'O' பிளட் குரூப்பும்; கொசுவும்!
நமக்குப் பிடிக்காத எதிரிகளில் தினசரி நமக்குத் தொல்லை தரும் முக்கியமான எதிரி யார் என்றால், அது கொசுதான். கொஞ்சம் அசந்தால் போதும், நமது உடல் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி விடும். அதனால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு, நமைச்சலால் கொசுவை பட்டென அடித்து, அதன் ரத்தத்தைக் கண்ட பின்னர்தான் நமக்கு அடங்கும்.
உலகிலேயே மிகவும் கொடூரமான நோய்க்கொல்லியாக கொசு இருந்து வருகிறது. மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் கொசு கடிப்பதனாலேயே பரவுகிறது. பெண் கொசுக்களே நமது ரத்தத்தை அதிகம் குடிக்கின்றன. ஏனென்றால், அவை முட்டையிடுவதற்குத் தேவையான புரதச்சத்து நம் ரத்தத்திலிருந்தே கிடைக்கிறது. ஆண் கொசுக்கள் பூக்களில் உள்ள தேனைக் குடித்தே உயிர் வாழ்கின்றன.
மனிதர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கொசுக்கள் அவர்களின் சுவாசத்திலிருந்து வெளிவரும் கரியமில வாயுவை வைத்துக் கண்டுபிடிக்கின்றன. மேலும், மனித உடலிலிருந்து வெளிவரும் அமோனியா வாசனையையும் கொசுவால் நுகர முடியும். கொசுக்கள் சில நபர்களை அதிகமாகக் கடிக்கும், சிலரை குறைவாகவே கடிக்கும். காரணம், கொசுக்கள் எல்லா விதமான ரத்தங்களையும் விரும்பிக் குடிப்பதில்லை. குறிப்பாக ஓ பாசிட்டிவ் ரத்தத்தையே கொசுக்கள் விரும்பிக் குடிக்குமாம்.
காரணம், இந்த வகை ரத்தத்தைக் குடிப்பதன் மூலம், கொசுக்களுக்கு ஹெச் ஆண்ட்டிஜன் அதிகமாகக் கிடைக்கும். இதனால் கொசுக்களுக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. இதனால் ஓ பாசிட்டிவ் ரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் அதிகமாகக் கடிக்கும். மேலும், கொசுக்களுக்கு அடர் நிறம் நன்றாகத் தெரியுமாம். கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் இருந்தாலும் அதுவே கொசுக்கள் முட்டையிடுவதற்கு போதுமானதாகக் கூறப்படுகிறது.
பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கொசுக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே, பௌர்ணமி இரவில் மற்ற நாட்களைக் காட்டிலும் இரவில் கொசுக்கடியை நாம் அதிகமாக உணர வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு உறங்கச் செல்லுங்கள்.