நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு!

நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு!

‘நில ஒருங்கிணைப்பு சட்டம் விவசாயிகளினுடைய நிலங்களையும், நீர்நிலைகளையும் தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை’ என்று தமிழ்நாடு விவசாய சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கம் இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.

‘இந்தச் சட்டம் நிலம் மற்றும் நீர், நீர் நிலைகள் மீது கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை பறிக்கக்கூடிய செயல்’ என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நிறைவேறும்பட்சத்தில் ஏழை எளிய விளிம்பு நிலை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலிவடைய வாய்ப்பு ஏற்படும். மேலும், அரசு அளிக்கும் சிறப்பு திட்டங்களுக்காக 100 ஹெக்டர் வரையுள்ள நிலங்களின் நீர்நிலைகளை தனியாருக்குக் கொடுப்பதற்கான வழியை உண்டாக்கும்.

ஏற்கெனவே பல்வேறு வகையிலான விவசாய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு பல்வேறு சட்டங்கள், செயல் வடிவங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் ஒரு புது சட்டத்தை உருவாக்கி இருப்பது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. ஏற்கெனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய நியாயமான விலை கேட்டு தற்போதும் போராடி வருகின்றனர்.

மேலும், இந்தப் புதிய சட்டம் பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு சாதமாக அமையும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அத்தகைய நிறுவனங்களுக்கு சாதகமாக நீர்நிலைகளை தாரைவார்க்கவே இந்தத் திட்டம் பயன்படும்.

விவசாயிகளுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு நிறுவனங்களினுடைய நலனை குறிப்பிட்டு தொழில் வளர்ச்சி என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இத்தகைய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே கைவிட வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com