சிறுதானியங்களின் கொள்முதல் சரிவு: அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்!

அமைச்சர் ஸ்மிருதி இராணி
அமைச்சர் ஸ்மிருதி இராணி

நாடு முழுவதும் தற்போது சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக சிறுதானியங்களை நுகர்வோர்கள் அதிகளவு வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் சிறுதானிய கொள்முதல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் எம். எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் உணவு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கான வல்லமை மிக்க சிறுதானியம் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.இதில் காணொளி காட்சி வாயிலாக ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை பேணுவதற்கு சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுதானியங்கள் ஆற்றல்மிக்க ஊட்டச்சத்தாகும். அதை அனைவருக்கும் சமமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.அதே சமயம் சிறுதானிய கொள்முதல் மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல்வேறு வகையான இயற்கை மாற்றங்களால் கொள்முதல் சரிவை சந்தித்து வருகிறது. விவசாயத்தினுடைய நலனை பாதுகாக்க மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப சிறுதானிய உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் சிறுதானியப் பயன்பாடு முக்கிய அங்கம் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. அதனால் சிறுதானிய உற்பத்தியில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. சிறிய வயதில் சிறுதானியம் அதிகம் உட்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. எனவே பாதுகாக்கப்பட்ட ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com