ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை தங்கம்!

ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை தங்கம்!

ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெகானா நகரை ஒட்டிய பகுதிகளில் லித்தியத்தின் இருப்பு பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு அதிகாரிகளின் கூற்று உண்மை எனில் இந்த செய்தி இன்னும் சில மாதங்களில் மிகப்பரந்த அளவில் பேசுபொருளாகக் கூடும். வெகுசமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் தாது இருப்புக்களை விட இங்கு காணப்படும் லித்தியம் இருப்புக்களின் கொள்ளளவு அதிகம் என இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளும் கூடத் தெரிவித்துள்ளனர்.

அதாவது இந்தியாவின் மொத்தத் தேவையில் 80 சதவீதத்தை இங்கிருந்து கிடைக்கும் லித்தியத்தைக் கொண்டே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று இதன் மூலமாக நம்பப் படுகிறது. இதுவரை லித்தியத்தின் தேவைக்காக இந்தியா சீனாவை நம்பியே இருந்து கொண்டிருக்கிறது. இப்போது ராஜஸ்தானில் கிடைத்திருக்கும் செய்தியின் அடிப்படையில் பார்த்தால் இந்த விஷயத்தில் சீனாவின் ஏகபோகம் முடிவுக்கு வரும் என்றும், வளைகுடா நாடுகளைப் போல ராஜஸ்தானின் அதிர்ஷ்டமும் உயரும் என்றும் நம்பப்படுகிறது.

லித்தியத்திற்கு முன்பே ரென்வட்டில் ஆட்சி செலுத்திய டங்ஸ்டன்!

லித்தியம் ஒரு இரும்பு அல்லாத உலோகமாகும், இது மொபைல்-லேப்டாப், மின்சார வாகனங்கள் மற்றும் இன்னபிற சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது.மேற்கண்ட தேவைகளுக்காக இதுவரையிலும் இந்தியா முற்றிலும் விலையுயர்ந்த வெளிநாட்டு லித்தியம் சப்ளைகளை நம்பி காத்திருக்கிறது. இப்போது இந்திய புவியியல் ஆய்வு மையம் ( GSI ) தெகானாவைச் சுற்றி லித்தியம் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய மூலங்களைக் கண்டறிந்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள லித்தியம் இருப்புக்கள் தெகானாவின் ரென்வட் மலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இங்கிருந்து தான் டங்ஸ்டன் கனிமங்கள் ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்குமாக வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 1914 ஆம் ஆண்டு தெகானாவில் உள்ள ரென்வட் மலையில் ஆங்கிலேயர்கள் டங்ஸ்டன் கனிமத்தை கண்டுபிடித்தனர்.

சுதந்திரத்திற்கு முன், இங்கு தயாரிக்கப்பட்ட டங்ஸ்டன் (Tungsten) கனிமங்கள் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்திற்கான போர்க் கருவிகள் மற்றும் ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப்

பிறகு, நாட்டின் ஆற்றல் மற்றும் சுகாதாரத் துறையில் அறுவை சிகிச்சை கருவிகள் தயாரிக்கும் துறையிலும் இது பயன்படுத்தப்பட்டது. அப்போது இங்கு சுமார் 1500 பேர் வேலை செய்து வந்தனர். அதன்பின்னர், டங்ஸ்டன் கனிமங்களை சீனா குறைவான விலையில் விற்கத் தொடங்கியதான் காரணமாக இந்தியாவின் டங்ஸ்டன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக ராஜஸ்தானில் செயல்பட்டுவந்த தொழிற்சாலை மூடப்பட்டது.

சுரங்கத் தொழிலும் மீண்டும் தலையெடுக்க வைத்த லித்தியம்!

இந்நிலையில் நெடுங்காலத்திற்குப் பிறகு இப்போது இந்த மலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள லித்தியம் இருப்பானது ராஜஸ்தான் மாநிலத்தை மட்டுமல்ல மொத்தமாக இந்தியாவின் தலைவிதியையே மாற்றும் அளவுக்கு நிச்சயமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லித்தியம் ஏன் முக்கியம்?

லித்தியம் என்பது உலகின் மிக இலகுவான மற்றும் மிக மென்மையான உலோகமாகும், இது பேட்டரியால் இயங்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் தேவைப்படுகிறது. இது இரசாயன ஆற்றலைச் சேமித்து மின் ஆற்றலாக மாற்றுகிறது.

இன்று வீட்டில் உள்ள அனைத்து சார்ஜ் செய்யக்கூடிய எலக்ட்ரானிக் மற்றும் பேட்டரியில் இயங்கும் கேஜெட்டிலும் லித்தியம் உள்ளது. இந்த காரணத்திற்காக, உலகம் முழுவதும் லித்தியத்திற்கு மிகப்பெரிய தேவை உள்ளது. உலகளாவிய தேவை காரணமாக, இது “வெள்ளை தங்கம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு டன் லித்தியத்தின் உலக மதிப்பு சுமார் ரூ.57.36 லட்சம் என்று கூறப்படுகிறது.

புவி வெப்பமயமாதலைக் கருத்தில் கொண்டு உலகம் முழுவதுமே ஆற்றல் மாற்றம் நடைபெற்று வரும் நிலையில்... ஒவ்வொரு நாடும் எரிபொருள் ஆற்றலில் இருந்து பசுமை எரிசக்திக்கு வேகமாக முன்னேறி வருகிறது. அதையொட்டி விமானப் பொருட்கள் முதல் காற்றாலை விசையாழிகள், சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், மொபைல்கள் மற்றும் வீட்டில் உள்ள சிறிய மற்றும் பெரிய

சார்ஜ் செய்யும் சாதனங்கள் வரை லித்தியத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவிருக்கும் வெள்ளைத் தங்கம் லித்தியம்!

உலக வங்கி அறிக்கையின்படி, 2050-ம் ஆண்டுக்குள் லித்தியம் உலோகத்திற்கான உலகளாவிய தேவை 500 சதவீதம் அதிகரிக்கும். இந்தக் கண்ணோட்டத்தில், ராஜஸ்தானில் அபரிமிதமான லித்தியம் இருப்பு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் எனக் கணக்கிடப் படுகிறது.

21 மில்லியன் டன்கள் என உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்பு தற்போது பொலிவியா நாட்டில் உள்ளது. அதையடுத்து, அர்ஜென்டினா, சிலி மற்றும் அமெரிக்காவிலும் பெரிய லித்தியம் இருப்புக்கள் உள்ளன. இருந்த போதிலும், 5.1 மில்லியன் டன் லித்தியம் இருப்பு வைத்திருக்கும் சீனா, உலக சந்தையில் தொடர்ந்து ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது.

இந்தியாவும் தனது மொத்த லித்தியம் இறக்குமதியில் 53.76 சதவீதத்தை சீனாவிடமிருந்து தான் வாங்க வேண்டும். 2020-21 ஆம் ஆண்டில், இந்தியா 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள லித்தியத்தை இறக்குமதி செய்தது, அதில் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள லித்தியம் சீனாவிலிருந்து வாங்கப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், ராஜஸ்தானில் காணப்படும் லித்தியம் படிவுகள் சீனாவின் ஏகபோகத்தை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும், பசுமை எரிசக்தி விஷயத்தில் நாடு தன்னிறைவு அடைய முடியும் என்றும் அதிகாரிகள் நம்புகிறார்கள்.

லித்தியம் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்யமான கதை…

ராஜஸ்தானில் லித்தியம் இருப்பைக் கண்டுபிடித்த கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், உயர்தர டங்ஸ்டன் கனிமங்களைக் கண்டறிய GSI ஆய்வுக் குழு தெகானாவை சென்றடைந்தது. அங்கு சென்றடைந்த பிறகு தான் GSI க்குத் தெரிய வந்திருக்கிறது, அங்கு டங்ஸ்டனைக் காட்டிலும் லித்தியம் இருப்பு மிக அதிகம் என.

29 மார்ச் 2023 அன்று பாராளுமன்றத்தில் நாகௌர் எம்பி ஹனுமான் பெனிவாலின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சுரங்க மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ராஜஸ்தானின் தெகானாவில் உள்ள உயர்ந்த மலைப்பகுதிகளான ரென்வட் ஹில்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரமான டங்ஸ்டன் தனிமங்களைக் கண்டறிய GSI மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் தெரிவித்திருந்தார்.

GSI ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், GSI ஆய்வுக் குழு உயர்தர டங்ஸ்டன் மற்றும் லித்தியம் தவிர மேலும் 4 கனிமங்களின் இருப்புகளை G2 நிலை ஆய்வில் கண்டறிந்துள்ளது.

GSI ஆய்வுக் குழுவின் டங்ஸ்டன் தேடுதல் வேட்டையின் போது தெகானா அருகே லித்தியம் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பார்மர், ஜெய்சால்மர் உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் லித்தியம் படிவுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வளைகுடா நாடுகளைப் போலவே ராஜஸ்தானும் செல்வத்தில் திளைக்கலாம்…

ஆய்வுக் குழுவினர் லித்தியம் ஆய்வுப் பணிகளை முடிந்த அளவுக்கு விரைவுபடுத்தி வருவதாகத் தெரிவித்தனர். எனவே கூடிய விரைவில் இங்குள்ள G2 நிலையை ஆராய்வதன் மூலம் சுரங்கத்திற்கான ஏலத்தை மேற்கொள்ள முடியும்.

சுரங்க ஏலம் மிகப்பெரிய அளவில் நிகழும் போது ராஜஸ்தான் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும். மக்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரமும் உயரும். இதையொட்டி உலக அளவில் லித்தியத்துக்கான தேவையின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரமும் நிச்சயமும் மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகென்ன வளைகுடா நாடுகளைப் போலவே ராஜஸ்தானும் செல்வத்தில் திளைக்க வேண்டியது தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com