
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மனிதர்கள் இல்லாமல் மற்ற உயிரினங்களால் தாராளமாக வாழ முடியும். ஆனால், மற்ற உயிரினங்களின் உதவியின்றி மனிதர்களால்தான் வாழ முடியாது. மற்ற உயிரினங்களின் அழிவால் உணவுச் சங்கிலி மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மனிதர்கள் தங்களுடைய லாபத்துக்காக இயற்கையை அழித்து வருவதால் பல பேரிடர்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. இதனால் மலைகளையும் காடுகளையும் நம்பி வாழும் உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
காட்டில் வாழும் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் இருக்கின்றன. இதில் சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்தே விட்டன. முற்றிலும் அழிந்துபோன விலங்குகளை மீட்பதற்கு அரசு மேற்கொள்ளும் திட்டங்களால் எந்தவித பயனும் இல்லை. இத்தகைய திட்டங்கள் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு மேலும் சிரமத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருந்த சிவிங்கிப் புலிகள் தற்போது ஒன்று கூட இல்லை. இவை மிகவும் வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி விலங்காகும். இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம் இந்தியாவில் இந்தப் புலிகள், வளர்ப்பு உயிரினங்களாக இருந்ததே ஆகும். அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இந்த புலிகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. தற்போது இந்தியாவில் முழுமையாக அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை மீட்டெடுக்கும் விதமாக இவற்றை ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவர அரசு திட்டமிடப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான தென்னாப்பிரிக்க காட்டுப் பகுதியிலிருந்து இந்தப் புலிகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட உள்ளன.
இதுகுறித்து பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், "இந்தியாவில் மணிப்பூர் மான், வாலில்லா குரங்குகள் மற்றும் கானமயில் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இத்தகைய விலங்குகளைப் பாதுகாக்க முயற்சி எடுக்காமல் சிவிங்கி புலிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது விளம்பரத்துக்கானதாக மட்டுமே இருக்க முடியும். அந்தமானில் காடுகள் அழிக்கப்பட்டு யானைகளும் வண்டிகளில் அடிபட்டு இறக்கின்றன. ஆனால், இவற்றையெல்லாம் அரசு கண்டுகொள்வதில்லை.
காட்டு உயிரினங்களை பாதுகாக்க விரும்பினால் காடுகளை முதலில் பாதுகாப்பது அவசியமாகும். அரசு இதற்காக ஒதுக்கும் நிதிகள் போதுமானதாக இருந்தாலும், அவற்றின் கொள்கைகள் முறையாக இல்லை. இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறி இருக்கிறார்.