால் இன்று பிரபலமான அனைத்து ஐஸ்க்ரீம் பார்லர்களிலும் மாம்பழ சீசனில் ஃப்ரெஷ் ஆக நறுக்கிய மாம்பழங்களை கப்பில் இட்டு அதன் மீது வெனிலா, பட்டர்ஸ்காட்ச், பிஸ்தாச்சியோ என நாம் விரும்பும் ஏதாவது ஐஸ்க்ரீம் டாப்பிங் செய்து தருகிறார்கள். உடலில் சூட்டைக் கிளப்பக்கூடிய மாம்பழங்களை குடலைக் குளிர்விக்கக் கூடிய ஐஸ்க்ரீம்களோடு சேர்த்து உண்ணக்கூடாது என்கிறது உணவியல் மரபு. சூடான உணவை குளிர்ச்சியான உணவுடன் கலந்து உண்ணும் போது அவ இரண்டுக்குமிடையே நிலவும் வெப்பநிலை வேறுபாடானது செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்று உபாதைகளில் கொண்டு விடும் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.

மாம்பழத்துடன் சிட்ரஸ் பழங்கள்...

மாம்பழத்துடன் சிட்ரஸ் வகைப் பழங்களான ஆரஞ்சு, கிவி, பெர்ரிப் பழங்கள் போன்றவற்றை சேர்த்து உண்ணக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம் இந்தப பழங்களுடன் இணைத்து மாம்பழம் உண்ணும் போது நமது உடலில் Ph (அமில காரச் சமநிலை) பாதிப்படைகிறது. இது பாதிப்படைந்த அடுத்தபடியாக நலிவடைவது செரிமான மண்டலம். உடலில் செரிமானப் பிரச்சனை ஒன்று மட்டும் இருந்தால் போதும் அதுவே மற்றெல்லா பிரச்சனைகளையும் கை பற்றி இழுக்காத குறையாகக் கொண்டு வந்து விட்டு விடும். பிறகென்ன ஆசையாகச் சாப்பிடும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பிறகு சாப்பாடு என்றாலே வயிறு வலிப்பது போல உணர ஆரம்பித்து

விடுவோம். அந்த அளவுக்கு இந்த இணக்கமற்ற உணவுகள் நம்மைப் பாடாய்ப்படுத்தி விடும். ஆகவே, இனிமேல் எப்போதாவது ஃப்ரூட் சாலட்டுகளில் இப்படி சிட்ரஸ் பழங்களோடு மாம்பழத்துண்டு களைக் கலந்து தருகிறார்கள் எனில் முதல் வேலையாக வேண்டாம் என்று மறுத்து விடுங்கள்.

மாம்பழத்துடன் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள்...

மாம்பழத்தில் சர்க்கரை இருப்பது நமக்குத் தெரியும். கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களிலும் தண்ணீருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் சேர்க்கப்படுவது சர்க்கரை மூலக்கூறுகளே. ஆக, மாம்பழம் + சர்க்கரை நிறைந்த இந்தக் குளிர்பானங்கள் இரண்டையும் ஒருங்கே சாப்பிட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து என்ன நடக்கும்? பெரிதாக ஒன்றுமில்லை... உடனடியாக உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு மடமடவென எகிறி அபாய கட்டத்தை தொட்டுக் கொண்டு நிற்கும். ஆகவே இந்த விஷயத்தில் நாம் மிக மிகக் கவனமாக இருந்தாக வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.

மாம்பழத்துடன் காரசாரமான உணவுகள்...

சிலருக்கு ஞாயிறு விடுமுறை என்றாலே மதியம் நன்றாகக் காரசாரமான அசைவ உணவு சாப்பிட்டு விட்டு தட்டு நிறைய அரிந்த மாம்பழங்களை கடைசியாக ஒரு வெட்டு வெட்ட வேண்டும். சைவம் என்றால் காரக்குழம்பு சாப்பிட்டு விட்டு கடைசியாகச் சிலர் மாம்பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். இது தவறான பழக்கம் என்கிறது ஆயுர்வேதம். மாம்ப்ழம் காரமான உணவுகளுடன் வினை புரிந்து வயிற்று உப்பிசம், உணவு எதுக்களித்தல் போன்ற பிரச்சனைகளில் கொண்டு விடுகிறது. உடலாரோக்யத்தைப் பொருத்தவரை இது நல்லதல்ல! ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சனைகளுக்கு இது போன்ற உணவுப் பழக்கங்கள் தான் மூலமாகின்றன. எனவே இப்படி உண்பதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

மாம்பழத்திற்கு மட்டுமல்ல, நாம் உண்ணக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் எந்தெந்த உணவுகளை சேர்த்து உண்பது? எவை எவற்றை சேர்த்து உண்ணக்கூடாது என்று முன்பே வகுத்து வைத்திருக்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். அதை நாம் முறையாகப் பின்பற்றாவிட்டால் அவை எல்லாமே இணக்கமில்லாத உணவுகள் அதாவது விருத் அன்னா வாக மாறி விடுகின்றன என்பதே நிஜம்.

உதாரணத்திற்கு பிரியாணி சாப்பிட்டு விட்டு லெமன் ஜூஸ் அருந்துவது ...

கீரையுடன் மீன் சாப்பிடுவது இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இனி அவற்றைத் தவிர்த்து விடுவதே உத்தமம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com