பரஸ்பர நிதிகளில் என்.ஏ.வி (NAV) என்றால் என்ன ? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பரஸ்பர நிதிகளில் என்.ஏ.வி (NAV) என்றால் என்ன ? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ரஸ்பர நிதிகளில் NAV என்பது Net Asset Value. அதாவது, பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பு. இதனை இரண்டு விதங்களில் பார்ப்போம்.

1. புதிதாக தொடங்கப்படும் பரஸ்பர நிதியின்(New Fund Offer) சொத்தின் நிகர மதிப்பு(NAV)

2. ஏற்கனவே உள்ள பரஸ்பர நிதியின்(Existing Mutual Fund) சொத்தின் நிகர மதிப்பு (NAV)

1. புதிதாக தொடங்கப்படும் பரஸ்பர நிதியின்(New Fund Offer) சொத்தின் நிகர மதிப்பு;

பரஸ்பர நிதியானது (Mutual Fund), ஒரு நிதி மேலாண்மை நிறுவனத்தினால் (Asset Management Company), பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்று, தொடங்கப்படுகிறது. இது ஊர் கூடி தேர் இழுப்பதைப் போன்றது.

உதாரணமாக, புதிதாக தொடங்கப்படும் ஒரு பரஸ்பர நிதியின் சொத்து ரூபாய். 1 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனை, பல முதலீட்டாளர்களிடமிருந்து, திரட்ட விரும்பினால், சொத்தின் நிகர மதிப்பு (NAV) ரூபாய். 100 என்று நிர்ணயித்தால், மொத்த அலகுகளின் எண்ணிக்கை பின்வருமாறு கணக்கிடப்படும்.

நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த சொத்து மதிப்பு = ரூபாய். 1,00,000

நிர்ணயம் செய்யப்பட்ட சொத்தின் நிகர மதிப்பு (NAV) = ரூபாய். 100

மொத்த அலகுகளின் எண்ணிக்கை = 1,00,000 / 100 = 1,000 அலகுகள்.

எனவே, பரஸ்பர நிதிக்கு 1,000 அலகுகள் நிர்ணயிக்கப் படுகின்றன. ஒவ்வொரு அலகும், சொத்தின் நிகர மதிப்பில், அதாவது 100 ரூபாய்க்கு, விற்கப்படுகின்றன.

இந்தப் பணமானது பரஸ்பர நிதி நிறுவனத்தினால், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது

2. ஏற்கனவே உள்ள பரஸ்பர நிதியில் சொத்தின் நிகர மதிப்பு;

முன்பு குறிப்பிட்ட பரஸ்பர நிதியின் 1 லட்ச ரூபாய், சொத்தானது, ஒரு வருடத்திற்கு பின்னர், 10% வளர்ச்சி பெற்று, ரூபாய். 1,10,000 ஆகிறது என்று கணக்கில் கொள்வோம். இப்போது, சொத்தின் நிகர மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.

மொத்த சொத்து மதிப்பு = ரூபாய். 1,10,000

மொத்த அலகுகள் = 1,000

சொத்தின் நிகர மதிப்பு = மொத்த சொத்தின் மதிப்பு / அலகுகள் எண்ணிக்கை

சொத்தின் நிகர மதிப்பு = 1,10,000 / 1000 = ரூபாய். 110

இவ்வாறு, பரஸ்பர நிதியின் சொத்தின் மதிப்பு கூடிய காரணத்தினால், சொத்தின் நிகர மதிப்பு, NAV கூடி விட்டது.

பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பு தினந்தோறும் அறிவிக்கப்படும்;

செபியின் விதிமுறைகளின் படி, தினந்தோறும் சொத்தின் நிகர மதிப்பு அறிவிக்கப்பட வேண்டும்; சொத்தின் நிகர மதிப்பானது, தினமும் பங்கு சந்தையின் முடிவில், பரஸ்பர நிதி நிறுவனத்தால் கணக்கிடப்பட்டு அறிவிக்கப் படுகிறது. அடுத்த நாள் பங்கு சந்தை முடிவு வரை இது மாறாது.

பரஸ்பர நிதியின் மொத்த சொத்தின் மதிப்பு = பரஸ்பர நிதியின் சொத்துக்கள் - பரஸ்பர நிதியின் கடன்கள்

பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பு = பரஸ்பர நிதியின் மொத்த சொத்தின் மதிப்பு/ மொத்த அலகுகள்

சொத்தின் நிகர மதிப்பு (ஒரு அலகு விலை) = 1,10,000 / 1000 = ரூபாய். 110 என்று அன்றைய தினம் முடிவாகும்.

முதலீட்டாளர்களின் செயல்பாடுகளினால், பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பு மாறாது ;

முதலீட்டாளர்கள் ஏற்கனவே உள்ள பரஸ்பர நிதியினில் அலகுகள் வாங்கும் போது (buy), மீட்சி செய்யும் போது (redeem), சொத்தின் நிகர மதிப்பு மாறாது.

1. பரஸ்பர நிதியின் அலகுகள் வாங்கும் போது

2. பரஸ்பர நிதியின் அலகுகள் மீட்சி செய்யும் போது

1. பரஸ்பர நிதி அலகுகளை வாங்கும் போது;

உதாரணமாக, ஒரு முதலீட்டாளர், இந்த பரஸ்பர நிதியில், 10 அலகுகள் வாங்க எண்ணினால், பரஸ்பர நிதி நிறுவனமானது, அவரிடமிருந்து, 10 x 110 = 1100 ரூபாய் பெற்றுக் கொண்டு, பரஸ்பர நிதியின் சொத்துடன் இந்தப் பணத்தை இணைத்து விடும். இப்போது, பரஸ்பர நிதியின் மொத்த அலகுகளின் எண்ணிக்கை 1000 + 10 = 1010 என்று ஆகிவிடும். சொத்தின் நிகர மதிப்பு அதே ரூபாய். 110 தான்.

2. பரஸ்பர நிதியின் அலகுகளை மீட்சி செய்யும்போது;

ரஸ்பர நிதியின் அலகில் முதலீடு செய்துள்ளவர், தனது 5 அலகுகளை மீட்சி செய்ய எண்ணினால், அந்த அலகினை பரஸ்பர நிதி நிறுவனமே, திரும்ப பெற்றுக் கொண்டு, அதற்கான தொகையை முதலீட்டாளரிடம் கொடுத்து விடும். 5 x 110 = 550 ரூபாய். இதனை, பரஸ்பர நிதியின் சொத்தில் கழித்துக் கொண்டு, முதலீட்டாளரிடம் 550 ரூபாயைத் திரும்பக் கொடுத்துவிட்டு, பங்கின் மொத்த அலகுகளின் எண்ணிக்கையில், 5 ஐ கழித்து விடும். இப்போது, பரஸ்பர நிதியின் மொத்த அலகுகளின் எண்ணிக்கை 1000 - 5 = 995 அலகுகள். சொத்தின் நிகர மதிப்பு அதே ரூபாய். 110 தான்.

பரஸ்பர நிதியின் சொத்தின் மதிப்பு கூடுவதன் மூலமே, பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பும் கூடும்.

நல்ல பரஸ்பர நிதியின் அலகுகளில் முதலீடு செய்வதால், அவற்றின் சொத்தின் நிகர மதிப்பு கூடும்போது, நாம் அலகுகளை மீட்சி செய்து, நல்லதொரு லாபத்தினைப் பெற முடியும். பரஸ்பர நிதி போன்ற அருமையான முதலீடுகளைப் பயன்படுத்திக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com