பூக்கள் சாகுபடி அதிகரிப்பு; விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

பூக்கள் சாகுபடி அதிகரிப்பு; விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

பூக்கள் சாகுபடி அதிகரித்த நிலையில், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பூக்களைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் அதன் விலை மாறுபடும். பூக்களின் தேவை அதிகரிக்கும் நாட்களில் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதும், தேவை குறைவான நாட்களில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதிலும் முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்கள் என்றால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த நிலையில், செண்டு பூ என்று சொல்லக்கூடிய செவ்வந்திப் பூ விளைச்சலில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாமந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுப காரியங்கள், துக்க காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் மாலைக்கு செவ்வந்தி பூ அதிகம் பயன்படுத்தப்படுவதால் எப்போதுமே செவ்வந்தி பூவுக்கு தேவை இருந்துகொண்டே இருக்கும். அதிலும் முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் செவ்வந்தி பூவின் விலை பல மடங்கு அதிகரிக்கும். தற்போது செவ்வந்தி பூ நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பூக்களின் சாகுபடி அதிகரித்து உள்ளதால் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது விநாயக சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிப்பூ தற்போது 1500 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அரளிப் பூ தற்போது 200 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ 70 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை 700 ரூபாய்க்கும், 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரோஸ் தற்போது 180 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட துளசி 50 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மரிக்கொழுந்து 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மதுரை மற்றும் திருவாரூர் சந்தைகளில் பூக்களை விற்பனைக்கு எடுத்து வந்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும், சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் போர்வெல்கள் மூலமாகவும், கிணற்று நீர் மூலமாகவும் அதிகம் செலவு செய்து சாகுபடி செய்தோம். இந்த நேரத்தில் பூக்களின் விலை குறைந்து விடுமோ என்று எண்ணி இருந்த நேரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com