"வட்டத்தை உடைக்கணும்" - 'அயலி' அபி நேர்காணல்!

"வட்டத்தை உடைக்கணும்" - 'அயலி' அபி நேர்காணல்!

நம் தமிழ் சமூகத்தில் பேச முடியாத, பேசத் தயங்கும் பெண் உடல் சார்ந்த பிம்பங்களை பேசி உள்ளது ஜீ 5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள அயலி வெப் தொடர். இந்த தொடரில் ஹீரோயினாக  நடித்துள்ள அபி நக்ஷத்ரா தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். இவரை பேட்டி எடுக்க இவரின் வீட்டிற்கு சென்றால், "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இப்பதான் காலேஜிலிருந்து வந்தேன்" என்றார் உற்சாகமாக.

அபி நக்ஷத்ரா கல்கி ஆன் லைனுக்கு அளித்த நேர்காணல் :

1. எப்படிக் கிடைத்தது இந்த அயலி வாய்ப்பு? 

அபி : என் அப்பா மணிகண்டன் எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். ரஜினி முருகன் படத்தில் அறிமுகம் ஆனேன்.நான் நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் உதவி இயக்குனர் ஆண்ட்ரூ மூலமாக, அயலி இயக்குனர் முத்து குமாரிடம் இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் நடிக்கும் படங்களில் என் அப்பா கேட்டு ஒகே செய்வார். அயலி கதையிலும் என் கேரக்டரை அப்பா கேட்டு ஒகே செய்தார்.

2. பெண் பூப்பெய்துவது தொடர்பான இந்த கதையை சொல்லும் போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது?

அபி : உண்மையில் பெண் உடல் தொடர்பான பல்வேறு மூடநம்பிக்கையில் இருக்கும் மக்களில் சிலருக்கு அறிவுறுத்தல் படமாக (education movie )அயலி படத்தை நான் உணர்ந்தேன். வேறு எந்த குழப்பமும் இல்லை.

3. உங்கள் கேரக்டரில் நடிக்க ஏதாவது ஹோம் ஒர்க் செய்தீர்களா?

அபி : உண்மையை சொன்னா எனக்கு என்ன தோணியதோ அதே போல நடித்தேன். டைரக்டர் சார் உனக்கு என்ன மனதில் எண்ணுகிறாயோ  அதே போல நடி என்ற சுதந்திரத்தை தந்துட்டார். சட்டையில் இங்க் கொட்டும் காட்சியில் நான் நன்றாக நடித்ததாக சொல்கிறார்கள். டைரக்டர் சார் தந்த ஊக்கத்தால், என் மனதுக்கு தோன்றியபடி நடித்த காட்சிதான் அது.

4. ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் எப்படி இருந்தது?

அபி: படத்தின் கதை ஒரு கட்டு பெட்டியான கிராமத்தை உங்களுக்கு காட்டியது. ஆனால் படபிடிப்புதளத்தில் ஷூட்டிங் நடக்கும் வீட்டிற்கு எதிரில் ஒரு வீடு இருந்தது.அந்த வீட்டில் தாத்தா பாட்டி என பலர் இருந்தனர். அங்கே உட்கார்ந்து ஜாலியாக அரட்டை அடிப்போம். டைரக்டர் ஆக்ஷன் சொல்லும் வரை பேசிக்கிட்டே இருப்போம்.

5. நீங்கள் படிக்கும் கல்லூரியில் உங்களின் அயலிக்கு ரியாக்ஷன் எப்படி இருந்தது?

அபி :  நான் ஸ்கூல் படிக்கும் என்னை ஒரு சினிமாவில் நடிக்கும் பொண்ணு என்ற கண்ணோட்டத்தில் தான் பார்த்தாங்க. கொஞ்சம் டிஸ்டன்ஸில் இருந்தாங்க. ஆனால் காலேஜ் ரொம்ப மகிழ்ச்சியான தருணங்களை தந்துகிட்டே இருக்கு. நான் இப்போ வேல்ஸ் யூனிவர்சிட்டியில் பிடெக் முதல் வருஷம் படிக்கிறேன். கல்லூரி வாழ்க்கை அயலியோட துவங்கி இருக்கு. நண்பர்கள் என் நடிப்பை, கேரக்டரை கேட்டு சந்தோசப்படுறாங்க.

6. அயலியில் சொல்லப்படும் பெண்ணின் உடல் சார்ந்த பார்வைகள் இந்த காலகட்டத்திலும் இருப்பதாக நினைக்கிறீர்களா?

அபி : ஆண்களில் சிலர் மது, புகை போன்ற தீய பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்குள் நுழைய எந்த தடையும் இல்லை. ஆனால் பெண்ணிற்கு இயற்கையாக நிகழும் மாதவிடாய் நேரங்களில் ஏன் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை? இது பெண்ணை உடல் சார்ந்து பார்க்கும் பார்வைதானே? குழந்தை திருமணம் இன்னமும் நடப்பதாக செய்திகளில் படிக்கிறேன். எனக்கு தெரிந்த என் வயதுக்கு இணையான பெண் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் வீட்டு பெரியவர் குடும்ப சூழ்நிலை என்றார். குடும்ப சூழ்நிலைகளுக்கு முதலில் பலியாவது பெண்ணின் கனவுதான். 

7. பெண் சுதந்திரம் பற்றி...

அபி : முன்பு பெண்களை ஒரு வட்டத்திற்குள் வைத்து இருந்தார்கள் இப்போது அந்த வட்டத்தை பெரிதாக்கி உள்ளார்கள். இந்த வட்டத்தை உடைத்து வெளியே வர வேண்டும் என்பது தான் என் கருத்து.

8. இது போன்ற யதார்த்தமான படங்களில் நடித்தால் கமர்சியல் ஹீரோயினாக நடிக்க முடியுமா?

அபி : யதார்த்தம் கமர்சியல் எதுவானாலும் என் கேரக்டர் சரியாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

9.இப்போது நடிக்கும் படங்கள் பற்றி..... 

அபி :கிட் லிஸ்ட், சைலன்ட் உட்பட இன்னமும் சில படங்களில் நடிக்கிறேன்.   

10:சினிமாவைத் தாண்டி உங்களுக்கு பிடித்த விஷயம்?

அபி : டான்ஸ். பரதம், நாட்டுப்புற  நடனம் என பல நடன நிகழ்ச்சிகள் செய்துள்ளேன். நான் சினிமாவில் நடிக்க நடனமும் ஒரு காரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com