ஆறு மனமே ஆறு!

ஆறு மனமே ஆறு!

‘இத்தனை வயசாச்சே, கொஞ்சமாவது மன முதிர்ச்சியுடன் பேசுறியா?’ என சிலரைப் பார்த்து கேட்பதுண்டு. ஆனால், வயதுக்கும் மன முதிர்ச்சிக்கும் துளிகூட தொடர்பில்லை.

ஒருவரின் சூழ்நிலை, அவர் வளர்ந்த விதம், இடம், அவர் பழகிய மனிதர்கள், எதிர்கொண்ட சவால்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்தான் ஒருவரின் முதிர்ச்சியை தீர்மானம் செய்கின்றன. சிலர் சிறு வயதிலேயே மன முதிர்ச்சியுடன் காணப்படுவார்கள். ஆனால், சிலருக்கு அதிக வயதானாலும் முதிர்ச்சியின் அளவு குறைவாகவே இருக்கும். ஒருவர் முதிர்ச்சியடைந்த மனிதராக மாறுவதற்கான 6 வழிமுறைகள் குறித்துக் காண்போம்.

1. உங்கள் மகிழ்ச்சிக்காக மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள்: நம்முடைய மகிழ்ச்சிக்காக என்றுமே நாம் பிறரை சார்ந்திருக்கக் கூடாது. நான் நினைப்பது நடந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். இந்த குறிப்பிட்ட பொருள் கிடைத்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த நபர் என்னிடம் இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தால், இறுதியில் நீங்கள் நினைத்தது நடக்காதபோது வருத்தமே உங்களிடம் மிஞ்சி இருக்கும். எனவே, உங்களுக்கு உண்மையிலேயே எது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்து, பிறரை சாராமல் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

2. சண்டைகளைத் தவிர்க்கவும்: ஒருவரிடம் ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்குத் தேவையில்லாத வாக்குவாதம், சண்டைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒருவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது சண்டையாகத்தான் மாற வேண்டும் என்ற அவசியமில்லை. அத்தகைய கருத்து வேறுபாட்டின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு, சண்டை போடாமல் விட்டுக்கொடுக்க முடியுமென்றால், விட்டுக்கொடுப்பதே சிறந்தது.

3. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடாது. நாம் நினைத்தபடி ஒரு காரியம் நடக்கவில்லை என்றால், அதை நினைத்து கவலைப்படாமல் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வது நல்லது.

4. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்: உங்களுடைய உணர்ச்சிகளை எப்படி நிர்வகிப்பது, கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்வது அவசியம். உதாரணத்துக்கு, நீங்கள் ஒருவரின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறீர்கள் என்றால், உடனே அதை வெளிப்படுத்தாமல், மனதை ஆசுவாசப்படுத்தி சிந்திக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய கோபத்தினால் ஏற்படும் விளைவுகளை சிந்தித்துப் பார்த்தால் மிகப்பெரிய துன்பத்திலிருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது.

5. மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: தற்போதெல்லாம் மன ஆரோக்கியம் பற்றி யாருக்குமே தெரிவதில்லை. பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், அதிகமாக பணம் வைத்திருந்தும் கவலையில் இருக்கும் பலரை நாம் பார்ப்பதுண்டு. எனவே, நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணத்தை விட மனஆரோக்கியம் மிகவும் முக்கியம். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் உங்களுடைய மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

6. யாரையும் அனுமானம் செய்ய வேண்டாம்: பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது பிறரை தவறாக நாம் அனுமானம் செய்துகொள்வதுதான். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு முடிவை எடுங்கள். ஒரு விஷயத்தைப் பற்றிய உண்மைத்தன்மை தெரியாமல் நீங்களாகவே மனதில் நினைத்துக் கொண்டு அதற்காக ஒரு கதையை உங்கள் மனதுக்குள்ளேயே உருவாக்கிவிட வேண்டாம். குறிப்பாக, மனிதர்களைப் பார்த்த உடனேயே கணிக்கும் மோசமான செயலை விட்டுவிடுங்கள். இத்தகைய தவறான அனுமானங்கள் நல்ல உறவுகளை சேதப்படுத்திவிடும்.

இந்த ஆறு விஷயங்களை நீங்கள் சரியாகக் கடைபிடித்தாலே மன முதிர்ச்சியுடைய நபராக மாறிவிடலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com