மூளைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

ஜூலை 22 -உலக மூளை தினம்!
மூளைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

லகமே ஜூலை 22ம் தேதியை உலக மூளை தினமாக கொண்டாடுகிறது. ஆனால் நமது உடலின் அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கும் மூளையை  நாம் கண்டுகொள்கிறோமா...? . இல்லை. நமது உடலின் மற்ற உறுப்புகளுக்கு காட்டும் அக்கறையை நாம் மூளைக்கு காட்டுவதே இல்லை. மூளையின் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவும், பயிற்சியும் தேவை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

உலகெங்கும் பலருக்கு இள வயதிலேயே ஞாபக மறதி நோய் ஏற்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதனை தவிர்க்க அன்றாடம் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே  போதும் மூளையின் ஆற்றலை மேம்படுத்தலாம் என்கிறார்கள்.

நினைவாற்றல் குறைபாடு ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் தினறுவார்கள். அதனால் மன அழுத்ததிற்கு உள்ளாவார்கள். இவற்றை தவிர்க்க நமது மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். அதற்கு பயிற்சி தேவை. மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் காலையில் 10 நிமிடங்கள் ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு கடினமான பயிற்சி எல்லாம் வேண்டாம். கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் மென்மையான உடற்பயிற்சியே போதும் என்கிறார்கள். உடலின் நீர்ச்சத்துக்கும் அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினமும் 2 லிட்டர் நீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

மூளையின் ஆற்றலை மேம்படுத்த பச்சைக்காய்கறிகள் நல்ல பலனை தரும் என்கிறார்கள். கீரைகள் உங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது என்கிறார்கள். குறிப்பாக பசலைக்கீரை, கீரைகள் மட்டும் அல்ல ஆரஞ்சு, சிவப்புநிற காய்கறிகள், பழங்கள் புரோக்கோலி, புளூ பெர்ரி,  ஸ்ட்ராபெர்ரி, கருப்பு சாக்லேட் மற்றும் முட்டை போன்ற உணவுகள் மூளையின் ஆற்றலை மேம்படுத்தும் என்கிறார்கள். தினமும் சிறிதளவாவது  கீரை வகைகளை  சேர்த்துக் கொள்வது மூப்பினால்  ஏற்படும் மூளைத்திறன் குறைபாடுகளை தடுக்க உதவும் என்கிறார்கள்.

தினமும் உங்களுக்கு பிடித்த "பொழுதுபோக்குகளில்  சில மணி நேரங்களை செலவிடுங்கள்  அது உங்களை ஞாபக மறதியிலிருந்து காப்பாற்றும் என்கிறார்கள். குறிப்பாக இசைக்கருவிகள் வாசித்தல், செஸ் விளையாடுதல், புத்தகம் வாசித்தல், நடனமாடுதல் இந்த நான்கும் மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் என்கிறார்கள் ஐன்ஸ்டீன் ஸ்டடி சென்டர் ஆராய்ச்சியாளர்கள். நேரடியாக பேப்பர், புத்தகம் படிப்பது, படித்தவற்றை, தனியாக குறிப்பேடுகளில் எழுதுவது மூளையின் திறன் மேம்பாட உதவும் என்கிறார்கள்.

பல் துலக்குவதற்கும்  மூளையின் ஆற்றல் மேம்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தினசரி ஒரு முறையோ அல்லது பல் துலக்காமலே இருப்பவர்களுக்கு 65 சதவீதம் ஞாபக மறதி நோயான டிமென்ஷியா வரும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். வாயினுள் வளரும் பாக்டீரியாக்கள் மூளையின் செயல் நரம்புகளை பாதித்து ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வலியுறுத்துகிறார்கள்.

அதிகளவில் கம்ப்யூட்டர், செல்போன், இண்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துவதால் முடிவுகள் எடுப்பதில் மூளை களைப்புறுகிறது என்கிறார் நரம்பியல் நிபுணர் டேனியல் லெவிட்டின். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டும் இ-மெயில் பாருங்கள், உங்கள் வேலை முடிந்தவுடன் செல்போனை ஸ்சுவிட்ச ஆப் செய்யுங்கள் என்கிறார். தொடர்ந்து எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதால் உங்களின் ஐ. கியூ 10 பாயிண்ட் குறையும் என்கிறார்.

தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்து மூளையை ஒரே புள்ளியில் குவித்து பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் பதிய செல்கள் வளர்ச்சி அடைந்து மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் தினசரி தியானம் செய்வதால் 7 வருடம் உங்கள் மூளை இளமையடைகிறது என்கிறார்கள்.

உங்கள் மூளையின் ஆற்றலை மேம்படுத்த ஆழ்ந்த இரவு நேர தூக்கம் அவசியம். நினைவாற்றல், மன ஒருமைப்பாடு, நல்ல மனநிலை மற்றும் படைப்புத்திறன் போன்றவை நல்ல தூக்கத்தால் வளம் பெறுவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உங்கள் மூளைத்திறன் அதிகரிக்க வேண்டுமா? மதியம் சிறிது நேரமாவது தூங்குங்கள் என்கிறார்கள் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

நாம் சாப்பிடும் உணவுகளுக்கும் உடலில் ஆங்காங்கே வீங்குவதற்கும்  தொடர்பு உண்டு. அதிகப்படியான அசைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கும், குறைந்த அளவு தானிய உணவுகள் சாப்பிடுகிறவர்களுக்கும் மூளையில் செயல் தடுமாற்றம் ஏற்படுவதாக லண்டன் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொஞ்ச நேரம் மூளை சுறுசுறுப்பாக செயல்பட காபி சாப்பிடுங்கள். தினசரி 100 மி கி கப் இரண்டு முறை என்கிறார்கள் ஆஸ்திரியா ஆய்வாளர்கள். நீண்ட நேர மூளை செயல் திறனுக்கு பலமுறை கிரீன் டீ சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஜப்பானிய ஆய்வாளர்கள்.

ரோஸ் பெர்ரி பழத்திலுள்ள சில இரசாயனங்கள் மூளை ஆற்றலை மேம்படுத்துவதை  நர்தம்பர்யா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மூளையின் வளர்ச்சிக்கும் அதன் நரம்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும் வைட்டமின் "டி" மிகவும் அவசியம். இதன் குறைபாட்டால் ஞாபக மறதி, மன அழுத்தம், மள பதட்டம் என பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் 10 நிமிடங்களாவது சூரிய ஒளி படும் படி உலாவ வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com