பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை பாயுமா?

பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை பாயுமா?

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் கோரிக்கையை ஏற்று உரியநடவடிகைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவரை பதவி நீக்கக் கோரி தில்லி, ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் நடந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்பிய வினீத் போகத்தை கடுமையாக திட்டியதாகவும், பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் வினீத் போகத் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, ரவி தஹியா உள்ளிட்ட 50 பேர் போராட்டக் களத்தில் குதித்தனர். மேலும் பிரிஜ் பூஷன் மட்டுமல்லாமல் பயிற்சியாளர்களும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறினர்.

லக்னெளவில் உள்ள தேசிய பயிற்சி முகாமிலும் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியில் அத்துமீறல் நடப்பதாக குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்திய மல்யுத்த வீரர்கள்கூட்டமைப்பை கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை போட வேண்டும், தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பிரிஜ் பூஷன், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு சர்வாதிகார போக்குடன் நடக்கவில்லை. நிர்வாகத்திலும் ஊழல் இல்லை. என்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. அப்படியிருக்கையில் நான் ஏன் பதவி விலக வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். என் மீதான புகாரை நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார். மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கூட்டமைப்புக்கு புதிதாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிலரின் தூண்டுதல் பேரில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்கின்றனர் என்று அவர் பதில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த சூழலில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து இரண்டாவது சுற்றுபேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வீரர்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் அதுவரை பிரிஜ் பூஷன் தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை தாற்காலிகமாக முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

குத்துச்சண்டை வீரர் மேரி கோம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில், டோலோ பானர்ஜி, மல்யுத்த வீரர் யோகேஷ் தத், சஹதேவ் யாதவ், அல்கந்ந்தா, மற்றும் இருவர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவிரிவான விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அதுவரை பிரிஜ் பூஷன், பதவியிலிருந்து விலகி இருப்பார் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். எனவே போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் வினோத் தோமரை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

வினோத் தோமர், மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குடன் நெருக்கமாக இருந்ததாகவும், அவர்தான் கூட்டமைப்பின் அன்றாட பணிகளை கவனித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

விளாயாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உறுதியால் பல வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களின் அத்துமீறல்களை சகித்துக்கொண்டு வருகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சமீபத்திய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

சமீபத்தில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண் பயிற்சியாளர் புகார் அளித்ததை அடுத்து ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் பதவி விலக நேர்ந்தது அனைவருக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சைக்கிள் பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா, பெண் சைக்கிள் வீராங்கனைக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும், வெளியில் சொன்னால் உனது வாழ்க்கையையே அழித்துவிடுவேன் என்று மிரட்டியதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதேபோல 2021 ஆம் ஆண்டு தடகள வீராங்கனை ஒருவர், நாகராஜன் என்ற பயிற்சியாளர் 2013 முதல் 2020 வரை பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் 7 பேரும் இதேபோன்ற புகார்களைத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நாகராஜன் கைது செய்யப்பட்டார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் இதுவரை என் மீது ஒருவர்கூட பாலியல் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை வீராங்கனைகள் அவரது மிரட்டலுக்கு பயந்து வாய்மூடி மெளனமாக இருந்திருக்கலாம்.

இப்போது விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து அவர் மீதான புகாரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை அவர் நிரபராதி என அறிவிக்கப்பட்டால் குற்றம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com