”நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்” - பொம்மை நாயகி இயக்குனர் ஷான் நேர்காணல்!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு சட்ட சாட்டையை சுழற்றி இருக்கிறது பொம்மை நாயகி திரைப்படம்.
பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்கி இருப்பவர் ஷான். இயக்குநர் R. கண்ணனிடம் உதவி இயக்குநராகவும், விளம்பரப் படங்களிலும் பணியாற்றியவர்.
நமது கல்கி ஆன் லைனுக்காக ஷான் அளித்த பிரத்யேக பேட்டி........
இது போன்ற பாலியல் சீண்டல்கள் செய்திகளிலும், திரைப்படங்களிலும் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தளத்தில் படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஷான் : நீங்கள் செய்திகளில் படிப்பது, திரைப்படங்களில் காண்பது, கேள்விப்படுவது என அனைத்தையும் தாண்டி பல மோசமான விஷயங்கள் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் நடக்கின்றன சொல்லப்படாத எழுபது சதவிகித விஷயங்களை சொல்லும் முயற்சிதான் பொம்மை நாயகி.
நீங்கள் பார்த்த ஏதாவது உண்மை சம்பவத்தை சொல்ல முடியுமா?
ஷான் : இந்த படத்திற்ககாக பல உண்மை நிகழ்வுகளை தேடி அலைந்தோம் கடலூர் மாவட்டத் தில் ஒரு பெரியவரை சந்தித்தேன். அந்த பெரியவரின் மகளுக்கு இருபத்திரண்டு வயது ஆகிறது. இப்பெண் பத்து வயது குழந்தையாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். அந்த நாட்களில் பஞ்சாயத்து பேசி முடித்து உள்ளார்கள்.பிறகு அந்த பெண்ணிற்கு நிலம் தருவதாக சொல்லி பிரச்சனையை முடித்து இருக்கிறார்கள். இப்போது நான் சென்ற போது அந்த பெரியவர் நிலத்தை பதிவு செய்து தர சொல்லி அலைந்து கொண்டிருந்தார். ஒரு நிலத்தை தருவதாக சொன்னால் பதிவு செய்து தரவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல்தான் சிலர் இந்த காலத்திலும் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
பொம்மை நாயகி யார்?
ஷான் : நான் பிறந்து வளர்ந்த கடலூர் மாவட்டத்தில் சிறு தெய்வங்கள் உள்ளன. இந்த தெய்வங்கள் பொம்மை போல சிறு வடிவங்களில் இருக்கும். இதை மையமாக வைத்துதான் பொம்மை நாயகி என்று பெயர் வைத்தேன்.
யோகிபாபு ஒரு காமெடியன். அவரை ஏன் தேர்வு செய்தீர்கள்?
ஷான் :வேறு எந்த ஹீரோவை நடிக்க வைத்தாலும் அந்த ஹீரோ படமாகத்தான் மக்கள் பார்ப்பார்கள். நாம் சொல்ல வந்த கருத்து ரீச் ஆகாமல் போய் விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.யோகிபாபு மக்களுக்கு நெருக்கமான நடிகர். சொல்ல வந்த கருத்து மக்களிடம் சரியாக செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் யோகிபாபுவைத் தேர்வு செய்தேன். நினைத்தது நிறைவேறியதாக நினைக்கிறேன்.
நீதிமன்றங்களில் ஏழைகளுக்கு நீதி கிடைப்பதை போல காட்டி உள்ளீர்கள். உண்மையில் நிலைமை அப்படி உள்ளதா?
ஷான் :இது போன்ற பாலியல் வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாமான தீர்ப்பு கிடைப்பதாக நினைக்கிறேன். இதை பல வழக்குகளில் உதாரணம் சொல்ல முடியும். உயர், உச்ச நீதிமன்றங்களில் தீர்ப்புகள் மாறுபடுகின்றன. மாநில, உச்ச நீதிமன்றங்கள் தலைநகரங்களில் இருப்பதால் பாதிக்கப்பட்ட எளிய மக்கள் செய்வது கடினமாக உள்ளது.
பாலியல் துன்புறுத்தல் விளிம்பு நிலை மக்களுக்கு நடப்பதாக காட்டியுள்ளீர்களே...இது அனைத்து பிரிவு பெண் குழந்தைகளுக்கும் நடக்கிறது தானே?
ஷான் : இது அனைத்து பிரிவு பெண் குழந்தைகளுக்கும் நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் ஓடுக்கப்பட்ட மக்கள் என்ற காரணத்தினாலும் நடக்கிறது. இதை என் படத்தில் சற்று அழுத்மாகவே சொல்லி இருக்கிறேன்.
அன்பு மருத்துவமனை, வட மாவட்டம் கதைக்களம்... இதை பார்க்கும் போது ஏதோ அரசியல் பின் புலம் உள்ளது போல தெரிகிறதே?
ஷான் : அன்பு என்ற பெயர் பல மருத்துவமனைகளுக்கு உள்ளது. நான் வட மாவட்ட பின் புலத்தை சேர்ந்தவன். இதை மனதில் வைத்துதான் கதை அமைத்தேன். மற்றபடி இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.
பாலியல் வன்முறைகளுக்கு தீர்வாக என்ன சொல்கிறீர்கள்?
ஷான் : குறைந்த பட்சம் பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவாக இருங்கள். பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளி போல பார்க்காதீர்கள். இந்த இரண்டு விஷயங்களை செய்தாலே போதும். நாம் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்று அர்த்தம்.