இயற்கையான முறையில் நம் அழகைக் கூட்ட சில எளிய வழிகள்!
குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அலம்பி அத்துடன் ஒரு சிமிட்டு உப்பு, மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து அரைக்கவும். இதனை முகம், கழுத்து, முழங்கைகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் பளிச்சென்று மாசு மருவின்றி இருக்கும்.
மருதாணி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து முடியை அலச நன்கு கறுத்து, நீண்டு வளரும்.
ரோஜா பூவின் இதழ்களை எடுத்து அத்துடன் சிறிது பன்னீரும், சந்தனமும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவ முகம் பொலிவுடன் இருப்பதுடன், நல்ல நிறமும் கிடைக்கும்.
வால் மிளகை ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து பாலில் அரைத்து தலைக்கு தடவி வாரம் இருமுறை குளிக்க பொடுகு தொல்லை இராது. பொடுகு இல்லை என்றாலே முடி நன்கு பளபளப்புடன் காணப்படும்.

செம்பருத்தி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து தலைக்கு தேய்த்து அலச முடி பட்டு போல் பளபளவென கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.
ஆரஞ்சு பழம் சாப்பிட்டதும் தோலை தூர எரியாமல் நறுக்கி வெயிலில் நன்கு காய விடவும். காய்ந்ததும் பொடி செய்து வைத்துக் கொண்டு சோப்பிற்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளிக்க நல்ல வாசமுடன், எந்த சரும நோயும் நம்மை அண்டாது.
சிலரிடம் அருகில் நின்று பேசினால் அவர்கள் வாயில் இருந்து ஒருவித நாற்றம் (வாடை) அடிக்கும். இதற்கு தினம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று அதன் சாறை உள்ளிறக்க வாய் நாற்றம் போய் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் படிகாரக் கட்டி ஒன்றை தூள் செய்து போட்டு நீர் விட்டு காய்ச்சி ஆறியதும் மூன்று வேளை வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் போய்விடும்.

சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருப்பு தட்டி இருக்கும். அதற்கு எலுமிச்சம் பழம் பிழிந்ததும் அதன் தோலை வைத்து இரண்டு முட்டிகளிலும் தேய்த்துவர கருப்பு நிறம் மாறி அவர்களின் தோல் நிறத்திற்கு வந்து விடும்.
சிலருக்கு புருவம் முடி அடர்த்தியாக இல்லாமல் மெல்லியதாக இருக்கும். இதற்கு இரவு படுக்க செல்லும் சமயம் சிறிது விளக்கெண்ணையை எடுத்து இரண்டு புருவங்களிலும் தடவி விட்டு காலையில் அலம்பி வர அடர்த்தியான புருவத்தை பெறலாம்.