பயிர் காப்பீட்டு திட்டம்: 57 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய நிறுவனங்கள்: முழுமையான அலசல்!

பயிர் காப்பீட்டு திட்டம்: 57 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய நிறுவனங்கள்: முழுமையான  அலசல்!

2016ஆம் ஆண்டு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் ஏற்படுத்தப்பட்ட பிறகு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 57 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவினுடைய முக்கிய தொழிலாக இருப்பது விவசாயம். குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் இந்தியாவினுடைய 65 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களிலே ஈடுபட்டுள்ளனர். இதனாலேயே இந்தியாவினுடைய முதுகெலும்பு என்று விவசாயத்தை குறிப்பிடுகின்றோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு திட்டங்களை, சலுகைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் இழப்பீடுகளால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர்க் காப்பீடு பதிவு செய்ய பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு பல்வேறு வகையான பயிர் காப்பீட்டு திட்டங்கள் மறு வரையறை செய்யப்பட்டு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் என்று மாற்றப்பட்டது.அதன் பிறகு பயிர் காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. இதன் விளைவாக பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் துறை நிறுவனங்கள் பயிர் காப்பீட்டில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம் தற்போது காப்பீட்டு நிறுவனங்களின் அதிகப்படியான லாபம் ஈட்டும் கருவியாக மாறி இருக்கிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது குறுவை சாகுபடிக்கான காப்பீட்டுத் தொகையை தற்போது வரை அறிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

7 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள் அடைந்த லாபம்

2016 ஆம் ஆண்டு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 57,647 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.2016 - 2017 ஆம் நிதியாண்டில் பிரீமியம் 21, 948 கோடி, காப்பீட்டுத் தொகை 16, 826 கோடி, தனியார் நிறுவனங்கள் ஈட்டிய லாபம் 5,121 கோடி, 2017 - 2018 நிதியாண்டில் பிரீமியம் 24,468 கோடி, காப்பீட்டுத் தொகை 22,081 கோடி, ஈட்டிய லாபம் 2,123 கோடி, 2018 -2019 ஆம் நிதியாண்டில் பிரீமியம் தொகை 29, 697 கோடி, காப்பீட்டுத் தொகை 29,336 கோடி, ஈட்டிய லாபம் 361 கோடி, 2019- 2020ஆம் நிதியாண்டில் பிரீமியம் தொகை 32,362 கோடி, காப்பீட்டுத் தொகை 27, 372 கோடி, ஈட்டிய லாபம் 4990 கோடி, 2020 - 2021 ஆம் நிதியாண்டில் பிரீமியம் தொகை 31, 689 கோடி, காப்பீட்டு தொகை 17, 2079 கோடி, ஈட்டிய லாபம் 10,918 கோடி, 21 -22 நிதியாண்டுகளில் பிரீமியம் தொகை 29,598 கோடி, காப்பீட்டுத் தொகை 17,881 கோடி, ஈட்டிய லாபம் 11,717 கோடி, 22 - 23 நிதியாண்டுகளில் பிரீமியம் தொகை 27,100 கோடி, காப்பீட்டுத் தொகை 5,760 கோடி, ஈட்டிய லாபம் மிக அதிகமாக 22,140 கோடியாகும்.

இவ்வாறு ஒவ்வொரு நிதியாண்டும் காப்பீட்டு துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைவதாகவும், விவசாயிகள் ஏமாற்றப்படுவதாகவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், பிரீமியம் தொகை குறைவாக இருக்கிறது, மேலும் காப்பீடு செய்வதற்கான காலம் நீண்ட நாட்கள் இழுத்தடிக்கப்படுவதாகவும், இதனால் 70 சதவீதம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்.

மேலும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகைகள் பல்வேறு காரணங்களால் தனியார் துறை நிறுவனங்களால் மறுக்கப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தையும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாபத்தையும் சந்திக்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் முன்பு இருந்ததைப் போல பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு திட்டத்தில் ஈடுபடும் என்ற பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com