தலை முடிக்கு ஏற்ற இயற்கையான ஹேர் கண்டிஷனர் எது தெரியுமா?

தலை முடிக்கு ஏற்ற இயற்கையான ஹேர் கண்டிஷனர் எது தெரியுமா?

-தி.ரா.ரவி.

பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது தலைமுடி தான். எந்த வயதினரைக் கேட்டாலும் ‘எனக்கு முடி கொட்டுது, சரியா வளரமாட்டேங்கிது’ என்று புலம்புவார்கள். தலைமுடி பராமரிப்பில் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நாம் நிறைய பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருளை வைத்து நம் தலை முடியை மிகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்கலாம்.

நமது தலைமுடிக்கு ஏற்ற இயற்கையான ஹேர் கண்டிஷனர் தேங்காய் எண்ணெய் தான்.  தினமும்  ஐந்தாறு சொட்டுகள் தேங்காய் எண்ணெயை  உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, ஒரு விரலால் எடுத்து தலையில் முடியின் வேர்க்கால்களில் படுமாறு பரவலாகத் தடவி மென்மையாக மசாஜ் செய்து கொள்ளவும். இது தலையை ஈரப்பசையோடு வைத்திருக்கும். பேன் பொடுகு வராது. தலையில் உள்ள முடியின் வேர்க்கால்களை பாதுகாக்கும்.

தலைமுடியில் புரதத்தைத் தக்கவைக்கும். இதனால் முடி உதிர்வதைத் தடுத்து, உச்சந்தலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.தேங்காய் எண்ணெய் முடி இழைகளைச் சுற்றி ஒரு மெல்லிய அடுக்கை உருவாக்குவதன் மூலம் உலர்ந்த முடியைத் தடுக்க உதவுகிறது.  நம் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய் அதிகப்படியான வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக அடிக்கடி சிதைந்துவிடும். இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மாற்றாக செயல்படுகிறது.

வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தலையில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு அரப்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை அலசலாம். நிறைய பேருக்கு ஷாம்புவை உபயோகிக்க தெரிவதில்லை. நேரடியாக தலையில் ஷாம்பு போடக் கூடாது. முடியின் வேர்க்கால்களை பாதித்து முடிஉதிர்வுக்கு வழி வகுக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் ஷாம்புவில் அரை ஸ்பூன் தண்ணீர் கலக்கவும். தலையில் நான்கைந்து கப் தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்திக்கொண்டு ஷாம்பூவை விரல்களால் தொட்டு தலையில் வேர்க்கால்களில் படுமாறு தடவி வேண்டும். பத்து விரல் நுனிகளால் மசாஜ் செய்ய வேண்டும். உள்ளங்கைகளை  வைத்து அழுத்தித் தேய்க்கக் கூடாது. முடி உடைந்து உதிர்ந்து விடும். தலைக்கு குளிக்கும் முன் தலையை சீவி சிக்கெடுத்து அதன் பின்பு தான் தலைக்கு குளிக்க செல்ல வேண்டும் தலைக்கு குளித்து முடித்தவுடன் முடியை டவலால் நன்றாக முறுக்கிக் கட்டக்கூடாது மென்மையாக ஒரு துணியை சுற்றிக்கொள்ள வேண்டும். அதனை இயற்கையான முறையில் வெயிலில் அல்லது பேன் போட்டு காய வைக்கலாம்.  கண்டிப்பாக ஹேர் டிரையர் பயன்படுத்தக் கூடாது.

தேங்காய் எண்ணெய்யை தினமும் உபயோகித்தால், தலைமுடி பளபளப்பாகவும் ஆரோகியமாகவும் இருக்கும். நரைமுடிவருவது தள்ளிப்போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com