பின்னடைவை சந்திக்கும் வெங்காய விவசாயம்: என்ன செய்வது?

பின்னடைவை சந்திக்கும் வெங்காய விவசாயம்: என்ன செய்வது?

ந்தியாவில் வெங்காயம் முக்கியமான விளைபொருளாக இருக்கிறது. ஆனால், வெங்காய உற்பத்தி தற்போது சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் பதிவையும் காண்போம்.

வெங்காயம் முக்கியமான உணவுப் பொருளாகும். இதனால் வெங்காயத்தின் தேவையும் அதிகமாக இருக்கிறது. அதேசமயம், வெங்காயத் தட்டுப்பாடு இந்தியாவில் அவ்வப்போது அதிகரித்து வருவது வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக வெங்காயம் பல நேரங்களில் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட வரலாறும் இந்தியாவில் உண்டு.

உலக நாடுகளின் வெங்காய மொத்த உற்பத்தி அளவில் 40 சதவீதம் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்தியா உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய பருவநிலை மாற்றம், ஒரு பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம், மழையின்மை, மற்றொரு பகுதியில் அதிக அளவிலான மழை ஆகியவை உணவுப் பொருட்கள் விளைச்சலை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. அது வெங்காய விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

மேலும், வருங்காலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி மேலும் குறைந்து, விலை மிகக் கடுமையாக உயரும் என்று அரசின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 40 சதவீதம் வரியை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் ஏற்றுமதி குறைக்கப்பட்டு, உள்நாட்டு கையிருப்பை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், வெங்காய விவசாயிகள், ‘வெங்காயம் மிகப்பெரிய ஏற்ற, இறக்கங்களை சந்திக்கக்கூடிய விளைபொருளாக மாறி இருக்கிறது. என்னதான் வெங்காய விலை ஏறினாலும் பெரும்பான்மையான விவசாயிகள் பயனடைவதில்லை. விற்பனையாளர்களுக்குத்தான் அந்தப் பலன் சென்றடைகிறது. தற்போது கூட அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்துக்கு சரியான விலை கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே, வருங்காலத்தில் வெங்காயம் மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாட்டை தடுக்க அரசு நிலங்களை குறிப்பிட்ட பொருட்களை விளைவிக்கும் பகுதிகளாக அறிவித்து, அந்த விளைபொருட்களை அந்த இடத்தில் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுவதோடு, விளைச்சலும் அதிகரிக்கக் கூடும்.

குறிப்பாக, இந்தியாவில் மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெங்காயம் விளைச்சல் நடைபெறுகிறது. எனவே, தமிழ்நாடு அரசும் வெங்காய விவசாயிகள் மற்றும் விவசாயத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com