
நீண்டகால சாகுபடியான சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்வதற்கான காலம் தற்போது தொடங்கி இருக்கிறது. அதேசமயம், தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய நீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் 10.55 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடுவது குறித்த குழப்பத்தில் உள்ளனர்.
இந்திய நெல் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் டிசம்பர் முதல் ஜனவரி மாத காலகட்டத்தில் நவரை, ஏப்ரல் முதல் மே சொர்ணவாரி, மே முதல் ஜூன் வரை கார், ஜூன் முதல் ஜூலை வரை குறுவை, ஜூலை முதல் ஆகஸ்ட் வரை முன் சம்பா, ஆகஸ்ட் மாதம் சம்பா, செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பின் சம்பா, தாளடி, அக்டோபர் முதல் நவம்பர் வரை பின் தாளடி ஆகிய காலங்களாக பிரித்துப் பயிரிட்டு வருகின்றனர். இத்தனை போகங்கள் பயிரிடப்படுவதன் காரணமாகவே தமிழ்நாடு நெல் உற்பத்தியில் பிரதான மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால், நடப்பாண்டில் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் வடகிழக்கு பருவமழை பெருமளவில் குறைந்திருக்கிறது. மேலும், வரக்கூடிய காலங்களிலும் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், காவிரி நீர் தமிழகம் முழுவதும் வருவது உறுதி செய்ய முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான சம்பா மற்றும் தாளடி பயிரிடுவதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் விவசாயிகள் இருக்கின்றனர். மேலும், நடப்பாண்டில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசி கொள்முதல் செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இதற்காக கூடுதலான கொள்முதல் தொகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் நடப்பாண்டில் நெல் பயிரிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நடப்பாண்டில் போதிய அளவு நீர் கிடைக்குமா என்று தெரியாததால் விவசாயிகள் நெல் பயிரிட காலம் தாழ்த்த முடிவு செய்து இருக்கின்றனர். இதனால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூரில் 3.37 லட்சம் ஏக்கர், திருவாரூரில் 3.75 லட்சம் ஏக்கர், நாகப்பட்டினத்தில் 1.62 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறையில் 1.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில் என்று மொத்தமாக 10.55 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிரிடத் தயாராக உள்ள நிலையில், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
அதேசமயம், போர்வெல் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் மூலம் பாசனம் செய்யப்படும் நிலங்களில் மட்டும் தற்போது விவசாயிகள் பயிரிடத் தொடங்கி இருப்பது குறிப்பித்தக்கது.