மனித உழைப்பால் மட்டுமே வெட்டப்பட்ட வாய்க்கால்...!!

மனித உழைப்பால் மட்டுமே வெட்டப்பட்ட வாய்க்கால்...!!

ப்போதுதான் பொக்லைன், ஜேசிபி, மின் தூக்கி எல்லாம் வந்து எந்திர மயமாகி விட்டது. ஓகே. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அதெல்லாம் இல்லவே இல்லை. அது போன்ற காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் சுமார் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் (எண்பத்தியாறு மைல்) நீளத்துக்கு, மனித உழைப்பினை மட்டுமே கொண்டு, “புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்” வெட்டப்பட்டுள்ளது. அப்போது முதல் அமைச்சர் காமராஜர். பொதுப்பணித் துறை அமைச்சர் கக்கன்.

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆறு. அதன் வலது கரையில் இருந்து வெட்டித் தொடங்கப்பட்டது, “புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்”. அப்போதைய சென்னை மராமத்து இலாகா துறையின் கீழ் இது திட்டமிடப்பட்டது. 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினேழாம் தேதியன்று அப்போதைய சென்னை மாகாண தலைமை அமைச்சர் (கல்வெட்டில் இப்படித்தான் உள்ளது) காமராஜர் நேரில் வந்து தொடங்கி வைத்துள்ளார்.

கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் முன் பகுதி வரை இது சுமார் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் நீளத்துக்கு வெட்டப்படுவதாக திட்டம் உருவாக்கி வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டன. அப்போதெல்லாம் மனித ஆற்றல், மனித உழைப்பு மட்டும்தான். தினசரி வேலைகளுக்காக சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஆண்களும் பெண்களுமாக நூற்றுக் கணக்கில் வந்து சேர்ந்தனர். இதற்குள் இடையில் கர்நாடகா அரசு, “தமிழகம் காவிரியில் புதிதாக ஒரு வாய்க்கால் வெட்டினால், கூடுதலாக காவிரி நீர் எங்களிடம் கேட்பார்கள். அதனால் தமிழகம் புதிதாக வெட்டும் வாய்க்காலுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று நீதிமன்றத்துக்குப் போனது. அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் அசரவில்லை. “எங்களுடைய நீர்ப்பாசன வசதிகளுக்காகத் தான் காவிரியில் நாங்கள் புதிதாக வாய்க்கால் வெட்டுகிறோம். எப்போதும் எங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கின்ற காவிரி நீரே போதும். நாங்கள் கூடுதலாக நீர் கேட்போம் என்று கர்நாடகா கவலைப்பட வேண்டாம்.” என்று பதில் மனு தாக்கல் செய்து, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் வெட்டும் திட்டப் பணிகள் தொடர்ந்து முடுக்கி விடப்பட்டன.

கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட எல்லை முகப்பு அடுத்து சற்று தூரம் வரை என்று நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆங்கங்கே வளைந்தும் நெளிந்தும் நீண்டும் வாய்க்கால் வெட்டி முடிக்கப்பட்டது. புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் இறுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப்பட்டி எனும் ஊருக்கு அருகேயுள்ள பிடாரி ஏரியில் கலப்பதாக நிறைவு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவு பெற இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குள் இடையில் காமராஜரும், அதன் துறை சார்ந்த அமைச்சர் கக்கனும் அவ்வப்போது வந்து பார்த்தும் சென்றுள்ளனர். அந்த இரண்டு ஆண்டுகளில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் வெட்டி முடித்து நிறைவு செய்யும் வரைக்குமாக மனித ஆற்றல் மற்றும் மனித உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒரு கோடியே எழுபத்தியிரண்டு லட்ச ரூபாய் செலவாகியுள்ளது.

“புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாக சுமார்  இருபத்தியொரு ஆயிரம் ஏக்கர் வயல்கள் நேரடியாகப் பாசன வசதி பெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, நங்கவரம் போன்ற பகுதிகளும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த வாய்க்கால் வழியாக சிற்சில பகுதிகளும் பாசன வசதி பெற்று வருகின்றன.

இப்பகுதியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் திட்டம் செயல்பட்டு வந்த காலங்களில், இப்பகுதியின் பொதுப்பணித் துறையில் நான் வேலை பார்த்து வந்தேன். புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் முதன்முதலாகத் திறக்கும் திறப்பு விழாவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக காமராஜரும் கக்கனும் இங்கு வந்திருந்தனர். அப்போது  பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் காமராஜரிடம், “சார் இந்தப் பகுதி பொதுமக்கள் உங்கள் சிலையையும் கக்கன் சிலையையும் இங்கு வைக்க வேண்டும் என்று ரொம்பவும்  விரும்புகிறார்கள்.” என்று சொன்னார்கள். உடனே காமராஜர், “என்னோட சிலை இங்கு எதுக்குன்னேன்? கக்கன் சிலை எதுக்குன்னேன்? அதெல்லாம் வேணாம்னேன். இங்கன வந்து தொடர்ந்து வேலை பார்த்தாங்கள்லே மம்புட்டியாளுங்க மத்த வேலை செஞ்சவுங்க, அவுங்கள்ல ஒரு பத்துப் பேரை நீங்களே முடிவு பண்ணுங்க. அந்தப் பத்துப் பேருக்கு மட்டும் சிலை வைங்க. அதுல ஒரு அர்த்தமாவது இருக்கும்னேன்.” என்றார். அப்போது நான் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் என்ன? முதல் அமைச்சரே சொன்ன பின்னர் மாற முடியுமா? காமராஜர் சொன்னது போலவே ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களின் பத்துப் பேர்களின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, வாய்க்காலின் தொடக்கத்தில் காவிரிக் கரையில் நிறுவப்பட்டது.

மகாதானபுரம் வி. ராஜாராம்
மகாதானபுரம் வி. ராஜாராம்

அதன் பின்னரே 1959ஆம் ஆண்டு செப்டம்பர் பதினேழாம் தேதி அன்று, அப்போதைய முதல் அமைச்சர் காமராஜரும், பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கன் அவர்களும் நேரில் வந்திருந்து, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலினைத் திறந்து வைத்தார்கள்.” எனக் கூறுகிறார் அந்தக் காலத்தில் அந்தப் பகுதியில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்துள்ள மகாதானபுரம் வி. ராஜாராம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com