இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை: இந்திய உணவுக் கழகம்!
‘இந்தியாவில் அரிசி கையிருப்பு விகிதம் மற்றும் கூடுதலான கொள்முதல் ஆகியவை சரியாக நடைபெற்று வருவதால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்று இந்திய உணவுக் கழக தலைவர் அசோக்குமார் மீனா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட இந்திய உணவுக் கழகத்தின் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை உணவுக் கழகத் தலைவர் அசோக்குமார் மீனா திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவில் தற்போது உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. போதுமான அளவு உணவு கையிருப்பை அரசு உறுதி செய்திருக்கிறது. மேலும், விளைச்சல் குறைந்து இருப்பதால் ஏற்றுமதி செய்ய பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இவையெல்லாம் உள்நாட்டு கையிருப்பை சீராக வைத்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காண வாய்ப்பு குறைவு. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட அரிசியினை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கோதுமை கையிருப்பிலும் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.
மேலும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் பொருட்டு, மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல ஏதுவாகவும் திறந்தவெளி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் காரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 60 கோடி மக்களுக்கு திறந்தவெளி சந்தைகள் மூலமாக உணவு தானியங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நடப்பு காரீப் பருவத்தில் 5.21 கோடி டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விவசாயிகள் அரிசியை நன்கு உலர வைத்து 17 சதவீத ஈரப்பதத்துடன் விற்பனைக்குக் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக நேரடி விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உரிய விலை கொடுத்து அரிசியை அரசு கொள்முதல் செய்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொகைகள் இணைந்து வழங்கப்படுவதால் விவசாயிகள் இதனால் பயனடைகின்றனர்.
மேலும், சிறுதானியம் கொள்முதல் செய்யும்பொழுதும் குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.