நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ இவற்றைச் செய்யுங்கள்!
மனிதர்களாகிய அனைவருக்குமே தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், பலருக்கு அது வெறும் ஆசையாகவே இருப்பதுதான் பிரச்சனை. அதற்கான முயற்சியை யாருமே கையில் எடுப்பதில்லை. அந்த வகையில் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அடைவதற்கு சில விஷயங்களைச் செய்தால் அதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் அதிகரிக்க முடியும்.
இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்: இலக்கில்லா மனிதர்கள், போய்ச் சேருமிடம் தெரியாத வாகனம் போல ஏதோ ஒரு திசையில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் அவர்களுக்கென்று எந்த ஒரு பிடிப்பும் இருக்காது. எனவே, நீங்கள் விரும்பியபடி வாழ்க்கையை மாற்ற விரும்பினால், நீங்கள் எங்கே சென்றடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அந்தப் பாதையில் பயணிப்பதற்கான விஷயங்களைக் கற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்கத் தொடங்குங்கள். குறுகிய இலக்கு, நீண்டகால இலக்கு என உங்களின் பெரிய இலக்கை தனித்தனியாகப் பிரித்து, உங்கள் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்குங்கள்.
மனநிலையை மாற்றுங்கள்: உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் போல நீங்களும் சிந்தித்துக் கொண்டிருந்தால், நீங்களும் பத்தோடு பதினொன்றாகத்தான் இருப்பீர்கள். உங்கள் மனநிலைதான் உங்கள் வாழ்க்கைக்கான அனைத்தையுமே நிர்ணயம் செய்கிறது. நீங்கள் உங்களின் மனநிலையை மாற்றினால் அது உங்களின் வாழ்க்கையை மாற்றும். நாம் எதை மனதில் நினைக்கிறோமோ அதைதான் நம்புகிறோம். எதை முழுமையாக நம்புகிறோமோ அதைதான் செயல்படுத்துகிறோம். இதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் மனநிலையை சிறப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். எல்லா நேரத்திலும் எதிர்மறையாகவே சிந்தித்துக் கொண்டிருந்தால் எதையுமே ஒழுங்காக செய்ய முடியாது. நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்களோ அதற்கேற்ற மனநிலையை ஏற்படுத்திக்கொண்டு தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
உங்களுக்கான சூழலை வடிவமைக்கவும்: நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் அதற்கான சூழலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் நேர்மறையாக இருக்க விரும்பி, உங்களைச் சுற்றி எதிர்மறையான நபர்கள் இருந்தால், உங்களால் ஒருபோதும் நேர்மறையாக சிந்திக்க முடியாது. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அது சார்ந்த நபர்களை உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய சூழல் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு உதவியாக இருக்கும்.
புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்: காலத்துக்கேற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதால் வாழ்க்கையில் மற்றவர்களை விட வேகமாக முன்னேறலாம். உங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ள ஒரு நாளில் சில மணி நேரங்களை நீங்கள் ஒதுக்கினாலே போதும். ஒரு வருட காலம் வரை தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்கினால், அந்த ஒரு வருடம் முடிவில் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு திறனில் சிறப்பாக மாறி இருப்பீர்கள். நீங்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்ள காணொளிகள், புத்தகங்கள், பாட்காஸ்ட் என பல வழிகள் உள்ளன. எதுவாக இருந்தாலும் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட வேண்டாம். கற்றுக்கொள்வது மற்றுமின்றி, அதைப் பயிற்சி செய்வதும் அவசியமானது.
மேற்கூறிய இந்த விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையில் செயல்பட முயற்சித்தாலே, நீங்கள் ஒரு சிறப்பான நபராக மாற முடியும். இதனால் உங்களுக்கு நீங்கள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.