உலக பிரெய்லி தினம்! (ஜனவரி-04)

உலக பிரெய்லி தினம்! (ஜனவரி-04)

பார்வையும், கற்றுத்தந்த பாடமும்!

உடல் உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றால் பயனில்லை என்பதனை “சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூறும். குறளும், உனமும், செவிடும், மாவும், முருளும் உளப்பட வாழ்நர்க்கு என்பேர் எச்சம் என்றிவை எல்லாம் பேதமை அல்லது ஊதியம் இல்” என்று புறநானூறு கூறுகின்றது. 

இவைகளில் சிதடும் என்பவை கண்பார்வை இல்லாத தன்மையாகும். பிண்டம் என்பது வடிவற்ற தசைத்திறன் ஆகும். மா என்பது விலங்கு வடிவமாகக் குழந்தை பிறத்தல் ஆகும். இவ்வாறு குறைபாடுயுடைய உடலமைப்புகளைப் பற்றிக் கூறுமிடத்தில் ஆசிரியரின் அறிவு நுட்பமும் அக்காலத்தில் காணப்பட்ட உடல் குறைபாடுகள் பற்றியும் அறிய முடிகிறது. வாய் மட்டும் பேச இயலாதவர்களை “உடம்பி னுரைக்கு முறையா நாவின்” என்றும் அவர்கள் அரண்மனைகளில் பணி செய்தனர் என்றும் முல்லைப் பாட்டு பதிவு செய்துள்ளது. சித்தர் சிதடர் சிதலைபோல் வாயுடையார் துக்கர் துருநாமர் தூக்குங்கால்-தொக்கவருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள் ஒரு நோயும் இன்றி வாழ்வார். (சிறுபஞ்சமூலம்) 

பார்வை ஊனம் என்பது ஓரளவுக்கு மட்டுமோ, முழுமையாகவோ இருக்கக்கூடும். அது பிறவியிலும் இருக்கலாம். பின்னரும் வரலாம். பார்வையிழப்புகளில் பாதியளவு தடுக்கக்கூடியவை என்று மதிப்பிட்டுள்ளனர். பொதுவாகவே பார்வையை முற்றாகப் பறிக்கிற பெரிய நோய்கள் தொடக்கத்தில் எந்த அறிகுறையையும் காட்டுவதில்லை. ஆனால் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் ஊனத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமானதுதான். 

கண்ணிலிருந்து சுமார் 30-ல் முதல் 40செ.மீ தூரத்தில் பேப்பரையோ, புத்தகத்தையோ வைத்துப்படித்தால் அவருக்கு கண்பார்வை சரியாக இருக்கிறதென்று அர்த்தம். இதற்குப் பதிலாக, கண்ணுக்கு ரொம்ப கிட்ட வைத்துப் பார்த்தாலோ, அல்லது ரொம்ப தள்ளி வைத்துப் பார்த்தாலோ அவருக்குக் கண் பார்வையில் குறைபாடு இருக்கிறதென்று அர்த்தம். மனிதனைப் போன்று, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் துல்லியமான, கூர்மையான கண் பார்வை கண்டிப்பாகத் தேவை. குறிப்பாக கண்பார்வை மிக, மிக நன்றாக தெளிவாக இருக்க வேண்டும். அதனால் தான் கழுகு எப்படி இருக்கும் என்று கேட்டால் இரண்டு கண், இரண்டு இறக்கை உள்ளது தான் கழுகு என்று சொல்வார்கள். 

உடலை ஒப்பிடும்போது மிகப்பெரிய கண்களை உடையவை பறவைகள். யானையின் உடலை ஒப்பிடும் போது அதன் கண்கள் மிக மிகச் சிறியவை. தரையில் வாழும் முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகப்பெரிய கண்களையுடைய பிராணி நெருப்புக்கோழி. இதன் கண்களின் நீளம் சுமார் 5 செ.மீட்டர் ஆகும். இதைப்போல் பலவற்றை கூறலாம். 

louis braille
louis braille

பார்வையிழந்தவர்கள் தொடு உணர்வால் படிக்கும் பிரெய்லி முறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்லி, இவர் பிரான்ஸ் நாட்டிற்கு அருகிலுள்ள கூப்விரே என்ற ஊரில் 1809-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம்தேதி பிறந்தார். தந்தை செருப்பு தயாரிப்பவர். ஒய்வு நேரத்தில் சிறுவன் பிரெய்லி அப்பாவின் பட்டறையில் விளையாடுவார் ஒரு நாள் கம்பியை வைத்து விளையாடும் போது அந்தக் கம்பி பிரெய்லியின் கண்ணில் குத்திவிட்டதால் இரத்தம் வழிந்தது. கண்ணில் குத்திய கம்பி பார்வையின் நரம்பையே பாதித்துவிட்டது. அந்த நரம்பு மற்ற நரம்புக்கும் தொடர்புடையது. அதனால் மற்றொரு கண்ணிலும் பார்வை போய்விட்டது. 

ஆனாலும் பிரெய்லி பார்வை போனதைப் பற்றி வருந்தாமல் துறு, துறு சிறுவனாகவே இருந்தார். பள்ளியில் கரும்பலகையும் புத்தகத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும் ஆசிரியர் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு சிறந்த மாணவராக வலம் வந்தார். தொடக்கக் கல்வியை முடித்தபின் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார். மேற்படிப்பைத் தொடரும் போதுதான் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள சிரமம் இருப்பதாகத் தோன்றியது. அந்நேரத்தில் பிரெஞ்சு ராணுவத்தில் இரவு நேர எழுத்து என்ற முறையை அறிமுகம் செய்தனர். 12 புள்ளிகளை அடையாளமாகக் கொண்டு ராணுவ வீரர்கள் விஷயத்தைப் புரிந்து கொள்வார்கள். இதை உருவாக்கியவர் சார்லஸ் பார்ப்பியர். இந்த முறை சிரமமாக இருந்ததால் எல்லோராலும் படிக்க முடியவில்லை. எனவே பிரெஞ்சு ராணுவம் இந்த முறையைக் கைவிட்டது. ஆனால் இந்த முறை பார்வையற்றோர் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கும் இதேபோல சிரமங்கள் ஏற்பட்டன. 

பிரெய்லி இந்த சிரமங்களைக் களைந்து ஒரு புதிய உத்தியைக் கண்டுப்பிடித்தார். அவரின் அன்றைய முயற்சியின் பலனாகத்தான் பார்வையற்றோரால் எளிதாய் படிப்பதற்கு பிரெய்லி முறை உருவானது. பார்வைக்குறைபாடு முற்றாக இழந்தவர்கள் அல்லது பெருமளவுக்குப் பார்வை தெரியாதவர்கள் இயக்கத்தின் போது தடைகளை உணர்ந்து கொள்ள தகவல் தொடர்பு நுட்பம் சேர்ந்த குச்சிகள், கம்புகள் பயன்படுகின்றன. கேளா ஒலி நுட்பத்தை பயன்படுத்தி எக்கோ லொகேஷன் சிக்னல் என்ற எதிரொலியால் இடமறியும் சமிக்ஞைகள் மூலம் உண்டாகும் அதிர்வுகள் அல்லது தொடு உணர்வு அல்லது ஒலி மூலமாக எந்தவிதமான நிலப்பரப்பிலும் தடைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. 

வாசிப்பது என்பது மிகவும் அத்திவாசியமான தினசரி வேலையாகும். செய்தித்தாள் அல்லது பாடப்புத்தகம் மட்டுமின்றி விலைப்பட்டியல் போன்றவற்றைப் படிப்பதும் இதில் அடங்கும் இந்த வேலையைச் செய்ய பார்வையற்றவர்களுக்கு பெரும் துணையாக உதவு நுட்பம் பயன்படுகிறது. ஆப்டிகல் கேரக்டர் ரீடர் என்ற நுட்பம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பேசும் புத்தகத்திற்கான சர்வதேசத் தர அளவான டெய்ஸி தரமே இதற்கு அளவு கோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அல்பினிஸம் குறைபாடு உள்ள நபர்களுக்குப் பள்ளியிலும், வேலைப்பார்க்கும் இடத்திலும், ஏனைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவ வீடியோ மேக்னிபையர் என்ற காணொளிப் பெருக்கி நுட்பம் உதவுகிறது. காணொளிப் பெருக்கிகளில் உள்ள முரண் தகவுகளை மாற்றியமைத்து, அசௌகரியமோ, கோர்வோ ஏற்படாமல் காட்சிகளை பெருக்கிப் பார்த்துக் கொள்ளமுடியும் இப்படி பல தொழில்நுட்பங்கள் இப்போது பெருகினாலும், பிரெய்லி முறையை உருவாக்கியவரை யாராலும் மறக்க முடியாது.

(இன்று ஜனவரி-4) லூயிஸ் பிரெய்லி பிறந்ததும், உலக பிரெய்லி தினமும் இன்றுதான்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com