மலைக்க வைக்கும் மலைப்பூண்டு விலை: காரணம் என்ன?

மலைக்க வைக்கும் மலைப்பூண்டு விலை: காரணம் என்ன?

நீலகிரி மலைப்பூண்டு 200 மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக பூண்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் என்பது முக்கிய பிரச்னையாக மாறி இருக்கிறது. இந்தியாவில் நிலவும் பருவநிலை மாற்றம் மற்றும் வட மாநிலங்களில் கொட்டித் தீர்த்த மழை, அதேசமயம் தென் மாநிலங்களில் போதிய அளவு மழையின்மை என்று பல்வேறு பிரச்னைகள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாது, விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தது, பொதுமக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டது என்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் நடந்ததால் இது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாய பொருட்களின் விளைச்சலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில், தற்போது அமைதியாக உயர்ந்து வரும் நீலகிரி மலை பூண்டின் விலை மக்களுக்கு பெரும் அடியாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து பூண்டு விவசாயி ஒருவர் கூறும்போது, தமிழ்நாட்டின் மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதனால் அதிக அளவிலான காரம் நிறைந்ததாக அது இருக்கும். இதனாலேயே இந்தப் பூண்டுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் தனி மவுசு உண்டு. மேலும், பலர் நீலகிரி மலைப்பூண்டு என்று கேட்டு வாங்கும் அளவுக்கு தனக்கென்று தனி இடத்தை அது பிடித்திருக்கிறது.

‘சிறப்புப் பெற்ற நீலகிரி மலைப்பூண்டு நீலகிரியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு நீலகிரி மலைப்பூண்டு கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது’ என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள், ‘வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் நீலகிரி மலைப்பூண்டின் தேவை அதிகரித்தது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு வருடங்களாக போதிய வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தைக் கண்டனர். அதனால் கடந்த இரண்டு போகங்களில் குறைவான அளவிலேயே நீலகிரி மலைப்பூண்டு நடவு செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது போகத்துக்கான அறுவடை காலம் தொடங்கி இருக்கிறது. தற்போது அறுக்கப்படும் பூண்டுகள் தட்டுப்பாட்டின் காரணமாக மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூண்டு விவசாயிகள் இந்த ஆண்டு அதிக லாபத்தை சந்திக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com