ஓட்டுரிமை கேட்டு போராடிய இந்திய இளவரசி!

ஓட்டுரிமை கேட்டு போராடிய இந்திய இளவரசி!

“ஓட்டுரிமை  இல்லை என்றால் வரி கட்ட மாட்டோம்’’

இப்படி முழங்கியவர் ஒர் இந்திய இளவரசி.

இங்கல்ல, பிரிட்டனில்…

பஞ்சாபின் கடைசி சீக்கிய பேரரசரான சர் துலீப் சிங்கின் மகளான சோஃபியா துலீப் சிங் தான் அந்த இளவரசி.

அனிதா ஆனந்த் எழுதியுள்ள, சோஃபியாவின் வாழ்க்கை பற்றிய நூலிலிருந்து  அவரைப் பற்றி பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

1910 ல், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளு மன்றத்தை  நோக்கி பெண்களுக்கு வாக்குரிமை வேண்டி நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்ற 300 பேருக்குத் தலைமை தாங்கியவர்  இளவரசி சோஃபியா.

அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஹெச்.ஹெச். அஸ்கித்தை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கையை முன் வைப்பதற்காக அந்த பேரணி நடைபெற்றது.

நாடாளுமன்றத்துக்கு முன் கூடியிருந்த பெண்கள் மீது பிரிட்டிஷ் போலீசார் நடத்திய தாக்குதலில், பலர் படுகாயம் அடைந்தனர். கைதானவர்களில் சோஃபியாவும் ஒருவர்.

சோஃபியாவின் தந்தை துலீப் சிங் 1849 இல், தன் சிறுவயதிலேயே, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது சீக்கிய ராஜ்ஜியம், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டதுடன், தண்டனை ஒப்பந்தத்தின்படி, விலைமதிப்பற்ற கோஹினூர் வைரமும் அப்போது பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரிட்டனில், 1876 இல் துலீப் சிங் பம்பா முல்லரை மணந்தார். அவர்களது  ஆறு குழந்தைகளில், ஐந்தாவதாகப் பிறந்தவர்  சோஃபியா.

பிரிட்டனின் சஃபோல்க் பகுதியில் தமது குடும்பத்தினருக்கு இருந்த வீட்டில் சோஃபியா வளர்ந்தார்.

தன் நாட்டைத் திரும்பப் பெறும்முயற்சியில் ஈடுபட்டதால், ஆங்கிலேய அரசு, துலீப் சிங்கை ஃப்ரான்ஸ் நாட்டுக்கு நாடு கடத்தியது.

குடும்பத்தை அவர் துறக்க வேண்டியதாயிற்று.

ஆனால், துலீப் சிங் குடும்பத்தினருக்கு விக்டோரியா மகாராணியுடன் இருந்த நெருங்கிய தொடர்பு, காரணமாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு துறையாக இருந்து வந்த India Office மூலம் வீடு மற்றும் நிதியுதவி கிடைத்து வந்தது.

இந்திய பெண்ணாக பிரிட்டனில் வாழ்வதில் தமக்கு இருக்கும் தெளிவற்ற நிலையை உணர்ந்திருந்தார் சோஃபியா. வரலாற்று ஆசிரியரான எலிசபெத் பேக்கர்.’The British Women's Suffrage Campaign’ என்ற தமது புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

சோஃபியா சுமார் நான்கு முறை இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார்

1906-07 ஆம் ஆண்டுவாக்கில், தமது இந்திய பயணத்தின் போது கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜ்பதி ராய் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களை சோஃபியா லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சந்தித்துப் பேசியிருக்கிறார். சுதந்திர வேட்கையை தூண்டும் அவர்களின் பேச்சுக்களால் சோஃபியா பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

1908 இல் பிரிட்டனுக்கு திரும்பிய சோஃபியா பெண்களுக்கு வாக்குரிமை கோரி போராடி வந்த அமைப்பான ‘பெண்கள் சமூக மற்றும் அரசியல் சங்கத்தில்’ இணைந்தார்.

 ‘வாக்கு இல்லை என்றால் வரி இல்லை’ என்று மும்முரமாக இயங்கி வந்த ‘பெண்கள் வரி எதிர்ப்பு சங்கத்திலும்’ இணைந்து மிகவும் வீரியத்துடன் செயலாற்றி வந்தார் சோஃபியா. அத்துடன் அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்யாததுடன், வரி செலுத்தவும் மறுத்துவிட்டார் இளவரசி சோஃபியா. வரிக்கு பதிலாக இவரது நகைகளை அரசு ஏலம் விட்டது.

1918ல், சில நிபந்தனைகளுடன், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்தது பிரிட்டன் அரசு.

1919ல், பிரிட்டனில் சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடன், இணைந்து பெண்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார்.

முதல் உலகப் போரில் காயமடைந்த இந்திய வீரர்களுக்காக பிரிட்டனில் நிதி திரட்டி உதவி செய்தார் சோஃபியா.

1924ல் அவர் பஞ்சாப் வந்த போது, தன் சகோதரி பம்பாவுடன் பயணம் செய்தார். அப்போது மக்கள் அவர்களைக் கண்டு “எங்கள் இளவரசிகள் இதோ” என்று ஆரவாரம் செய்தார்களாம்.

1948 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, இந்த புரட்சி இளவரசி, மறைந்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com