
பொதுவாகவே தேன் என்பது சுவையானது மற்றும் ஆரோக்கியமானது என்பது நமக்குத் தெரியும். அத்தகைய தேனில் நட்ஸ் ஊறவைத்து சாப்பிடுவதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்படிச் சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
‘நட்ஸ் எனப்படும் சத்துள்ள பருப்பு வகைகளை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் ஊட்டச்சத்து விகிதம் அதிகரிக்கும்’ என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவர் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை பராமரிக்க தினமும் சிறிதளவு தேனில் ஊறவைத்த நட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிஸ்தா, பாதாம், உலர் திராட்சை, வால்நட் போன்றவற்றில் தனித்துவமான நன்மைகள் நிறைந்துள்ளன.
இத்தகைய நட்ஸ் வகைகளில் வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளள. அதேசமயம், தேனில் இயற்கையான இனிப்பு சுவை நிறைந்துள்ளதால் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்விரண்டையும் சாப்பிடும்போது நன்மைகள் ஏராளம்.
மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்: தேனில் ஊற வைத்த நட்ஸ் சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, மூளை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும். இவற்றில் இருக்கும் விட்டமின் E மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மூளையை விழிப்புணர்வுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேன் சிறந்த மருந்தாகும். உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த விரும்பினால், தேனில் ஊற வைத்த நட்ஸ் சாப்பிடலாம். இதில் அதிகம் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை விட்டமின் பி, பி2 மற்றும் துத்தநாகத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
உடல் எடையை பராமரிக்கும்: தேன் சாப்பிடுவது பசி ஆர்வத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும். இந்த நட்ஸில் குறைந்த கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைப்பதற்கு ஏற்றதாகும். இதை நாம் தினசரி சாப்பிடும் ஸ்நாக்ஸ்சுக்கு பதிலாகச் சாப்பிடலாம்.
செரிமானத்துக்கு உதவும்: நட்ஸ் வகைகளை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அது ஜீரணத்தை எளிதாக்கும். வெறும் நட்ஸ்களை சாப்பிடும்போது, அதிலுள்ள சேர்மக் கலவையால் அவை ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும். இதுவே, அவற்றை தேனில் ஊற வைத்து சாப்பிடும்போது எளிதில் செரித்துவிடும்.
பளபளக்கும் சருமம் பெறலாம்: சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி, நல்ல அழகைப் பெற இன்றிலிருந்து தேனில் ஊற வைத்த நட்ஸ் வகைகளை சாப்பிடுங்கள். இவை சருமத்தில் உள்ள செல்களை திடப்படுத்தி கரும் புள்ளிகள், சுருக்கங்கள், பருக்கள் போன்றவற்றை தடுக்கிறது. இதில் விட்டமின் E சத்து நிறைந்திருப்பதால் நல்ல பளபளப்பான சருமமும் கிடைக்கும்.