வேண்டாமே இந்த பிரசர் குக்கர் வாழ்க்கை..!

ஜூலை 23 உலக மன அழுத்த தனிப்பு தினம்!
வேண்டாமே  இந்த பிரசர்  குக்கர் வாழ்க்கை..!

ள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விட்டது என்று கவலை, ஆபிஸிற்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லையே என கவலை,  EMI கட்ட பணமில்லையே என கவலை, லேப்டாப் மூடாமல் வீட்டை விட்டு வந்துவிட்டமோ  என கவலை இப்படி நாள் முழுவதும் கவலைப் பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். விளைவு இறுதியில் அது சர்க்கரை நோய் தொடங்கி பல்வேறு நோய்களில் நம்மை கொண்டு சேர்க்கிறது.

நாம் கவலை  கொள்ளும் போது, மன பதட்டம் அடையும் பொழுது எல்லாம் "கார்டிசோல்" என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்கிறது. இதுதான் நமது உடலுக்கு வில்லன். அதிகமாக சுரக்கும் இது உடலில் சர்க்கரையை அதிகம் சேர்க்கிறது, உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்க்கிறது.

இது தான் உடலில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர காரணம். கார்டிசோல் அதிகம் உடலில் சுரக்கும் போது அது நம்மை அதிகம் ஜங்க் புட்கள் எடுக்க தூண்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பள்ளிப்பருவத்திலிருந்து முதிய வயது வரை மனிதன் தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் கவலைப் பட்டுக்கொண்டே இருக்கிறான் ஒரு விதமான அழுத்தத்துடனே தினமும் பொழுதை கழிக்கிறான்.  இது ஒரு பிரஷர் குக்கரில் நாம் உட்கார்ந்து இருப்பதற்கு சமம். தேவையா இந்த பிரஷர் குக்கர் வாழ்க்கை. வேண்டாம் திட்டமிட்டு வாழுங்கள், ரிலாக்ஸாக வாழுங்கள்.

உலகில் பலருக்கு உடல் நலக்கோளாறுகள் வரக்காரணமாக இருப்பதில் முதலிடம் வகிக்கிறது மன அழுத்தம். அன்றாட வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் மனஅழுத்தத்தால் பிரச்சினை இல்லை, ஆனால் அதுவே அதிகரிக்கும் போது அது தலைவலி முதல் இதயநோய் வரைக்கும் வர காரணமாகிறது. வேலை நேரத்தில் எழும் மனஅழுத்தம் உங்களின் வாழ்நாளின் ஆயுளை 33 ஆண்டுகள் குறைத்து விடுவதாக ஹார்வார்டு மற்றும் ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், பதட்டம் போன்றவைகளை  தவிர்க்க எளிய வழி முறைகள் உள்ளன அவைகளில் சில ...

மனப்பதட்டங்களை தவிர்க்க நேர நிர்வாகம் முக்கிய பங்காற்றுகிறது. எந்த  வேலை முக்கியம்  எது முக்கியமல்லாதது  என தரம் பிரித்து வேலை பாருங்கள். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க பழகுங்கள். தினசரி, வார, மாத வேலை அட்டவணையை தயார் செய்து அதன்படி வேலைபார்க்க முயலுங்கள். தினமும் இரவில் 20 முதல் 30 நிமிடம் அன்றைய வேலைகள் எதுவும்  செய்ய விட்டு போனதை செய்ய ஒதுக்குங்கள்.

எந்த வேலை செய்வதாக இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு சிறு இடைவெளி விடுங்கள். காரணம், 60-70 நிமிடங்கள் மட்டுமே ஒரு வேலையை நம் மூளை தொடர்ந்து செய்யும் அதன் பின் சோர்ந்து விடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொடர்ந்து வேலை செய்வதை தவிர்த்து பிரேக் எடுத்துக்கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

வேலை நேரத்தில் ஏற்படும் டென்ஷன் மூலம் படபடப்பு குறைய ஒரு நிமிடம் வரை ஆகும். அந்த ஓரு நிமிடம் எதையும் செய்யாமல் மனதை நிதானமான  நிலைக்கு கொண்டு வந்து 5 நொடிகள் ஆழ்ந்து மூச்சை இழுத்து பின் விடும் ,," ஆழ் மூச்சு 'பயிற்சி செய்யுங்கள். டென்ஷன் குறையும் பின் வேலையை தொடருங்கள்.

ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாலே ஒரு வேலையை திறம்பட செய்ய முடியும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதால் நல்லதல்ல என்கிறார்கள் ஸ்டான் போர்டு பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

மன அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில் மனதிற்கு பிடிக்கும் இசையை கேளுங்கள். மனஅழுத்தத்தை சட்டென்று தனிக்கும் ஆற்றல் உடையது இசை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மனதில் உள்ள நம்பிக்கையற்ற எண்ணங்களும் மன அழுத்தம் எற்பட காரணம் அதனை அன்றாடம் செய்யும் உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம் என்கிறார்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நீங்கள் காலை நேரத்தில் செய்யும் 20- 30 நிமிட உடற்பயிற்சி நாள் முழுக்க உங்களை உற்சாக மூடில் வைத்திருக்கும் , மன இறுக்கத்தை தளர்ந்தும், மூளை தடுமாற்றம் ஏற்படாமல் உற்சாகமாக இயங்கி மனஅழுத்தத்தை தவிர்க்கும்.

வேலை, வீடுகளில், வெளியே என எல்லா இடத்திலும் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படும். இதனை தவிர்க்க மனதில் எப்போதும் நல்ல எண்ணங்கள் வளர்ப்பது நல்லது. இது நமது உடலில் நல்ல எனர்ஜியை பரவச்செய்யும் .

எப்போதும் நல்லதே நடக்கும் என்ற நேர் மறை எண்ணம் அநாவசிய மனபதட்டத்தை தவிர்க்க உதவும். எப்போதும் பிரச்சினையுடன் அலையாதிர்கள். அவைகளை நண்பர்கள் அல்லது உங்கள் மீது அக்கறை உள்ளவர் களிடம் மனம் விட்டு பேசி பிரச்சினைகளை சரி செய்யப்பாருங்கள்.

நமது மூளையில் சுரக்கும் ,"செரடோனின்' அளவை பொருத்தே நமது மூடும் இருக்கும். தினசரி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் இந்த "சொரடோனின்' அளவை நிர்ணயிக்கும். இதை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது வைட்டமின் பி உள்ள சிறுதானிய உணவு மற்றும் பயிறு வகைகள். பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்பு. பசலைக்கீரை, புரோக்கோலி, ஒமேகா 3 உள்ள உணவுகள், அஸ்வகந்தா மற்றும் தண்ணீர் விட்டான் கிழக்கு போன்ற மூலிகைகள் நரம்புகளையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்து மனஅழுத்தத்தை வராமல் தடுக்கும்.

நிம்மதியான ஆழ்ந்த அன்றாட தூக்கம் மன அழுத்தம் எற்படுவதை தவிர்க்கும். அன்றாட வாழ்வில் நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப தேவை 7-8 மணி நேர தூக்கம். ஆழ்ந்த தூக்கம் குறைவான மனச்சோர்வை காட்டுவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஒரு நாள் இரவில் நீங்கள் 16 நிமிடம் தூக்கத்தை இழந்தாலே அது மறுநாள் உங்கள் பணியின் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு நாளைக்கு அளவாக செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களை பயன்படுங்கள். காரணம் நீங்கள் எந்தளவுக்கு அவைகளை பயன்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு அது உங்களின் தூக்கம், நினைவுத்திறன், செயல்திறன் போன்றவைகளை பாதித்து உங்களின் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்காவின் கனெக்டிக்கட் ஸ்கூல் ஆப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com