வீட்டை சுத்தம் செய்யப்போறீங்களா? முதல்ல இதை கவனிங்க!

வீட்டை சுத்தம் செய்யப்போறீங்களா? முதல்ல இதை கவனிங்க!

ருஷத்துல இரண்டு மாதங்களை ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி வீடுகளை சுத்தம் செய்யும் பணிக்காக ஒதுக்கி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். அவரவரின் வழிபாட்டுக்கு உகந்த தெய்வங்களின் மாதங்களைத் தேர்ந்தெடுத்து சுத்தம் செய்வது வழக்கம். நடுவில் பண்டிகைகள் முன்னிட்டும் வீடுகள் சுத்தமாகும். இதோ புரட்டாசி வந்தாச்சு. பெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்யத் துவங்கியிருப்பார்கள். தினமும் அவரவர் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால், இன்றைய அவசர சூழலில் பெரும்பாலானவர்கள் இந்த மாதங்களில் மட்டுமே தங்கள் வீட்டை தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு சுத்தம் செய்வது பழக்கமாகிவிட்டது. சேர்ந்திருக்கும் ஆடைகள், பாத்திரங்கள், காகிதங்கள், பரிசுப்பொருள்கள் என வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குவதில் இந்த சுத்தம் செய்தலின் முக்கிய அம்சமாகிறது.

சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் சுத்தம் செய்ய எளிய அனுபவ டிப்ஸ் ஆகியவை உங்களுக்காக இந்தப் பதிவில்.

முதலில் வீட்டை சுத்தம் செய்யும் முன்பு நமக்குத் தேவையான அத்தியாவசியமானவற்றை பீரோ சாவி, ஆவணங்கள், அசால்ட்டாக கழற்றி வைத்த கொலுசு, கம்மல், போன்ற சிறிய ஆபரணங்கள் போன்றவற்றை மிகவும் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டியது முக்கியம். சிலர் வெகு ரகசியம் என்று எண்ணி ஏதாவது ஒரு பொருளை ரகசியமாக வைத்துவிட்டு பின் எங்கே வைத்தோம் என்பது தெரியாமல் அல்லாடுவது உண்டு. அதைத் தவிர்க்க நாம் வைத்த இடத்தை நீங்கள் எப்போதும் உபயோகிக்கும் டைரி அல்லது மொபைலில் குறித்து வைத்துக்கொள்வது சிறப்பு.

தரைகள், ஜன்னல் கம்பிகளை துடைக்கும்போது சோப்புத்தூளுடன் எலுமிச்சையும் கலந்து துடைத்தால் சுத்தமாகவும் மணத்துடனும் இருக்கும். எப்போதுமே இதை துடைக்கும்போது செய்யலாம். எண்ணெய் பாத்திரங்கள் பிசுக்குகள் போக சுடுநீரில் சோடா உப்பு பயன்படுத்தி அதில் எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்கள் ஊற வைத்து பின் துலக்குவது நல்லது. கறைகளும் அகலும். நமக்குத் தேவையான துணிகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மற்ற துணிகளை தரம் வாரியாகப் பிரித்து ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் தேவைப்படும் பிறர்க்கு கொடுக்கலாம். முக்கியமான விஷயம், ஒரே நாளில் அனைத்தையும் செய்து களைப்பாகாமல் தினம் ஒன்று ஒன்றாகப் பிரித்துக் கொண்டால் உடலுக்கும் நல்லது. பொருள்களுக்கும் நல்லது.

மின்சார ஸ்விட்ச் போர்டுகளை துடைக்கும்போது மிகவும் கவனம் தேவை. ஈரத்துணி வைத்து துடைப்பது ஆபத்தானது. ஏனெனில் ஈரத்தில் மின்சாரம் பாயும் அபாயம் உண்டு. அதேபோல், கண்ணாடி பாத்திரங்கள், கதவுகளைத் துடைக்கும்போது கவனம் தேவை. சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் குழந்தைகளை வேறு எங்காவது அனுப்பிவிட்டு அல்லது மற்றவர் பாதுகாப்பில் விட்டுவிட்டு இந்த வேலைகளை செய்வது நல்லது. அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக முகத்தில் மாஸ்க் அணிவது உத்தமம்.

இன்றைய நாளில் நாம் அதிகம் வாங்கி பயன்படுத்தாமல் விடுவது மின்சார சாதனங்களைத்தான். பயன்பாட்டில் இல்லாத மின்சார சாதனங்களை தயவுசெய்து இப்போதே எடைக்குப் போடுவது நல்லது. ஏனெனில், நாளாக நாளாக அது இடத்தையும் அடைத்துக்கொள்ளும் மதிப்பற்று குப்பைக்கும் செல்லும். தையல் மிஷின் போன்றவை பயனற்று இருக்கும்போது அவை இடத்தை அடைக்காமல் இருக்க, அது தேவைப்படும் யாரோ ஒருவருக்கு மலிவு விலையிலோ அல்லது இலவசமாகவோ கொடுத்தால் உங்களுக்கு புண்ணியமும் சேரும். வீட்டில் குப்பையும் அண்டாது.

புகைப்படங்களை, ‘காலத்தின் கண்ணாடி’ என்போம். அந்தப் புகைப்படங்களை வீட்டை சுத்தம் செய்யும்போது தனியே ஒரு பெட்டியில் காகிதம் சுற்றி பாதுகாத்து வைப்பது நல்லது. மேலும், அதில் பூச்சி உருண்டைகள் போட்டு வைத்தால் இன்னும் நல்லது. நீங்கள் கிராஃப்ட் பிரியராக இருந்தால் நீங்கள் சேர்த்துவைத்து இருக்கும் கலைப் பொருட்களை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.

சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. அதை அனுபவித்து செய்யும்போது அதிலுள்ள களைப்பு நமக்குத் தெரியாது. சுத்தம் செய்யும்போது காணாமல் தேடும் பொருள்கள் கிடைக்கும்போது அலுப்பையும் மீறி கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும். அது மட்டுமல்ல, நம் வீட்டில் இத்தனைப் பொருட்கள் இருக்கிறதா? என்பதே நமக்கு தனியான உற்சாகத்தையும் எனர்ஜியையும் தரும். ஆனால், அது தேவையா தேவையற்றதா என்பதை முடிவு செய்வதிலேயே நமது வீடு இன்னும் அழகாகும் என்பதை கவனத்தில் கொண்டு, வீடுகளை சுத்தம் செய்வது நன்மையைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com