விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சிறுதானிய சாகுபடி!

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சிறுதானிய சாகுபடி!

சிறுதானிய உணவு வகைகள் பற்றி மக்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், மக்கள் அதிக அளவில் சிறுதானிய உணவுகளை விரும்புகின்றனர்‌. இதன் காரணமாக நிறைய விவசாயிகளும் சிறுதானிய சாகுபடிக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.

தற்போது மக்கள் மத்தியில் நிலவும் நவீன உணவுப் பழக்கத்தின் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் மக்களை எளிதில் பாதித்து விடுகின்றன. குறிப்பாக, தற்போது உலக மக்கள் தொகையில் 45 சதவீத மக்கள் பயன்படுத்தும் உணவுகளில் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லை என்று சர்வதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களும் மற்றும் அரிசி, கோதுமை போன்ற உணவு வகைகளே மக்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், மனிதர்களின் ஆயுள் காலம் குறையத் தொடங்கி விட்டது. முற்காலத்தில் சராசரியாக 100 வயது வரை வாழ்ந்த நிலையில், தற்போது 40 வயதிலேயே மாரடைப்பு மரணம் என்ற நிலை அதிர வைக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு பிரதான காரணம் உணவுப் பழக்கமே என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மீண்டும், ‘உணவே மருந்து’ என்று மக்கள் மாறத் தொடங்கி இருக்கின்றனர். இதற்காக மருத்துவ குணங்கள் நிறைந்த, தமிழர்களின் பாரம்பரிய உணவான சிறுதானிய உணவை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம், 1980ம் ஆண்டு 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவிலேயே சிறுதானிய விளைச்சல் நடைபெறுகிறது. தற்போது மக்களிடம் ஏற்பட்டிருக்கக்கூடிய விழிப்புணர்வு காரணமாக சிறுதானியங்களைப் பற்றி மக்கள் அதிகம் அறியத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் சிறுதானியங்களை தேடிச்சென்று உண்ணும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகை மீண்டும் வளரத் தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில், வரகு, கம்பு, குதிரைவாலி, திணை, சாமை, ராகி ஆகியவற்றின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தற்போது விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேநேரம், சிறுதானிய விளைச்சலுக்கு மற்ற பயிர்களுக்கு செலவிடும் தொகையை விட மிகக் குறைவாக செலவிட்டாலே போதுமானது. மேலும், குறைந்த அளவு தண்ணீர், குறைந்த பராமரிப்பு போன்றவை விவசாயிகளுக்கு கூடுதல் பயனாக அமைந்திருக்கின்றன. இது மட்டுமல்லாமல், சிறுதானிய விளைச்சலுக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை என்பதால், அதற்காகும் செலவும் மிச்சமாவதால் தமிழ்நாட்டில் தற்போது சிறுதானிய விவசாய உற்பத்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மேலும் நடப்பாண்டு, ‘சர்வதேச சிறுதானிய ஆண்டாக’ கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com