இணையத்தின் தரவுகளை சற்று அலசிப்பார்த்தால், அதில் மக்கள் அதிகமாகத் தேடுவது உடல் எடை சார்ந்த விஷயங்கள்தான். ஏனென்றால், தற்போதைய நவீன உலகில் மோசமான உணவுப் பழக்கங்களால் உடல் எடை வேகமாகக் கூடிவிடுகிறது. உடல் எடை கூடிய பிறகுதான் அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வருகிறது. அதற்காக காய்கறி ஜூஸ் குடிப்பது பிரதானமாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே காய்கறி ஜூஸ் குடிப்பது உடல் எடை குறைப்புக்கு உதவுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலே அதற்கு முதலாவதாகச் சொல்வது காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள் மற்றும் காய்கறி ஜூஸ் குடியுங்கள் என்பதுதான். அப்படிப் பார்த்தால், நெல்லிக்காய், வாழைத்தண்டு, வெள்ளை பூசணி ஜூஸ் குடிக்க ஏற்றவை. இவற்றை தினசரி குடிக்காமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக்கொள்வது நல்லது.
இதிலும் குறிப்பாக, வாழைத்தண்டு ஜூஸ் உடல் எடை குறைப்புக்கு மிகவும் நல்லதாகும். வாழைத்தண்டை முதலில் பொடியாக நறுக்கி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். வாழைத்தண்டிலேயே அதிகம் நீர் இருக்கும் என்பதால், இதில் கூடுதலாக அதிக நீர் சேர்க்க வேண்டியது இல்லை. அரைத்த இந்த ஜூஸில் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு, சீரகம் சேர்த்து குடித்தால் உடலுக்கு நல்லது.
அதேபோல, வெள்ளை பூசணி ஜூஸும் உடல் எடை குறைப்புக்கு உகந்ததாகும். இவற்றை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இதை குடித்த அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எந்த உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், சுரைக்காயை ஜூஸ் போட்டு குடிப்பதைத் தவிர்க்கவும். சுரைக்காயில் உள்ள கசப்புத்தன்மை வயிற்றுக் குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அடுத்ததாக, புதினா, கொத்தமல்லி, நெல்லிக்காய் சேர்த்து அரைத்த ஜூஸ் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. காய்கறி ஜூஸ் உடலுக்கு நல்லது என்ற கோணத்தில் எண்ணி எல்லா காய்கறிகளையும் ஜூஸ் போட்டு குடிக்கக்கூடாது. மேலே குறிப்பிட்ட காய்கறிகளை மட்டும் ஜூஸ் போட்டு குடித்துப்பார்த்து உங்கள் உடல் அதை ஏற்றுக்கொள்கிறதா என்பதை கவனியுங்கள். இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனில் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
இத்துடன், உடல் எடை குறைப்புக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களையும் பின்பற்றினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.