குடற்புழு நீக்க நாள் - பிப்ரவரி 10

குடற்புழு நீக்க நாள் - பிப்ரவரி 10

குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்நாளில் குடற்புழுக்களால்  ஏற்படும் தொல்லைகள் குறித்தும், பாதுகாப்பு முறைகள் பற்றியும் சுகாதாரத் துறையினரால் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

குடற்புழுக்கள்  மனித உடலுக்குள் நுழையும் விதம்:

சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு, அசுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள், சரியாக வேகவைக் கப்படாத இறைச்சி வகைகள், அசுத்தமான சுற்றுப்புறம், திறந்த வெளிக்கழிப்பிடங்களைப் பயன்படுத்துதல், காலில் செருப்பு அணியாமல் நடப்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது போன்றவற்றால்  குடற்புழுக்கள்  மனித உடலுக்குள்  நுழைகின்றன. குழந்தைகள் அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில், மற்றும் அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடும்போது அவர்கள் உடலில் குடற்புழுக்கள் மண் குடியேறுகின்றன.

குடற்புழுக்களால் உண்டாகும் பாதிப்புகள்:

ருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு என குடற்புழுக்களில் பல வகைகள் உண்டு.  பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் மண்ணில் விளையாடும்போது கை விரல் நகங்களில் புகுந்துகொள்ளும். சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’எனப்படும் குறும்புழுக்கள் வெளிவரும். இவை சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, முடிவில் பெருங்குடலில் வந்து தங்குகின்றன.

கொக்கி புழுக்கள் குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இந்தப் புழு தாக்கியுள்ள நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ரத்தசோகை நோயையும் ஏற்படுத்தும். குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு உள்ளவர்கள், சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கி புழு பாதிப்பு மிக அதிகம்.

மேலும் நாள்பட்ட செரிமான பிரச்சனைகள், வயிற்றுப் போக்கு, வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், அடிவயிற்று வலி, மலப்புழை அரிப்பு, உடல் பலவீனம், சோர்வு, பசியின்மை, எடை குறைவு, மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு, பற்களை கொறிப்பது,  தோல் அரிப்பு, எரிச்சல்  போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

குடற்புழு  பாதிப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சுற்றுப்புறச் சுகாதாரம் மற்றும் சுயசுத்தம் பேணல், கழிப்பறைக்குச் சென்று வந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுதல், தெருவோர கடைகளில் உண்ணாமல் இருப்பது, ஈக்கள் மொய்த்த பண்டங்களை தவிர்ப்பது, காய்கறிகள், பழங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவிப் பயன்படுத்துதல், அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்த்தல், வெளியில் சென்று வந்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுதல், நகங்களை அவ்வப்போது வெட்டி சுத்தமாக வைத்தல், போன்றவை.

குடல் புழுவை வெளியேற்றும் வீட்டு வைத்திய முறைகள்:

சிறிதளவு பூண்டு அல்லது வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு தினம் காலை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் ஒரு தம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும். பிரண்டைத்தண்டுகளை மேல்தோல் நீக்கி, உப்பு,புளி,காரம் சேர்த்து, நெய்யில் வதக்கி  துவையல் செய்து சாப்பிடலாம்.  ஒரு  தம்ளர் இளம் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி  கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com