பண்பில் உயர்ந்தவர்; வண்ணங்களில் கரைந்தவர்..!

பண்பில் உயர்ந்தவர்; வண்ணங்களில் கரைந்தவர்..!

-ஓவியர் தமிழ்

மாருதி என்ற பெயரை கேட்ட உடனே மனதில் அழகான பெண் வந்து அமர்ந்து கொள்கிறாள். பேசும் விழியுடன் சிரிக்கும் பெண்ணின் கூந்தலில் இருக்கின்ற மல்லிகையும் வாசம் வீசும். கழுத்தில் தொங்கும்  தங்கத்தை தொட்டுப் பார்க்கத் தூண்டும். ஒரு ஓவியம் இத்தனை ஈர்ப்பை ஏற்படுத்த முடியுமா? முடியும் என தூரிகையால் நிரூபித்து சாதித்தவர் வெ. ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட மாருதி  அவர்கள். மாருதி என்ற பெயரை தவிர்த்துவிட்டு ஓவியத்தின் வரலாற்றை எழுத முடியாது.

1966 முதல் பத்திரிகைகளில், போஸ்டர் கலர், வாட்டர் கலர்  எனத் தொடங்கி சமீபத்திய காலம் வரை வரைந்து கொண்டிருந்தவர். கம்ப்யூட்டரிலும்,
AI ஓவியங்கள் எனவும் பல மாற்றங்கள் வந்தபிறகும் இன்றுவரை வண்ணங்களை குழைத்து ஓவியம் வரைவதை மாருதி  அவர்கள் கை விட்டதில்லை. ஒரு அட்டைப்படம் வரைவதற்கு முன்பாக அதன் மாதிரி ஓவியத்தை தனியாக வரைந்து வைத்துக் கொண்டு பிறகு அசல் ஓவியத்தை வரைவதும்… மிகப்பெரிதாக வரைந்து பிரிண்டிங்கில் சிரிதாக்குவதும் வழக்கம். ஆனால் நாம் பார்க்கும்  ஓவியத்தின் அளவிலேயே ஓவியத்தைக் கச்சிதமாக வரைவதும், 
அதிலும் நுணுக்கத்தை காட்டுவதிலும் மாருதிக்கு இணையாக எவரும் இல்லை.

சகஓவியர்களை பாராட்டுவதிலும்.அவர்களை அரவணைப்பதிலும் மாருதியின் மனது மிகப் பெரியது. அவரை சந்திப்பதையும் அவரோடு பேசுவதை யும், தயக்கத்தோடும், கூச்சத்தோடும் நான் தவிர்த்துக் கொண்டிருந்தபோது, 
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஐயா பற்றி நான் கூறியதை பார்த்து மகிழ்ந்தவர். “ஓவியர் தமிழை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்” 
என்று நண்பர்கள் மூலமாக அழைப்புவிடுத்து என்னைச்  சந்தித்தார். அன்று, அவரின்  மனதின் விசாலமும், பேரன்பும் கண்டு வியந்து நின்றேன்.

அவரைவிட சிறப்பாக வரைந்து அவரை மிஞ்ச வேண்டும் என்று எனக்கு அவ்வப்போது தோன்றியது உண்மைதான். ஆனால்,மாருதியின் ஒரிஜினல் ஓவியங்களை கையில்  வாங்கி  பார்த்த பிறகுதான் தெரிந்தது. அவரின் 
உயரமும் அவரின் உழைப்பும் அவரின் திறமைக்கு முன் நாம் எதுவும்  இல்லை என்ற உண்மையும். அவர் ஓவியங்களைப்  பின் தொடர்ந்து 
வந்தவர்கள் எண்ணற்றபேர். அதில் நானும்  ஒருவன். ஆனால் இன்றும், என்றும்  அவர் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்பதுதான் நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com