விவசாயிகள் ஆற்றலை உற்பத்தி செய்பவர்களாக மாற வேண்டும்: அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு!

விவசாயிகள் ஆற்றலை உற்பத்தி செய்பவர்களாக மாற வேண்டும்: அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு!

‘விவசாயிகள் விளைபொருட்களை விளைவிப்பதோடு மட்டும் நிற்காமல், ஆற்றலை உற்பத்தி செய்பவர்களாகவும் மாற வேண்டும்’ என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

மேலும் அவர், “இந்தியாவில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால், விவசாயிகள் பயனடைவது கிடையாது. கோதுமை, அரிசி, சோளம், கம்பு போன்ற பயிர்களை பயிரிடுவதால் மட்டும் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு விடப்போவதில்லை. விவசாயிகளின் வாழ்க்கை அப்படியேத்தான் இருக்கிறது. விவசாயிகள் தங்களுடைய பார்வையை மாற்றி புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். மின்சாரம், எரிசக்தி போன்றவற்றை உற்பத்தி செய்பவர்களாக விவசாயிகள் மாற வேண்டும். தற்போது அதுதான் தேவைப்படுகிறது. மேலும், விவசாயிகளும் அதன் மூலம் லாபத்தை ஈட்ட முடியும், நாடும் வளர்ச்சி அடையும்.

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களில் எத்தனால் இருக்கிறது. தற்போது இந்திய அரசு பெட்ரோலிய பொருட்களில் 20 சதவீதம் எத்தனாலை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. எரிபொருளாக, மின்சாரப் பொருளாகப் பயன்படும் எத்தனாலை விவசாயிகள் உற்பத்தி செய்தால் அதன் இறக்குமதி குறையும், நாட்டின் உள்நாட்டு பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் எத்தனால் நிலையங்களை அமைத்து வருகிறது. எத்தனால் பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும், எத்தனாலை பயன்படுத்தி மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியும். இப்படி முக்கிய ஆற்றலாக விளங்கும் எத்தனாலை வெளியில் இருந்து வாங்குவதற்கு பதிலாக, விவசாயிகளே உற்பத்தி செய்தால் நாட்டின் நிதிநிலை மேம்படும், வேலை வாய்ப்பு பெருகும், வறுமை ஒழியும், உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையும், கிராமப்புறங்கள் மேம்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com