நீரிழப்பின் அறிகுறியும் நிவாரணமும்!
ஒருவர் உட்கொள்ளும் நீரின் அளவை விட, அவரது உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கும்போது அவர் நீரிழப்பு பிரச்னைக்கு ஆளாகிறார். இதனைத் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியம். ஒருசில அறிகுறிகள் மூலம் நீரிழப்பு பிரச்னை ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நீரிழப்புக்கான அறிகுறிகள்: உதடுகள் வறண்டு இறுக்கமாக இருக்கும் அல்லது உதட்டில் விரிசல், வெடிப்பு ஏற்படும். உதட்டில் எரிச்சல் உணர்வு, தோல் உரிவது, சிவப்பு நிறத்துக்கு மாறுவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சருமம் பொலிவிழக்கும். சருமத்தின் நிறமும் மாறத் தொடங்கும். மந்தமான உணர்வு எட்டிப் பார்க்கும். உதடுகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சருமத்திலும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். மேலும், உடலில் காயம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அது குணமாவதற்கு கால தாமதமாகும்.
நீரிழப்பை தடுக்கும் வழிமுறைகள்: நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீர் இழப்பை தடுக்க உதவும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதற்கான நினைவூட்டல்களை செல்போனில் கூட பதிவு செய்து வைக்கலாம். தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு, கீரை உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நலம். ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.
உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வெண்ணைய், தேங்காய் எண்ணெய் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான நீர் கொண்டு சருமத்தை கழுவக் கூடாது. நீரிழப்பு ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல், தலைமுடியை உலர்த்துவதற்கு வெப்பத்தை உமிழும் சாதனங்களை பயன்படுத்துவதும் கூடாது. வெப்ப காலங்களில் உடலை முழுவதுமாக மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். காபின் மற்றும் ஆல்கஹால் இரண்டும் டையூரிட்டிக் விளைவை ஏற்படுத்தும். அவை கலந்த பானங்களை அதிகம் பருகுவது நீர் இழப்புக்கு வழிவகுக்கும்.
வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படும்போது செய்வதறியாத திகைத்துப் போவோம். வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் வீட்டில் உள்ள பெரியவர்களும், நாமும் கூட தங்கள் பிரச்னைகளை மறந்து வெளியில் சொல்லாமல் இருந்து விடுவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் இந்த அறிகுறிகளை வைத்து, அதை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியம் காப்போம்!