”சுரங்கம் வழியாகத் தப்பித்தது த்ரில்லிங் அனுபவம்” - அரவிந்த் - அருண் இரட்டை சகோதரர்களின் நேர்காணல்!

”சுரங்கம் வழியாகத் தப்பித்தது த்ரில்லிங் அனுபவம்” - அரவிந்த் - அருண் இரட்டை சகோதரர்களின் நேர்காணல்!

அரவிந்த் - அருண் தமிழ் சினிமாவில் இரட்டை சகோதர நடிகர்கள். சமீபத்தில் வெளிவந்த தக்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்கள்.

நமது கல்கி ஆன்லைன்க்காக இரட்டையர்கள் அளித்த பேட்டி:

முதலில் நம்மிடம் பேசுவது அரவிந்த்.

1.ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்களாக இருப்பது வரமா? சாபமா?

அரவிந்த்: ஒரு பக்கம் பார்த்தால் இது ப்ளஸ். நாங்கள் இருவரும் எங்கே சென்றாலும் சேர்ந்தே செல்வோம். எங்கள் உருவ ஒற்றுமையை பார்த்து நன்றாக பேசுவார்கள். போட்டோ எடுத்து கொள்வார்கள். நாங்கள் கவனிக்கப்படுவோம். இருந்தாலும் எங்களுக்குள் தனித்தனியாக இருக்கும் திறமையை எங்கள் இருவருக்கும் இருக்கும் பொதுவான திறமையாகத்தான் பலர் கருதுவார்கள் இது ஒரு மைனஸ் பாயிண்ட்தான்.எங்களின் தனித்துவம் சில நேரங்களில் பின்னுக்கு தள்ளப்படும்.

2.நீங்கள் இணைந்தே பல நிகழ்ச்சிகள் செய்தாலும் பணி என்று வந்து விட்டால் தனித் தனியே சென்று தானே ஆக வேண்டும்?

அரவிந்த்: வேலை என்று வந்து விட்டால் பிரிய நேரிடும் என்ற காரணத்தால்தான் நாங்கள் இருவரும் இணைந்து சொந்தமாக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி நடத்தி வருகிறோம். இருவரும் ஒன்றாக சேர்ந்து பள்ளி கல்லூரிகளில் படித்தோம். வேலைக்கு சென்றால் ஒரே இடத்தில் வேலை கிடைக்காது. வெளி மாநிலம் வெளிநாடு என்று செல்ல வேண்டி வரும்.இதை மனதில் கொண்டு ட்வின் ஹார்ட் என்டர்டைன்மென்ட் என்ற விளம்பர நிறுவனம் ஒன்றை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறோம். 

3. மீடியா துறைக்கு வந்தது எப்படி?

அரவிந்த்: 2015 ஆம் ஆண்டு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் வேலை செய்தோம். தமிழ் நாட்டில் உள்ள திறமையான டான்சர்களை கண்டறிந்து மீடியா வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செய்து வந்தோம். விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கேமராவிற்கு பின் இருந்து பல்வேறு கன்டென்ட்களை வழங்கி உள்ளோம்.

4. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?

"இதற்கு நான் பதில் சொல்றேன்" என்று அருண் பேச முன் வருகிறார்.

அருண்: நயன்தாரா மேடம் நடித்த ஐரா படத்திற்கு நாங்கள் காஸ்டிங் செய்தோம். ஐரா படத்தில் நயன்தாரா  மேடம் இரண்டு வேடங்களில் நடித்தார். இரட்டையர்கள் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு ஆண்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என நயன்தாரா மேடம் டைரக்டரிடம் சொன்னதால் டைரக்டர் எங்கள் இருவரையும் நடிக்க வைத்தார்.

5.உங்கள் உருவ ஒற்றுமையை உங்கள் பெற்றோர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

அருண்: மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார்கள். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் எங்கள் சொந்த ஊர். எங்கள் அப்பா கோவி. ராஜ மஹேந்திரன் செஞ்சிலுவை அமைப்பில் பணியாற்றியவர். எங்களது பெரிய அண்ணா வெளிநாட்டில் பணியாற்றுகிறார். நீடாமங்கலம் பள்ளியில் நாங்கள் ஒரு அடை யாளமாக இருந்தோம்.

6.உங்கள் இருவரின் மனைவியரும் இரட்டையர்களா?

மீண்டும் அரவிந்த் பேச வருகிறார்.

அரவிந்த்: இல்லை இருவரும் நெருங்கிய தோழிகள். சிறு வயது முதல் பழகி வருபவர்கள்.எங்கள் இருவரையும், குடும்பத்தையும்  புரிந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். என் மனைவியின் பெயர் பிரியா. தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுகிறார். அருணின் மனைவி வைஷாலி மருத்துவராக பணியாற்றுகிறார்.

7.உங்களில் யார் அண்ணன் யார் தம்பி? 

அரவிந்த்: நான் அண்ணன். அருண் தம்பி.

8.தக்ஸ் தந்த சிறை அனுபவம் எப்படி இருந்தது?

அரவிந்த்: பிருந்தா மாஸ்டருடன் பணியாற்றியது  எங்கள் இருவருக்கும் புது வித அனுபவமாக இருந்தது கதைக்கு இரட்டையர்கள் தேவை என்பதால் மாஸ்டர் எங்களை நடிக்க வைத்தார். பல பெரிய ஹீரோக்களை ஆட வைத்தவர் எங்களை நடிக்க வைத்து கற்றும் கொடுத்தார். ஒரு சுரங்கம் வழியாக  தப்பிப்பது திரில்லிங் அனுபவத்தைத் தந்தது.

9.உங்களின் எதிர்கால திட்டம் என்ன?

"திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுவது எங்கள் முதல் திட்டம் " என்கிறார்கள் கோரசாக இருவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com