பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்தும் வழிகள்!

பார்த்தீனியம் களைச்செடிகளை கட்டுப்படுத்தும் வழிகள்!

பார்த்தீனியம் களைச்செடிகள் விஷத்தன்மை கொண்டதாகவும், மனிதன் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருப்பதால், இவ்வகை களைச்செடிகளை வளர விடாமல் தடுப்பது அவசியமாகும்.

களைச்செடிகளில் சில வகை முற்றிலும் பயன்பாடு அற்றதாக உள்ளன. அதிலும் சில வகை விஷச்செடிகளாகவும் உள்ளன. இவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பவையாக உள்ளன. இவ்வாறான களைச் செடிகளில் முதன்மையாக இருப்பது பார்த்தீனியம் செடிகள் ஆகும்.

பார்த்தீனியம் களைச்செடிகள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நிலப்பரப்புகளில் மிகவும் அதிகம் காணப்படுகின்றன. இவ்வகை களைச்செடிகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் விலங்குகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு பார்த்தீனியம் செடிகளே முக்கியக் காரணமாக இருக்கின்றன.

பார்த்தீனியம் களைச்செடிகள் மனிதர்களுக்கு ஆஸ்துமா, தொழுநோய் மற்றும் தோல் பிரச்னைகள் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கால்நடைகள் பார்த்தீனியம் செடியை உண்ணுவதில்லை என்றாலும், அவற்றை சுவாசிப்பதன் மூலமாக கால்நடைகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, பார்த்தீனியம் களைச்செடிகள் காலியிடங்கள், பயிரிடப்படாத பகுதிகளில் காணப்படுகின்றன. ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய்வேளை, சாமந்தி ஆகியவற்றை மழைக்காலங்களில் விதைப்பதன் மூலம் பார்த்தீனியம் செடி வகைகள் முளைக்காமல் தடுக்க முடியும். மழைப் பருவத்தில் மெக்சிகன் வண்டுகளின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மெக்சிகன் வண்டுகள் பார்த்தீனியம் செடிகளை வளர விடாமல் தடுக்கும். மேலும், பார்த்தீனியம் செடிகளை அகற்றும்பொழுது மிகுந்த கவனத்துடன் அகற்ற வேண்டும். முழுமையான கையுறைகள் அணிந்து வேரோடு பிடுங்கி அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.

மேலும், பார்த்தீனியம் செடிகள் அதிகமாகவும், மீண்டும் மீண்டும் வளரக்கூடிய இடங்களில் களைக்கொல்லிகளான அட்ராசின், 2 - 4-டி, கிளைபோசெட், மெட்ரிபூசன் ஆகிய களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி பார்த்தீனியம் செடிகளை வளர விடாமல் தடுக்க முடியும்.

இவ்வகை களைச் செடிகள் வளர்வதன் மூலம் அந்தப் பகுதிகளில் மற்ற செடிகள் வளர விடாமலும் இவை தடுக்கக்கூடும். இவை அதிக விஷத்தன்மை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com