பணப்பசி தீரா பேய்கள்!

பணப்பசி தீரா பேய்கள்!

கல்கி களஞ்சியத்திலிருந்து...

முன்பெல்லாம் புராணக் கதைகள் படிக்கிறபோது இவை எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று ஒதுக்கி விடுவேன். ஆனால் இப்போது அவை உண்மைதான் என்று நினைக்கிறேன். திருவிளையாடல் புராணத்தில் மீனாட்சி திருமணக் கதையில் சிவபெருமான் பூத கணங்களில் குண்டோதரன் அன்னமாமலையை விழுங்கிவிட்டு வைகை ஆறு  முழுவதையும் குடித்தும் பசி அடங்காமல் அலைவான்.  அது குழந்தைத்தனமான கற்பனைக் கதை என்று நினைத்திருந்தேன். இப்போது ஒரு சிலர் நிஜமாகவே மலைகளைத் தின்று நதிகளைக் குடித்து ஏரிகளையும் கண்மாய்களையும் காலி செய்த பின்னும் பசி அடங்காமல் இருக்கிறார்கள்.

பொக்லைனரின் ராட்சசக் கைகளால் ஆற்றுமணலை அள்ளி லாரி லாரியாகச் சாப்பிட்டும் பணப் பசி தீராமல் பேயாய் அலைகிறார்கள். கிரானைட் சோன்பப்டிகளும் கருங்கல் ஜல்லி மிச்சரும் கபளீகரம் செய்கிறார்கள்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் என்கிற பூமி குமாரன் எவ்வளவு கண்ணீர் பாய்ச்சியும் நம் தலைவர்கள் மனத்தில் ஒரு பூ கூட பூக்கவில்லை? அவர் ஒருமுறை சொன்னார்: “மதுரையைச் சுற்றி இருந்த ஏழு பெரிய நீர் சேமிப்பு ஏற்பாடுகளையும், ஒவ்வொரு அரசும் அழித்து வந்திருக்கிறது. பெரிய பெரிய ஏரிகளில் நீர் இருந்தால்தானே ஊர் முழுவதும் நிலத்தடி நீர் ஊறிவரும்.  மதுரை பெரியார் மற்றும் வெளியூர் பஸ் நிலையங்கள் இப்படி எது கட்ட நினைத்தாலும் ஏரிகளை மடி வற்றச் செய்து  கட்டி இருக்கிறோம். இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க மதுரை ஹைகோர்ட்டில் ஒரு வழக்குப் போடப் போனால்,  ஐயோ அதுவும் கூட ஒரு கடந்த கால ஏரி புதைக்கப்பட்ட கல்லறை.”

இயற்கையின் மீது நமக்கு ஏன் இத்தனை பகை,  இவ்வளவு கோபம்? இங்கிருந்த சதுப்பு நில நீர்ச் சகதிகள் விதம் விதமான வெளிநாட்டுப் பறவைகளின் விருந்தினர் விடுதியாக இருந்தன. அந்த அழகிய பூமியில் குப்பை கொட்டி உள்நாட்டுக் கொசுக்களின் குடியிருப்பாக்கி இருக்கிறார்கள். இத்தனை அழகான பூமி மனிதனுக்குக் கிடைக்க எத்தனை இலட்சம் வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது என்பதை மனிதர்கள் ஏன் மறந்து போனார்கள்? நதிகளையும் நிலத்தடி நீரையும் இப்படி நாசமாக்கினால் குடிநீருக்குப் போவதெங்கே? ரேஷன் கடைகளில் இனி குடும்பத்துக்கு ஐந்து லிட்டர் குடிநீர் மாதத்துக்குக் கொடுக்கப் போகிறார்கள். அதையும் நம் ஜனங்கள் சவங்களைப் போல காத்துக் கிடந்து வாங்கத்தான் போகிறார்கள்.

ஒவ்வொரு சிற்றூர் பேரூரிலும் இருக்கும் குளம், குட்டைகள், நீர்ப்பிடிப்புப் பரப்பு, மேய்ச்சல் மேடுகள் ஆகிய புனிதப் பிரதேசங்கள் மீது  காமவெறியுடன் கண் வைத்துக் காத்திருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சக்திமிக்க நபர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து இந்தக் கன்னிகழியாத நிலச் சிறுமியைக் காப்பாற்றுவது எப்படி? இவர்களுக்குப் போட்டியாக இன்னொரு பக்கம் பக்தியின் பெயரால் நடக்கும் பெரும்பிழை வேறு.

ஆம் பச்சை, சிவப்பு, கறுப்பு, நீலம், காவி என்று ஒரே வண்ணத்தில் ஆடை கட்டிக்கொண்டு,  பஸ், லாரி, டெம்போ, கார், வேன் என்று கிடைத்த வாகனங்களை நிரப்பிக்கொண்டு படை எடுப்புக்குப் போகிற மாதிரி  அலையும் பக்த மகா ஜனங்கள் செய்யும் இயற்கைப் பேரழிவு தாங்க முடியாதடா சாமி! இயற்கை ஆர்வலர் சந்தானம் என்னும் என் நண்பர் சொன்னார்: “இவர்கள் விதவிதமான நிறங்களில் உடை உடுத்திக்கொண்டு உலா போகட்டும். ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தில் ஆண்டவனல்லவா தன் ஆடைகளை இழந்து நிர்வாணமாகி அவஸ்தைப்படுகிறார்?

அங்கங்கே தின்றுவிட்டு இவர்கள் எறியும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்; ஸ்பூன், பைகள் பூமிக்கு எத்தனை பெரிய கேடு? நகரங்களும் நாகரிகங்களும் உருவான நதிக்கரை ஓரங்களை எல்லாம் திறந்தவெளி மலசலக் கூடங்களாக்கி, பன்றி வளர்ப்புப் பண்ணைகளாக்கி, நோய் பெருக்கும் நுண்ணுயிரிகள் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவித்திருக்கும் யாத்திரை பக்தி மறு பரிசீலனைக்கு உரியது. பக்திக்கு நான் எதிரி அல்ல. பக்தியின் பெயரால் இயற்கையை அழிக்கும் மனித அறியாமைக்கே என் எதிர்ப்பு. அந்தோ.. திருவண்ணாமலை தன் ஆழமான ரமண மௌனத்தை இழந்து ராட்சஸக் கூச்சலில் துன்புறுவதைப் பார்த்து நீங்கள் யாரும் பரிதாபப் படவில்லையா?

-சுகி.சிவம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com