குறள்நெறிப்படி வாழ்ந்த மகிமாவின் கணவர்

நேர்காணல்
குறள்நெறிப்படி வாழ்ந்த மகிமாவின் கணவர்

அண்மையில் மறைந்த ஓவியர் மனோகர் தேவதாஸ் மறைவு குறித்து நெகிழ்கிறார் நடிகர் சிவகுமார்.

னோகர் தேவதாஸ், மிகச்சிறந்த ஓவியக் கலைஞர். ஓவியரும், திரைப்பட நடிகரும், சொற்பொழிவாளருமாக விளங்கும் சிவகுமாரின் ஆத்மார்த்தமான நண்பரான இவர், நேற்று (07.12.2022) அதிகாலை சென்னையில் காலமானார். அவர் மறைவை ஒட்டி பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருக்க, தன் மன உளப்பாட்டை, ‘குறள் நெறிப்படி வாழ்ந்த மேதை மனோகர்தேவதாஸ்’ என வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகுமார். அதற்குக் காரணம் அவரின் திருக்குறள் கதைகள் நூறில் ஒரு கதையின் நாயகனே இவர் என்பதுதான். இந்த விஷயத்திற்குள் போகும்முன் சிவகுமாரின் திருக்குறள் கதைகள் 100 பற்றி சிறிதேனும் அறிந்து கொள்வது நல்லது.

திரைப்பட நடிகர் சிவகுமாரின் திருக்குறள் கதைகள் 100 சமீபத்தில் நடந்த ஈரோடு புத்தகக் கண்காட்சி அரங்கில் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானோர் மத்தியில் 4 மணி நேரம் 100 கதைகள் சொல்லியிருக்கிறார். இதை சுமார் பத்து கேமராக்கள் படம் பிடித்துள்ளது. அதை விரைவில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று மூன்று நாள் தொடராக ஒளிபரப்ப உள்ளது. சாதாரண, எளிய மனிதர்கள் பலரும் எப்படியெல்லாம் திருக்குறள் நெறிப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதைச் சொல்லும் அனுபவப்பூர்வமான கதைகள் அவை. இந்த நிகழ்வுக்கு முன்னதாக இந்தக் கதைகளை இந்த திருக்குறள் கதைகள் 50 தலைப்பில் தமிழக அரசு சார்பாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. திருக்குறள் கதைகள் 100 எனும் தலைப்பில் நூலை அலையன்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்த நூறு குறள்களில் ஒரு திருக்குறளின் கதையாக வந்தவர் ஓவியர் மனோகர்தேவதாஸ். எப்படி? அதை சிவகுமாரின் வார்த்தைகளிலேயே கேட்போம்.

‘‘மனோகர் தேவதாஸின் பூர்வீகம் மதுரை. அவர் மாதிரி மதுரை நகரத்தை ஓவியங்கள் மூலம் வரைந்தவர்கள் உலகத்தில் யாருமேயில்லை. மீனாட்சி அம்மன் கோயிலாக இருக்கட்டும். கோபுரங்களாக இருக்கட்டும். சர்ச்சாக இருக்கட்டும், கோரிமேடு ஆக இருக்கட்டும். யானை மலையாக இருக்கட்டும். எல்லா இடங்களுக்கும் போய் புகைப்படங்களாக எடுத்து வந்து, அவை புகைப்படங்களா, ஓவியமா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு லைன் டிராயிங்குளாக வரைந்தவர்.

நான் ஸ்பாட் பெயிண்ட்டிங்தான் பண்ணுவேன். அதாவது ஓரிடத்தில் போய் உட்கார்ந்து அங்கேயே ஓவியம் வரையறவன் நான். இவர் புகைப்படங்களை எடுத்துட்டு வந்து, ஒரு புகைப்படத்தை மாதக்கணக்கில் வரைந்திருக்கிறார். இவரோட ஓவியங்களுக்கு இணையாக யாரையுமே சொல்ல முடியாது.

மகிமான்னு இவர் காதல் மனைவி. ரொம்ப புத்திசாலிப் பெண். மதுரை பூர்வீகம் என்பதால் அப்பப்ப சொந்த ஊருக்கு அந்தக்காலத்தில் இவங்க ரெண்டு பேரும் கார்ல போவாங்க. முப்பது முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடின்னு வச்சுக்குங்களேன். விழுப்புரம் வரைக்கும் மனோகர் தேவதாஸ் கார் ஓட்டிட்டுப் போயிருக்கார். நாலு மணி ஆயிடுச்சு. அங்கே டிபன் சாப்பிட்டிருக்காங்க. அப்புறம் கார் எடுத்திருக்காங்க. நான் ஓட்டறேன் தேவான்னு சொல்லி, இந்தம்மா கார் டிரைவர் சீட்ல உட்கார்ந்திருக்காங்க. அந்தம்மா கார் ஓட்டறதுல எக்ஸ்பர்ட். துரதிருஷ்டவசமாக முன்னாடி நீளமா ஒரு லாரி போகுது. அது பாம்பு ஊறிட்டுப் போற மாதிரி, சாலையோட இந்த முனைக்கும், அந்த முனைக்குமா ஜாலம் பண்ணீட்டு இருக்குது. எப்படித்தான் ஓவர் டேக் எடுக்கறதுன்னு யோசிச்சிட்டு வண்டி ஓட்டிட்டே இருந்தப்ப லெப்ட் சைடு போன லாரி ரைட் சைடு மாறினபோது கியரை மாத்தி ஓவர்டேக் எடும்மான்னு சொன்னான். அப்படி எடுத்த வேகத்தில் லெப்ட்ல போன லாரி சடால்ன்னு ரைட்ல வந்து காரைத் தூக்கி வீசிடுச்சு.

அதுக்கப்புறம் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் போடறாங்க. பாண்டிச்சேரியில். இந்தம்மாவுக்கு காயம் ஏதுமில்லை மனோகர் தேவதாஸ் ரத்தமாகி இருந்தார். சிகிச்சை கொடுக்கிறாங்க. ஆனா பாதிப்பு தலைகீழ். மனோகர் தேவதாஸ் குணமாகிறார் ஆனால் இந்தம்மா பார்ப்பாங்க. சிரிப்பாங்க. ஆனா இயற்கை உபாதை எதுவுமே போறது தெரியாது. கோட்டர் பிளிஜியான்னு ஒரு வியாதி, வாழ்நாள் முழுக்க இனி இவங்க இப்படித்தான் இருப்பாங்கன்னு சொல்றாங்க டாக்டர்கள். படுத்தபடுக்கையாக பெட் சோர் -அதாவது படுக்கைப் புண் வந்தா பக்கத்தில் யாருமே குடியிருக்க முடியாது. நாற்றம் தாங்காதுன்னு சொல்றாங்க. இவர் அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். வாசம் வராம நான் காப்பாத்தறேன்னு சொல்லி, ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை, முப்பத்தியஞ்சு வருஷம் அப்படியே படுக்கையில் வச்சுக் காப்பாத்தினார். பல் தேய்ச்சு விட்டு, மலஜலம் கழிக்க வச்சு, குளிக்க வச்சு, சோறு ஊட்டி, தண்ணி கொடுத்து, தலைசீவி படுக்க வச்சு எல்லாமே செய்தது இவர்தான். அப்படியே வாழ்ந்த அந்தம்மா 2007-ல் இறந்துட்டாங்க.

நானும் மணியம் செல்வமும் ஒரு நாள் பார்க்கப் போயிருந்தோம். இடையில் அவருக்கு கண்பார்வை போயிருச்சு. மனைவி இருக்கும்போதே அவருக்கு கண்பார்வை போயிருந்திருக்கு. அப்படியே மனைவியை கவனித்து வந்திருக்கிறார் இவர். இப்ப டோட்டலா நூறு சதவீதம் கண்பார்வை போயிருச்சு. நாங்க போறது சொன்னவுடனே வாசல்ல வந்து நிற்கிறார் அவர். வாங்க வாங்க சிவகுமார். வாங்க மணியம் செல்வம்ன்னு கைநீட்டி பிடிச்சு வீட்டுக்குள்ளே கூட்டீட்டுப் போனார். அப்படியே தடுமாறி மெல்ல உள்ளே போனவர், ‘இருங்க, என் மனைவி மகிமாவுக்கு மதுரை மல்லின்னா உசிரு. நீங்க வர்றீங்கன்னு சொல்லி மதுரையில் மல்லீப்பூ வாங்கி மாலை கட்டி வச்சிருக்கேன். இந்த மாலையை முதல்ல மகிமா படத்துக்குப் போட்டுட்டு அப்புறம் போய் உட்கார்ந்து பேசலாம்ன்னார். நாங்களும் அவர் கொடுத்த மாலையைப் போட்டுட்டு வந்து இவர்கூட பேச உட்கார்ந்தோம். மனுசன் படுஜாலியா பேசினார்.

அவருக்கு நூறு சதவீதம் கண்பார்வை தெரியாதுன்னு யாருமே நம்ப மாட்டாங்க. அப்படியொரு ஜாலிப் பேச்சு. அந்த மாதிரி ஒரு மனுசனைப் பார்க்க முடியாது. நாம துன்பம் வந்தால் சோகமாகி மூலையில் உட்கார்ந்து முடங்கிப் போயிடுறோம்ல. அவர் அதுபோல இல்லை. ரொம்ப நல்லா பேசிட்டு போண்டா, பஜ்ஜி எல்லாம் போட்டுக் கொடுத்தார். சாப்பிட்டோம். புறப்படும்போது எங்க கூடவே எழுந்திருச்சிட்டார். நாங்க, ‘இருங்க இருங்க. நீங்க சிரமப்படாதீங்கன்ன போது, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வாசல் வரைக்கும் போய் வழியனுப்பிட்டு வரணும்ன்னு மகிமா சொல்லியிருக்கா. அதை நான் செஞ்சாகணும்ன்னு கூடவே வந்து வாசல்ல நின்னு கைகொடுத்து அனுப்பி வைத்தார். இந்த மாதிரி மனுசங்களை நாம் பார்க்கவே முடியாது. இவங்க மாதிரி மனுசங்களுக்குத்தான் திருவள்ளுவர் ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று எழுதியிருக்கிறார். அதைத்தான் என் திருக்குறள் கதைகள் 100-ல் ஒன்றாக சொல்லியிருக்கிறேன்!’’ என்று முடித்துக் கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com