பூமியை சிறுகச் சிறுக அழிக்கும் ஏசி!
வெயில் காலம் மட்டுமல்ல, குளிர்காலம், மழைக் காலங்களிலும் கூட ஏ.சி. பயன்பட்டை நிறைய பேர் விடுவதில்லை. பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏசிக்கள் உள்ளன. ஆனால், அதீத ஏ.சி. பயன்பாடு, உலக உருண்டையை மேலும் வெப்பமடையச் செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சுட்டெரிக்கும் வெயிலில் நமது இல்லங்கள் வெப்பக் கூடாரமாக மாறிவிடுகின்றன. இந்த வெப்பத்தைத் தணிக்க மின் விசிறிகள் போதவில்லைதான். அதனால், குளிர் பிரதேசமாக நமது இல்லங்களை மாற்ற எண்ணி ஏ.சி.யை 16ல் வைத்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
2023ம் ஆண்டு ஜூலை மாதம், உலக வரலாற்றிலேயே அதிக வெப்பத்தைக் கண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. உலகின் மொத்த மின் பயன்பாட்டில் 10 சதவிகிதம் ஏ.சி. மற்றும் மின் விசிறி பயன்பாட்டுக்கு மட்டுமே செலவாகி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அமெரிக்கா, ஜப்பானின் 90 சதவிகித இல்லங்களில் ஏ.சி. உள்ளனவாம். புதைவடிவ எரிபொருட்கள் மூலம் இயங்கும் ஏ.சி.க்களிலிருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களால் உலகம் வெப்பமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உட்புறங்களை குளிர்விக்க, வெளியுலகை வெப்பமடையச் செய்து, குளிர்விப்பதற்கான தேவையை மேலும் மேலும் அதிகரிக்கிறோம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதற்கு சில மாற்று வழிகளும், உட்கட்டமைப்பு பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன. வட ஆப்பிரிக்க நாடுகளில் கட்டடங்களில் wind catchers என்ற கட்டுமான முறை உள்ளது. அதன் மூலம் குளிர்ந்த காற்றை உள்ளே வரச் செய்து, வெப்பக் காற்றை வெளியேற்றலாம் எனக் கூறப்படுகிறது. ஏன் அங்கெல்லாம் செல்ல வேண்டும், நம்முடைய அந்தக் கால முற்றம் வைத்த வீடுகளில் மின்விசிறி இல்லாமல் வாழ்ந்த நம் தாய், தந்தையரைக் கேட்டால்கூட சொல்வார்கள்.
சுண்ணாம்புக் கலவை பூச்சுகளை மேற்கூரையில் பூசுவதன் மூலம் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீடுகளுக்குள் இறங்குவதைத் தவிர்க்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. வீடுகளின் கட்டுமானம் மட்டுமின்றி, 10 மீட்டர் தொலைவுக்கு மரங்கள், செடிகள் வைப்பதும் பலனளிக்கும் என்கின்றனர். சிங்கப்பூரில் தரைத்தளத்திலிருந்து பூமிக்கு அடியில் 25 மீட்டர் தொலைவில் பைப் மூலமாக செலுத்தப்படும் நீரை குளிர்விக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏ.சி. பயன்பாட்டைவிட 50 சதவிகிதம் எரிசக்தி, காற்று மாசு தவிர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வெயிலை சமாளிக்க உடனடி தீர்வாக ஏ.சி.யைக் கருதினாலும், அது நம் உலகுக்கு என்ன செய்கிறது என்பதையும் உணர வேண்டியுள்ளது. மாற்று வழிகளை நோக்கி நகரவும் வேண்டியுள்ளது.