நெல் கொள்முதலுக்கு கூடுதல் விலை: விவசாயிகள் வரவேற்பு!
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், நெல் மூட்டைகள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி முக்கியமான விளைச்சல் காலமாகும். ஜூன் மாதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டதற்குப் பிறகு சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதேநேரம் அதற்கு முன்பாக போர்வெல்ஸ் சாகுபடி, ஆழ்துளைக்கிணறு சாகுபடிகளை விவசாயிகள் கோடைகாலத்திலேயே தொடங்குவர். இது முன்பட்ட குறுவை என்று அழைக்கப்படுகிறது.
இந்த முன்பட்ட குறுவை சாகுபடி பணியைத் தொடங்கிய விவசாயிகள் ஒட்டுமொத்த குறுவை சாகுபடி முடிந்து அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் வரை நெலை பாதுகாத்து வைத்திருப்பர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் துறைச் செயலாளர் டெல்லிக்குச் சென்று மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி முன்கூட்டியே நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் செய்யும் பணியைத் தொடங்குவதற்கான ஆணையைப் பெற்று இருக்கின்றனர்.
இதனால் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய நெல் கொள்முதல் பணி நடப்பு ஆண்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி இன்று தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் 350 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்றைய தினம் 81 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கொள்முதல் நிலையங்கள் வழியாக முன்பட்ட குறுவையை சாகுபடி செய்த விவசாயிகள் தங்கள் நெல் இருப்புகளை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கின்றனர். மேலும், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.
இவ்வாறு மத்திய அரசின் ஆதார விலை மற்றும் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையோடு சேர்த்து குவின்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் நெல் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு குறுவை நெல் கொள்முதல் தொகையை விட கூடுதல் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் ஆளும் திமுக அரசு சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.